விமர்சனம்: CTRL - யார் கட்டுப்பாட்டில் யார்?

CTRL Movie Review
CTRL Movie Review
Published on

இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் நமக்கு அடிமையா? அல்லது அவற்றிற்கு நாம் அடிமையா? இதை வலியுறுத்தும் இன்னொரு படமாக வந்திருப்பது தான் CTRL. அனன்யா பாண்டே நடிப்பில் விக்ரமாதித்ய மோத்வானே இயக்கத்தில் நெட்ப்ளிக்சில் வெளியாகியுள்ள இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் நமது பங்களிப்பு, அதில் வரும் லைக்குகள், கமெண்டுகள், தொடர்பாளர்கள் ஆகியவை நம்மை எந்த அளவு ஆட்டுவிக்கின்றன, அந்தரங்கம் என்ற ஒன்றே அற்றுப் போன நிலையில் இந்தக் கால இளைஞர்கள் செயல்படுவது, குடும்பம், தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பொது வெளியில் பகிர்வதால் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றை விவாதிக்கிறது.

என்ஜாய் என்ற பெயரில் ஒரு யூடியூப் வீடியோ வலைப்பதிவு (VLOG) நடத்தி வரும் அனன்யா மற்றும் விஹான் சமத். இவர்கள் காதலர்களும் கூட. ஒரு சமயத்தில் மற்றொரு பெண்ணோடு விஹான் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து விடுகிறார் அனன்யா. எல்லாவற்றையும் நேரடியாகப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் உடைய இவர் இதையும் பகிர்ந்து விட, இருவருக்கிடையே மோதல் உருவாகிறது. தனது பக்கத்தை விளக்க விஹானுக்கு வாய்ப்பே அளிக்காமல் அவரை விட்டு விலகி விடுகிறார் அனன்யா.

மன உளைச்சலில் விடுபட ஒரு செயலியில் செயற்கை நுண்ணறிவுடைய ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதற்கு ஆலன் என்று பெயரிட்டு அதனுடன் பேச ஆரம்பிக்கிறார். தனது வாழ்க்கையை முழுதுமாகச் சொல்லித் தனது காதல் நினைவுகளை முற்றிலுமாக அழிக்கச் சொல்லி விடுகிறார். அந்தப் பாத்திரமும் ஒவ்வொரு முக்கியமான நினைவுகளைக் காட்டி அதை அழிக்கும் முன் அதைப் பற்றி மிக விரிவாகக் கேட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை அழிக்க ஆரம்பிக்கிறது.

இதையும் படியுங்கள்:
மகாத்மா காந்தி இணையத் தொடருக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!
CTRL Movie Review

ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் விஹான் (ஜோ) வாடிக்கையாளர்களின் தரவுகளை முழுதுமாகத் தெரிந்து, அதைப் பகிர்ந்து கொண்டு இருக்கும் விஷயத்தை அறிந்து கொள்கிறான். அதைப் பற்றி அவன் அனன்யாவிடம் (நெல்லா) சொல்ல வரும்போது அவர் கேட்க மறுத்து விடுகிறார். இதன் பின்னர் அவர் காணாமல் போய் விட அவனைத் தேடி திரும்பவும் செல்ல ஆரம்பிக்கிறார் நெல்லா. அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை.

