

கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் G.D.N. இந்தியாவின் எடிசன், கோவை சிற்பி என்று அழைக்கப்படும் விஞ்ஞானி ஜி.டி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் G.D.N. இப்படத்தில் இயக்குனருடன் சேர்ந்து மாதவனும் திரைக்கதை எழுதியுள்ளார்.
அது 1985 ஆம் ஆண்டு. துணை வேந்தர் அடங்கிய குழு ஒன்று தமிழ்நாடு பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை வரையறை செய்கிறது. அந்தக் குழுவில் உள்ள ஒரு ஆசிரியர் அந்தப் பாடத்திட்டத்தை ஒத்துக் கொள்ள மறுக்கிறார். காரணம் அந்தப் பாடத் திட்டத்தில் ஜி.டி நாயுடு பற்றி எந்த தகவலும் இல்லை என்பது தான். "ஜி.டி நாயுடு அப்படி என்ன செய்தார்? இறுதிக்காலத்தில் சரியான வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றினார்." இப்படி பல நெகடிவ் விஷயங்களை அந்த குழுவில் உள்ளவர்கள் அந்த ஆசிரிய பெண்மணியிடம் சொல்கிறார்கள். அந்த ஆசிரியர் பெண்மணி ஒரு புத்தகத்தை தந்து ஜி.டி நாயுடுவை பற்றி படியுங்கள் என்று சொல்கிறார். அங்கிருந்து ஜி.டி நாயுடு கதை தொடங்குகிறது.
ஆங்கிலேயர் ஒருவர் ஓட்டும் மோட்டர் சைக்கிளைப் பார்த்து அதை வாங்கி உள்ளே உள்ள மெக்கானிசத்தை தெரிந்து கொள்கிறார் ஜி.டி நாயுடு. பரம்பரையாக பருத்தி விவசாயம் செய்து வருபவர். ஒரு பருத்தி ஆலையில் வேலையும் செய்கிறார். பருத்தியையும், கொட்டையையும் தனியே பிரித்தெடுக்க ஒரு சிறு இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார். அங்கிருந்து அவர் கண்டுபிடிப்பு தொடங்குகிறது. பல்வேறு கண்டுபிடிப்புகளை முயற்சி செய்கிறார். இதனால் அவருக்கு பொருளாதார முடக்கம் ஏற்படுகிறது. அப்போது ஒரு ஆங்கிலேய நண்பர் தன்னிடம் இருக்கும் ஒரு பஸ்ஸை தந்து இதை ஓட்டி நீ இலாபம் சம்பாதித்துக்கொள் என்கிறார். நாயுடு அந்த பேருந்தை லாபகரமாக இயக்கி பல பேருந்துகள் புதிதாக வாங்கி இயக்குகிறார்.
தன்னுடைய கம்பெனிக்கு யு எம் எஸ் (United Motor Service ) என்று பெயர் வைக்கிறார். கோவையை மையமாக வைத்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களுக்கு பேருந்து சேவை செய்து வருகிறார் ஜி.டி நாயுடு. இவர் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் ஒரு ஆங்கிலேய அதிகாரி, இவரை முடக்க வருமான வரி பிரச்னையை கிளப்ப எண்ணுகிறார்.
இதற்காக அம்பலப்பாரா கிருஷ்ணன் என்ற நேர்மையான வருமான வரி அதிகாரியை நாயுடுவின் வருமான வரி கோப்புகளை ஆராயச் சொல்கிறார். கிருஷ்ணனும் ஆராய்ந்து நாயுடு வரி ஏய்ப்பு செய்திருப்பதை கண்டுபிடிக்கிறார். இருந்தாலும் ஜி.டி நாயுடு இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். மேற்கொண்டு எந்த வரியும் செலுத்த முடியாது என்கிறார். அரசு செய்யும் பல்வேறு சூழ்ச்சிகளை தனது திறமையால் எதிர்கொள்கிறார். ஜெர்மன் நாட்டிற்கு சென்று தான் கண்டுபிடித்த ரேசரை பொருட்காட்சிக்கு வைக்க விரும்புகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் இரண்டாம் உலகப் போர் வெடிக்கின்றது. இந்தியாவில் உள்ள ஆங்கிலேய அரசு, ஜி.டி நாயுடு ஹிட்லரின் நாசி கட்சிக்கு ஆதரவானவர்; ஆங்கிலேய அரசுக்கு எதிரானவர் என்று பல்வேறு பிரச்சாரங்கள் செய்கிறது.
இந்த சூழ்நிலையில் நாடும் விடுதலை அடைகிறது சுதந்திரத்திற்கு பின்பும் ஜி.டி நாயுடுவின் வருமான வரி பிரச்னை தீர்ந்த பாடில்லை. ஒரு கட்டத்தில் ஜி.டி நாயுடு மனம் வெந்து தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை மக்கள் முன்வைத்து உடைக்கிறார். வருமான வரி அதிகாரிகள் ஒரு தவறான டாக்குமென்ட்டை தயாரித்து ஜி.டி நாயுடுவின் 80 சதவீத சொத்துக்களை அபகரிக்க எண்ணுகிறார்கள். இறுதியில் வென்றது யார்? நாயுடுவா? வருமான வரி அதிகாரிகளா? என்று இந்த படம் சொல்கிறது.
நியூட்டன் தாமஸ், ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன் என மேல்நாட்டு விஞ்ஞானிகள் பற்றியே தெரிந்து வைத்திருக்கும் நமது இளைய தலைமுறைகள் இடம் நமது மண்ணில் அதுவும் இந்த கோவையில் இப்படி ஒரு விஞ்ஞானி வாழ்ந்தார் அரசும், சமூகமும் எப்படி அவருக்கு அங்கீகாரம் அளிக்க மறுத்தது என்று சொன்னதற்காக இந்த படத்தை பாராட்டலாம்.
