விண்வெளி ஆர்வலர்களுக்கு ஒரு குதூகலமான புத்தாண்டு நற்செய்தி!
முதல் அமெரிக்க விண்வெளி வீராங்கனை சாலி ரைட் பற்றிய படம் திரையிடப்படும்!
அமெரிக்காவின் முதல் விண்வெளிப் பெண்மணியான சாலி ரைட் பற்றிய ஒரு டாகுமெண்டரி திரைப்படம் 2025 சன்டான்ஸ் பிலிம் பெஸ்டிவலில் (Sundance Film Festival) இடம் பெறுகிறது. இது அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான உடாவின் தலைநகரான சால்ட் லேக் சிடியில் (Salt. Lake City, Utah) 2025 ஜனவரி 23 முதல் பிப்ரவரி 2ம் தேதி முடிய நடக்கவிருக்கும் திரைப்படத் திருவிழாவில் திரையிடப்படும்.
சன்டான்ஸ் இன்ஸ்டிடியூட் என்பது வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞர்களை உலகிற்கு இனம் காண்பிக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு நிதி உதவி அளிக்கவும் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனம்.
1981ல் ராபர்ட் ரெட்போர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த லாப நோக்கமற்ற நிறுவனம் 1985 முதல் வளர்ந்து வரும் கலைஞர்கள் எடுத்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து இந்தத் திருவிழாவில் திரையிட்டு வருகிறது.
இந்த நிறுவனம், இது வரை, சுமார் 30 லட்சம் டாலர் (இந்திய ரூபாயில் இருநூற்றி ஐம்பத்து நாலரை கோடி ரூபாய்) நிதி உதவியை வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞர்களுக்கு அளித்துள்ளது.
சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் 2025ல் திரையிடப்படுகின்றன.
அவற்றில் சாலி ரைட் பற்றிய திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சாலியின் விண்வெளி மற்றும் பூமி வாழ்க்கையை சித்தரிக்கும் இதில் அவரது நெருங்கிய நண்பர்கள், சகாக்கள் ஆகியோரது பேட்டிகளும் இடம் பெறுகிறது.
உண்மையான சாலி ரைட் யார் என்பதை இந்தப் படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்வதோடு ஒரு உண்மையான ஹீரோயின் எதையெதையெல்லாம் தியாகம் செய்து தனது எல்லையைக் கடக்க முடியும் என்பதை இந்தப் படம் சித்தரிக்கும்.
இதில் இதுவரை வெளி உலகம் அறிந்திராத மறைக்கப்பட்ட அவரது நீண்ட கால லெஸ்பியன் காதல் வாழ்க்கையும் இடம் பெறுகிறது. டாம் ஓஷாகுனெஸ்ஸி என்ற அவரது தோழியுடனான அவரது உறவு அவர் மறையும் வரை யாருக்கும் தெரியாது.
“தனது நெருங்கிய நண்பர்களிடமிருந்து கூட இவர் அதை மறைத்தார் – இதுவரை பார்த்திராத கோடிக் கணக்கான மக்களின் நலனுக்காக” என்கிறார் இந்தத் திரைப்படத்தை இயக்கிய கிறிஸ்டின் காஸ்டான்டினி. இந்தப் படமானது நேஷனல் ஜியாகிராபிக் டாகுமெண்டரி தயாரிக்கும் படம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
சாலி ரைட்:
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1951-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி பிறந்தார் சாலி ரைட்.
நல்ல சூழ்நிலையில் வளர்ந்த சாலி ரைட் டென்னிஸ் விளையாடுவதில் சிறந்து விளங்கியதோடு, அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். விண்வெளி என்றால் போதும் அடங்காத ஆர்வத்துடன் அனைத்துச் செய்திகளையும் கவனிப்பார்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா 1977ல் விண்வெளி செல்ல விரும்புவோருக்கு அழைப்பு விடுத்தது. பெண்களையும் விண்வெளிக்கு நாஸா அனுப்ப இருக்கும் செய்தியைப் பார்த்தவுடன், அவர் நாஸாவிற்கு தனது விண்ணப்பத்தை அனுப்பி விட்டார்.
