

'வல்லமை தாராயோ', 'கொல கொலையா முந்திரிக்கா', 'மூனே மூணு வார்த்தை', 'கேடி', 'புத்தம் புது காலை விடியாதோ', 'லவ் ஆல்வேஸ்' உள்ளிட்ட சில தமிழ் படங்களை இயக்கியவர் மதுமிதா. 2008-ல் இவர் இயக்கிய முதல் படமான 'வல்லமை தாராயோ' பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டது. இங்கு குறிப்பிட்ட படங்களைத் தவிர, மதுமிதா ஒரு இந்தி படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் 'ஜான் டே' என்ற படத்தை இயக்கியுள்ளார் மதுமிதா. இப்படம் வரும் நவம்பர் 13 அன்று வெளியாகவுள்ளது. இவரது படங்கள் வெளியாகும் சமயத்தில் சில பரபரப்புகளும், விமர்சனங்களும் எழுவது வழக்கம். இந்த முறை 'ஜான் டே' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மதுமிதா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன?
'ஜான் டே' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மதுமிதா, "இது எனது பத்தாவது படம். ஒவ்வொரு படத்திற்கும் வேறு வேறு விதமான விமர்சனங்களை நான் பெற்று வருகிறேன். நடுவில் சில ஆண்டுகள் தமிழ் சினிமாவை விட்டு இந்தி சினிமாவில் படங்களை இயக்கினேன். மீண்டும் நான் தமிழ் சினிமாவிற்குப் படம் இயக்க வந்த பிறகு, முன்பு எப்படி வரவேற்பு இருந்ததோ அதேபோலவே இருக்கிறது. 'ஜான் டே' படத்தின் போஸ்டரில் ஒரு பக்கம் ஹீரோ அர்ஜுன் தாஸ் தெரிகிறார், இன்னொரு பக்கம் ஒரு பெண் இருக்கிறார். இது என்ன என்ற கேள்வி பலருக்கு எழுகிறது. இது ஒரு சஸ்பென்ஸ் கிரைம் கில்லர் படம்.
'ஜான் டே' என்ற தலைப்பில் ஆண், பெண் என்ற இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளன என்று குறிப்பிடவே இதை உருவாக்கினேன். இதுவரை அர்ஜுன் தாஸை சில படங்களில் ஹீரோவாகப் பார்த்திருக்கலாம், ஆனால் இதில் நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த அனைவரின் கையிலும் ஒரு டெடி பியர் பொம்மை இருக்கிறது. ஏனென்றால், இந்தப் பொம்மைக்கும் கதைக்கும் தொடர்பு இருக்கிறது" என்று பேசிக்கொண்டிருந்தவர், திடீரென ஒரு கட்டத்தில் எமோஷனலாக பேச ஆரம்பித்தார்.
"கடந்த 18 வருடங்களாகத் திரைப்படம் எடுத்து வருகிறேன். ஆனால், பல பத்திரிகைகள் இன்னும் என்னைப்பற்றி எழுதும் போது 'பெண் இயக்குநர்' என்று எழுதுகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை? 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் படங்களை இயக்கப் பெண்கள் வந்துவிட்டார்கள். தமிழ் சினிமாவில் நடிப்பு, இசை, பாடல்கள் என்பதைக் தாண்டி பல துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால், இன்னும் 'பெண் இயக்குநர்' என்ற அடையாளத்துடன் என்னைச் சொல்வது கோபமாகவும், சற்று வருத்தமாகவும் இருக்கிறது. இயக்குநர் என்றால் அது இயக்குநர்தான். அது என்ன ஆண், பெண் என்ற வித்தியாசம்? இன்று பல துறைகளில் பெண்கள் சாதனை புரிந்து வருகிறார்கள். இன்றும் கூட சில பத்திரிகைகள் பெண்களைப் பற்றி எழுதும்போது பெண் மருத்துவர், பெண் மேலாளர் என்றுதான் எழுதுகிறார்கள். இது ஊடகங்களின் பார்வை இன்னும் மாறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
என்னுடைய படத்தை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சியுங்கள்; அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. பாராட்டினாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்; விமர்சித்தாலும் கவலைப்பட மாட்டேன். ஆனால், நான் கவலையும் கோபமும் கொள்ளும் ஒரே விஷயம், என்னை 'பெண் இயக்குநர்' என்று தனியாக அடையாளப்படுத்துவதுதான். அதற்காகப் பெண் என்ற பெருமை எனக்கு இல்லாமல் இல்லை; பெண் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். ஆனால், வேலை அல்லது தொழில் என்று வந்துவிட்டால் ஆண், பெண் இருவரும் சமம் என்று நான் நினைக்கிறேன். எனவே, இந்த 'பெண் இயக்குநர்' என்ற அடையாளத்தை ஊடகங்கள் எனக்குத் தர வேண்டாம் என்று இந்த ஆடியோ வெளியீட்டு விழா மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
அவர் பேசிய பிறகு, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பலர், "இனி இந்தத் தவறை திருத்திக்கொள்கிறோம்; 'பெண் இயக்குநர் மதுமிதா' என்று எழுத மாட்டோம். 'இயக்குநர் மதுமிதா' என்றுதான் இனி நாங்கள் எழுதுவோம்" என்று உறுதிமொழி அளித்தனர். அதன் பிறகு மதுமிதா சற்று மகிழ்ச்சி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய படத்தின் ஹீரோ அர்ஜுன் தாஸ், "இதுவரை நான் நடித்த படங்கள் அனைத்திலுமே போலீஸ் என்னைத் தேடும் அல்லது போலீடசுடன் நான் சண்டை போடுவேன். ஆனால், முதல்முறையாகக் காக்கிச் சட்டை போட்டு நடித்திருக்கிறேன். இந்தச் கதாபாத்திரத்தைத் தந்ததற்கு மதுமிதாவிற்கு நன்றி சொல்கிறேன். காக்கிச் சட்டையில் என்னைப் பார்த்த எனது அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அனைவரையும் ஒருங்கிணைத்து வேலை வாங்குவதில் மதுமிதா மிகவும் திறமைசாலி. 'ஒரு பெண் என்றால் காதல் படங்கள் அல்லது கருத்துச் சொல்லும் படங்கள் மட்டும்தான் எடுக்க வேண்டும்' என்று பலர் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அது தவறு. ஒரு ஆண் இயக்குநர் எப்படிச் சிந்திக்கிறாரோ, எப்படி ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை எடுக்கிறாரோ, அதேபோல ஒரு பெண்ணின் சிந்தனையிலும் ஆக்ஷன் த்ரில்லர், கிரைம் போன்ற கதைகள் உருவாகும். 'ஜான் டே' திரைப்படம் பரபரப்புடன் கூடிய ஒரு கிரைம் த்ரில்லர் படம். மதுமிதா இதை மிக நேர்த்தியாக அழகாகக் கொண்டு வந்திருக்கிறார். அனைத்தையும் விடச் சிறப்பான விஷயம் என்னவென்றால், இதில் இடம்பெற்றுள்ள மற்ற அனைத்து நடிகர்-நடிகைகளையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்திருக்கிறார். தீபாவளிக்குப் பிறகு அடுத்த வாரமே இந்த 'ஜான் டே' உங்களுக்கு ஒரு விருந்தாக அமையும்" என்றார்.
நவம்பர் 13 அன்று வெளியாகும் இப்படத்தை 'பாகுபலி' படத்தைத் தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) நிறுவனம் தயாரித்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு.