
பாலிவுட் திரைவுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் 54 வயதான நடிகர் சைஃப் அலி கான். நேற்றிரவு அவரது வீட்டில் ஊடுருவிய நபருடன் நடந்த சண்டையின் போது அவரது முதுகுத்தண்டுக்கு அருகில் ஆறு முறை கத்தியால் குத்துப்பட்டார். இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பின் அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பியோடி விட்டான்.
நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட காயங்களில் இருந்து அதிக ரத்தம் வழிந்த நிலையில், அவரது மூத்த மகன் இப்ராஹிம், அவரை ஆட்டோ ரிக்ஷாவில் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இருபத்தி மூன்று வயதான இப்ராஹிம், தற்போது இந்தி படத்தில் நடித்துககொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கார் ரெடியாக நேரம் ஆகும் என்பதால் நேரத்தை இழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த இப்ராஹிம், சைஃப் அலிகானை ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி பாந்த்ரா வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ கானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் கான் ஆட்டோ ரிக்ஷாவின் அருகில் நின்று வீட்டு ஊழியர்களிடம் பேசுவதைக் காட்டுகிறது.
நடிகர் சைஃப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கான் குடும்பத்தினர் இது திருட்டு முயற்சி என்று கூறியுள்ளனர். தாக்குதல் நடத்தியவரை 'ஊடுருவல்' என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் கொள்ளை முயற்சியின் கோணத்தை குறிப்பிடவில்லை.
மிஸ்டர் கானின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் தாக்குதலுக்கு இரண்டு மணி நேரத்திற்குள் யாரும் வளாகத்திற்குள் நுழைய வில்லை என்பதை காட்டுகிறது. அதாவது நடிகரைத் தாக்கியவர் முன்னதாக கட்டிடத்திற்குள் நுழைந்து தாக்குதலுக்கு காத்திருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நடிகரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை அடையாளம் காண போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மும்பையின் ஆடம்பரமான பகுதியில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான தாக்குதலை பார்க்கும் போது மும்பை காவல்துறையின் பாதுகாப்பு உதவி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
தாக்குதல் நடத்தியவர் வீட்டு உதவியாளர்களில் ஒருவருடன் தொடர்புடையவர் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர், மேலும் அவரது உதவியாலேயே மர்ம நபர் நடிகரின் வீட்டிற்குள் நுழைந்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
நடிகர் தாக்கப்பட்ட சம்பவம் மற்ற சினிமா வட்டாரத்தில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. நடிகை பூஜா பட், தான் ஒருபோதும் இவ்வளவு பாதுகாப்பற்றதாக உணர்ந்ததில்லை என்றும், பாந்த்ராவில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்குதலை தொடுத்துள்ளதுடன், பிரபலங்கள் இப்படி தாக்கப்பட்டால், சாதாரண மும்பைவாசிகள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.