இந்த படத்தில் நடித்த, இந்த படத்தில் ஒரு முக்கிய தயாரிப்பாளராக இருக்கும் மாதவனுக்கு ஒரு சல்யூட். மோட்டார் இன்ஜினை பார்த்து அதை வைத்து பல்வேறு சாதனைகளை படைக்க நினைக்கும் ஜி.டி நாயுடு, பஸ் கம்பெனியை லாபகரமாக நடத்தும் விஷயம் போன்ற பல்வேறு அம்சங்கள் படத்தில் நன்றாக கட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக பஸ் கம்பெனியை லாபகரமாக நடத்தும் இடத்தில் ஆங்கிலேயர்கள் அதை வீழ்த்த செய்யும் சூழ்ச்சி சரியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் கல்வியின் தேவையை தீர்க்கதரிசி போல் நாயுடு சொல்லும் இடம் நன்றாக உள்ளது.
விளைவிப்பதற்கு ஒரு வரி அதை உணவாக உருவாக்கி உருவாக்கி சாப்பிடும் போது ஒரு வரி என்று ஆங்கிலேயர்கள் நம் மீது போட்ட வரியை விமர்சனம் செய்யும் இடம் நன்றாக உள்ளது.
எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல நம் மண்ணில் உள்ள மக்களும் ஒரு நல்ல விஞ்ஞானியை எவ்வாறு புறக்கணிக்கிறார்கள் என்று காட்டிய இடம் நன்றாக உள்ளது.
இளம் வயது மாதவன், வயதான மாதவன் இருவரில் வயதான ஜி.டி நாயுடு மாதவன் நடிப்பில் அசத்தியுள்ளார். சூழ்ச்சியால் தான் தோற்கடிக்கும் போது தோற்கடிக்கப்படும் போது அசராமல் எழுந்து நிற்க இடத்தில் சபாஷ் போட வைக்கிறார் மாதவன்.
மனைவியாக நடிக்கும் துஷாரா விஜயன் அமைதியாகவும் கிளைமாக்ஸ்சில் சற்று ஆர்ப்பாட்டமாக நடித்துள்ளார். ஒரு நேர்மையான வருமான வரி அதிகாரியாக வரும் ஜெயராம் நடிப்பில் சிறிது வில்லத்தனம் செய்கிறார். கருணா நடிப்பும் ஓரளவு நன்றாக உள்ளது. சத்யராஜ் மற்றும் ஆங்கிலேய நண்பர் போன்றவர்களும் தனது பங்களிப்பை சரியாக செய்துள்ளார்கள்.
கோவிந்த் வசந்தாவின் இசை அன்றைய காலகட்டத்தை நம் கண்ணு முன் கொண்டு வருகிறது. காஸ்டியூம் - ஆர்ட் டைரக்ஷன் இரண்டுமே இரண்டு தூண்களைப் போல இந்த படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
ஜி.டி நாயுடு தனது கண்டுபிடிப்புகளின் போது சில சிக்கல்களை சந்தித்தார். இந்த சிக்கல்கள் இன்னும் ஆழமாக இங்கே பதிவு செய்யப்படவில்லை.
வருமான வரி பிரச்னையை சுற்றியே படம் கதை நகர்வது சற்று அயற்சியை தருகிறது. பெரிய அளவில் கல்வி கற்காத ஜி.டி நாயுடு விஞ்ஞானத்தின் மீது ஏன் இவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தார்? என்று இன்னும் ஆழமாக சொல்லி இருக்கலாம்.
முதல் மனைவியை விட்டு பிரியும் காரணமும் சரியாக சொல்லப்படவில்லை.
ஜி.டி நாயுடு பல கண்டுபிடிப்புகளையும், தொழிலையும் நடத்துவதற்கு அவர் மனதில் இருந்த சுதேசி எண்ணமும் ஒரு காரணம் என்று ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது. இதை இன்னும் நேர்த்தியாக சொல்லி இருக்கலாம்.
பெரியார், நேரு போன்ற தலைவர்கள் படத்தில் வருகிறார்கள். இவர்களுடன் நாயுடுவுக்கு இருந்த நட்பையும் சரியாக நமக்கு புரிய வைத்திருக்கலாம் .
சில குறைகள் இந்த படத்தில் இருந்தாலும், தென்னகத்தில் முதன்முதலாக ஆங்கிலேயர்களே பிரமித்துப் போகும் வகையில் ஒரு தனியார் போக்குவரத்தை நிறுவியவர், பல்வேறு கண்டு பிடிப்புகளை செய்து அதன் மூலமாக கோவையை மிகப் பெரிய தொழில் நகரமாக மாற்ற ஆணிவேராக இருந்தவர் என்ற பல பெருமைக்கு சொந்தக்காரரான ஜி.டி நாயுடு (G.D.N) அவர்களின் வாழ்க்கையை ஓரளவு பதிவு செய்ததற்காக இந்த படக்குழுவை பாராட்டலாம்.
இந்தத் திறனாய்வை வாசிப்பதன் மூலமாக, ஒரு வரலாற்றுத் திரைப்படத்தின் பலம் மற்றும் பலவீனங்களை எடைபோடும் திறனைப் பெறுவதோடு, கோவையின் வளர்ச்சிக்குப் பின்னால் இருந்த மாபெரும் மனிதரின் உழைப்பை ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.