சைபர் திரில்லர் என்ற ஜானரில் வெளியாகியுள்ள இந்தப் படம் பெரும்பாலும் ஒரு கம்பியூட்டர் அல்லது மொபைல் திரையில் பார்ப்பது போலவே படமாக்கப் பட்டுள்ளது. ஒளிப்பதிவும், கிராஃபிக்ஸும் வெகுதரமாக உபயோகப்படுத்தப் பட்டுள்ளன. ஒரு செயலியிடம் (APP) எல்லா விதமான அனுமதியும் கொடுத்து விட்டபிறகு அது என்னென்ன செய்யும் என்பதை பார்க்கும்போது திடுக்கென்று தான் இருக்கிறது. அதுவாக மெசேஜ் அனுப்புவதும், சில மெசேஜ்களை டெலிட் செய்துவிடுவதும் அதன் முழுக் கட்டுப்பாட்டில் நாம் இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. எல்லாம் பாஸ்வேர்டால் கட்டுப்படுத்தப் படும் நிலையில் ஒன்றை மறந்து விட்டால் என்ன விதமான சிக்கல்கள் வரக்கூடும் என அனன்யா பாடுபடும்போது நாம் கேட்டுப் பார்த்துக் கேள்விப்பட்டு அனுபவித்த சைபர் குற்றங்கள் நம் கண் முன்னே வந்து போகின்றன.

பார்வையாளர்களுக்கு நமது வாழ்வில் நடக்கும், சந்தோஷமும், துக்கமும், மரணமும் ஒரு நிகழ்ச்சி மட்டுமே. அதைப் பற்றி அவர்கள் விவாதிப்பதும் அடுத்த நிமிடம் மற்றொன்றைப் பற்றி யோசிப்பதும் மட்டுமே நிஜம். இவர்களை மூலமாகக் கருதினால் நம் இழப்பின் பொழுது யாரும் வரமாட்டார்கள் என உணர்ந்தும் திரும்பவும் அந்த விஷயங்களுக்காகவே நம் ஏங்குவதும் மீண்டும் இணைவதும் இது போன்ற இணைய தளங்கள் நம் மீது செலுத்தும் ஆதிக்கத்தை தெளிவாகக் காட்டியுள்ளார் இயக்குனர்.

இதையும் படியுங்கள்:
சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கிறாரா அதர்வா? எந்தப் படத்தில் தெரியுமா?
CTRL Movie Review

இரண்டே மணி நேரம் ஓடும் படத்தில் பெரும்பான்மையான நேரம் கணினி, மற்றும் மொபைல் போன்றவற்றின் பார்வையில் காட்சிகள் நகர்வதால் ஒரு கட்டத்திற்கு மேல் சின்ன சலிப்பு ஏற்படுகிறது. திரும்பத் திரும்ப வரும் ஒரே மாதிரியான காட்சிகள் படத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கின்றன. பாதிப்புகள் மேம்போக்காக மட்டுமே அலசப்படுவதும். ஒரு வலுவான கிளைமாக்ஸ் இல்லாததும் ஒரு குறை தான். ஆனால் அதன் மூலம் இணையதளங்கள், செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளின் கட்டுப்பாட்டில் தான் மனிதர்கள் இருக்கிறார்களே தவிர அவை நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று தான் சொல்லியிருக்கிறார். அவற்றின் மூலமுள்ள சிலபல நல்ல விஷயங்களைப் பற்றியும் கொஞ்சம் பேசியிருக்கலாம் என்றே தோன்றியது. ஒரு வித்தியாசமா கருவை எடுத்துக் கொண்டதற்காகவும் அனன்யா பாண்டேவின் நடிப்பிற்காகவும் இதைப் பார்க்கலாம். ஒரு குறிப்பிட்ட காட்சியில் எந்த விதமான கவலையுமின்றி செயலிகள், இணைய தளங்கள் ஆகியவற்றின் கண்டிஷன்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்டு நாம் கொடுக்கும் ALLOW என்ற ஒப்புதல் நம்மை, வழக்குகள் என்று வரும்போது நம்மை எங்குக் கொண்டு வந்து நிறுத்தும் என ஒரு வழக்கறிஞர் மிரட்டும்போது சுரீரென்று தைக்கிறது.

எப்படியோ இந்தப் படம் பார்த்தபிறகு அந்த ALLOW என்ற பட்டனை அழுத்தும் முன் ஒரு நொடி யோசித்தால் அது இந்தப் படத்திற்கு கிடைத்த வெற்றி. இந்தியில் வெளியாகியுள்ள இந்தப் படம் தமிழ் டப்பிங்கில் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com