1977, ஜூன் மாத இறுதியில் நாஸா 8079 விண்ணப்பங்களைப் பெற்றது. அதில் 208 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதித் தேர்வில் 35 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விண்கலத்தின் ரொபாட்டின் கரத்தை இயக்குவதில் அவர் நிபுணராகத் திகழ்ந்தார். இதற்கான காரணம் அவரது டென்னிஸ் விளையாட்டு தான். கண்ணுக்கும் கைகளுக்கும் இடையே உள்ள இசைவு டென்னிஸ் விளையாட்டில் மிக அதிகம் தேவைப்படும். அதுவே ரொபாட்டை இயக்க அவருக்குப் பெரிதும் உதவியாக ஆனது. சாலி குழுவாக இணைந்து செயல் படுவதிலும் நல்ல பெயரைப் பெற்றார்.
விண்வெளிக்குச் செல்ல நாஸா அவரைத் தேர்ந்தெடுத்து அறிவித்தது.1983-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி சாலஞ்சர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட போது அதில் பயணப்பட்ட சாலி ரைட் உலகில் விண்ணில் பறந்த முதல் அமெரிக்கப் பெண்மணி ஆனார். அவரே விண்ணில் பறந்த மிகக் குறைந்த வயதினர் என்ற பெருமையையும் பெற்றார்.
அவர் விண்ணில் பறந்த தினத்தன்று ஏராளமானோர் குதூகலத்துடன் 'ரைட் சாலி ரைட்' (Ride Sally Ride) என்ற ஆங்கில வார்த்தைகளுடன் கூடிய ‘டி’ ஷர்ட்டுகளை அணிந்து அவரை வழியனுப்பி வைத்தனர். ஆறு நாட்கள், இரண்டு மணி 23 நிமிடங்கள் 59 விநாடிகள் இந்தப் பயணம் நீடித்தது.
உலகமே கொண்டாடும் சிறந்த விண்வெளி வீராங்கனை ஆகி விட்டார் சாலி ரைட்!
மீண்டும் 1984-ல் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி அவர் சேலஞ்சர் விண்கலத்தில் எட்டு நாட்கள் பறந்தார். 197.5 மணி நேரத்தில் சேலஞ்சர் 132 முறை பூமியை ஓடுபாதையில் சுற்றி வலம் வந்தது.
இந்த இரு பயணங்களிலும் சுமார் 343 மணி நேரங்கள் அவர் விண்வெளியில் பறந்திருந்தார்.
(28-1-1986ல் விண்ணில் ஏவப்பட்ட சேலஞ்சர் விண்கலம் கிளம்பிய சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியதால் அவரது மூன்றாவது பயணம் திட்டமிட்டபடி நடக்கவில்லை.)
சக விண்வெளி வீரரான ஸ்டீவ் ஹாலியை அவர் மணந்தார்.
என்றாலும், இளம் வயதுத் தோழியான டாம் ஓஷானெஸியுடன் அவர் ஒரு இரகசிய தொடர்பை நீண்ட காலம் கொண்டிருந்தார். இருவரும் இணைந்து டென்னிஸ் விளையாடுவது வழக்கம். இது அந்தரங்க ஓரினச் சேர்க்கை தொடர்பாக மாறி விட்டது. அவர் இறந்த பின் அவரது மறைவுக் குறிப்பில் இடம் பெற்ற போது தான் உலகம் இந்த ரகசியத்தை அறிந்தது.
அவர் கான்ஸர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார். கீமோதெராபி, ரேடியேஷன் தெராபி ஆகிய சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்ட போதிலும் கணையத்தில் ஏற்பட்ட புற்று நோயால் அவர் லா ஜொல்லா என்ற இடத்தில் உள்ள தனது இல்லத்தில் 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி மரணமடைந்தார்.
61 வயது வாழ்ந்த சாலியின் வாழ்க்கை வரலாறு அனைத்துப் பெண்மணிகளுக்கும் விண்வெளி பற்றிய ஆர்வத்தை ஊட்டும்.
உலகமே அவரது வாழ்க்கை பற்றிய திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.