

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பெயரை அறியாத சினிமா ரசிகனே இருக்க முடியாது. Jaws (1975), E.T (1982), Indiana Jones and the Temple of Doom (1984), Jurassic park (1993), Saving Private Ryan (1998) என அவரது வித்தியாசமான படங்களின் பட்டியல் நீளம். குறிப்பாக ஜூராசிக் பார்க்கின் மெகாஹிட் வசூல் ஹாலிவுட்டையே புரட்டிப்போட்ட படம் என சொல்லலாம்.
10/06/2026-ல் அமெரிக்காவில் ரிலீஸ் ஆன Disclosure Day (2026) இந்தியாவில் 12/06/2026 முதல் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாகியது. 115 மில்லியன் டாலர் செலவில் உருவாகி இருக்கும் படம் இது.
1982ல் எக்ஸ்ட்ரா டெரெஸ்ட் ரியல் என்ற சயின்ஸ் பிக்சன் கதையில் ஏலியன் (வேற்றுக்கிரகவாசி) கேரக்டர் பற்றி சொன்னவர் 44 வருடங்கள் கழித்து அதே சப்ஜெக்ட்டை வித்தியாசமான முறையில் கையாண்டிருக்கிறார்.
க்ளோயிங் ஆராஸ் அண்ட் பிளாக் மணி என்று 2017ல் வெளிவந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் ஒரு கட்டுரையிலிருந்து இன்ஸ்பயர் ஆகி 2023-ல் 60 பக்கங்கள் கொண்ட கதையின் ஒன்லைன் ஸ்பீல்பெர்க்கால் எழுதப்பட்டது. டைட்டிலுக்கான அர்த்தம் வெளிப்படுத்தல் நாள்.
ஸ்பாய்லர் அலெர்ட்
அமெரிக்க அரசாங்கம் சில ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதை வெளிக் கொணர நாயகன் முயல்கிறான் சில முக்கியமான வீடியோக்களும், ஒரு ரகசிய டிவைசும் நாயகனிடம் மாட்டி இருக்கிறது. அதைக் கைப்பற்ற அரசாங்கமும், ராணுவமும், இண்ட்டெலிஜென்ஸ் டீமும் படாதபாடு படுகிறது.
ஓப்பனிங்க் ஷாட்டிலேயே நாயகன் தன் காதலியுடன், டிவைசுடன் ஓடுகிறான். ஒரு ஆக்ரோஷமான துரத்தல் படலம் நடக்கிறது. இது ஒரு ட்ராக். நாயகி ஒரு செய்தி வாசிப்பாளர். வானிலை அறிக்கை வாசிப்பதுதான் தொழில். திடீரென அவருக்கு நாக்கு குளறுகிறது. தெரியாத மொழிகள், அறியாத பாஷைகள் எல்லாம் பேசுகிறார். ஏதோ சிக்னல் எங்கிருந்தோ தனக்கு வருகிறது என்பதை உணர்கிறார்.
ஒருவரின் கண்களைபார்த்தே அவரது இறந்த காலம், எதிர் காலம் பற்றி எல்லாம் துல்லியமாக சொல்கிறார். அவருக்கே இது எப்படி? என்பதை சொல்லத் தெரியவில்லை. ஏதோ ஒரு சக்தி தன்னை ஆட்டுவிக்கிறது என்பதை உணர்கிறார். நாயகன், நாயகி இருவரும் எந்தப்புள்ளியில் இணைகின்றனர், இருவருக்கும் நிகழும் சோதனைகள் என்ன? வெற்றி பெற்றார்களா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் எமிலி ஒலிவியா லாரா பிளண்ட் 2016ல் வெளிவந்த த கேர்ள் ஆன் த ட்ரெயின் என்ற ஹாலிவுட் க்ரைம் திரில்லர் படத்தில் நாயகியாக நடித்தவர். இவரது கண்கள் மென்சோகத்தோடு எப்போதும் இருப்பது ஒரு தனித்துவம். நம்ம ஊர் சோனியா அகர்வால் மாதிரி சிரிக்கும்போது கூட கண்களில் ஒரு சோகம் எட்டிப்பார்க்கும். பிரமாதமான நடிப்பு கலக்கி இருக்கிறார்.
நாயகனாக ஜோஸ் ஓ கோனார் கச்சிதமாக நடித்திருக்கிறார். நோவா கேரக்டரில் நடித்திருக்கும் காலின் பர்த் செமயான நடிப்பு. இவர் ஏற்கனவே 2010ல் வெளிவந்த The King's speech ஹாலிவுட் படத்தில் நாயகனாக நடித்தவர் தான். மற்ற அனைத்துக் கேரக்டர்களின் நடிப்பும் கனகச்சிதம்.
ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் பிரமிப்பு. படத்தின் ரன்னிங் டைம் 145 நிமிடங்கள்.
டேவிட் கோயெப் திரைக்கதை எழுத, கதை எழுதி இயக்கி இருப்பவர் ஸ்பீல்பெர்க்.
சபாஷ் டைரக்டர்
முதல் 30 நிமிடங்கள் ஆடியன்சுக்கு எதையும் விளக்காமல் சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போவது சிறப்பு.
நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு. அது இருப்பதாக எல்லோரும் நம்புவதால்தான் இந்த சமூகம் குற்றஙகள் அதிகம் செய்யாமல் நமக்கு மேல் இருக்கும் சக்தியின் மீது கொண்ட பயத்தில் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்கிறான் என்பது மாதிரி கருத்தான வசனங்கள் ஆங்காங்கே பளிச்.
ஏழாம் அறிவு படத்தில் வரும் வில்லன் நோக்கு வர்மம் மூலம் எதிரில் இருப்பவரை ஹிப்னாடிச முறையில் மடக்குவது போல் எங்கேயோ தொலைவில் இருக்கும் ஆளைக் கண்ட்ரோல் செய்வதாக வரும் கான்செப்ட் அருமை.
நாம் யாரும் தனிமையில் இல்லை. எங்கோ யாரோ ஒருவரால் கண்காணிக்கப்படுகிறோம் என்ற அடிப்படை விதி சொல்லப்பட்ட பாங்கு.
க்ளைமாக்ஸ் காட்சி மிகவும் எமோஷனல். கண் கலங்க வைக்கிறது. 6 அரசாங்க உயர் அதிகாரியைக் கொலை செய்ய ஹிப்னாடிசம் மாதிரி கண்ட் ரோல் செய்து முயற்சிக்கும் சீன் செம விறுவிறுப்பு.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
முதல் 40 நிமிடங்களில் உரையாடல் மூலம் மட்டுமே கதையை நகர்த்துவது சலிப்பு.
ஒரு அரசாங்கத்தையே எதிர்த்து, மிலிட்ரியை மீறி தனி ஒருவனாக நாயகன் போராடுவது எல்லாம் காதில் பூ ரகம் தான்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13 +
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - கடந்த 20 வருடங்களில் வெளிவந்த ஸ்பீல்பெர்க்கின் சிறந்த படம் எனக் கொண்டாடப்படும் இந்தப் படம் பரபரப்பான, ஸ்பீடான படம் தான்.