பதினெட்டே வயதான இந்திய வீரரான குகேஷ் சதுரங்கத்தில் சிங்கப்பூரில் டிங் லிரனைத் தோற்கடித்து உலக சாதனை படைத்த செய்தி இந்தியாவில் குதூகலத்தையும் செஸ் விளையாட்டு பற்றிய அதிக ஆர்வத்தையும் எழுப்பியுள்ளது.
இந்தச் சமயத்தில் செஸ் பற்றிய பல சிந்தனைகள் அனைவரது உள்ளத்திலும் எழுவது இயல்பே.
*செஸ் விளையாட்டை முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியதே இந்தியா தான்!
வாசவதத்தா:
*செஸ் பற்றிய முதல் தகவலைத் தரும் நூல் நமது பழைய நூலான வாசவதத்தா தான். இதைப் படைத்தவ்ர் சுபந்து என்ற கவிஞர். (சுபந்து காலம் - கி.பி. 550-620) இந்த நூல் கி.பி. 600ல் எழுதப்பட்ட நூலாகும். உஜ்ஜயினி இளவரசியான வாசவதத்தா, மன்னன் உதயணனுடன் காதல் வசப்பட்ட கதை இது. இதில் தான் முதன் முதலாகா சதுரங்க விளையாட்டு பற்றிய செய்தியை நாம் காண்கிறோம்.
கபாப்ளாங்கா:
உலக செஸ் விளையாட்டு வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வீரர் கியூபாவைச் சேர்ந்த கபாப்ளாங்கா ஆவார். (பிறப்பு : 19-11-1888 மறைவு: 8-3-1942)
12 வயதிலேயே உலக சாம்பியனான கபாப்ளாங்கா 1916 முதல் 1924 முடிய யாராலும் தோற்கடிக்கப்பட முடியாத வீரராகத் திகழ்ந்தார். அமெரிக்க பயணத்தில் 10 பிரம்மாண்ட போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக 168 போட்டிகளில் வென்றார்; விளையாட்டுத் திறமை அதில் மகத்தான வேகம் ஆகிய இரண்டினாலும் அவர் உலகை பிரமிக்க வைத்தார்.
அவர் காலத்தில் செஸ் விளையாட்டு பற்றிய அறிவியல் ஆய்வுகள் பெருமளவில் நடக்க ஆரம்பித்தன. இயல்பான திறமையா அல்லது பயிற்சியா என்பது குறித்து ஏராளமான ஆய்வுகள் நடந்த சமயத்தில், கபாப்ளாங்காவை நோக்கி. ‘எப்படி நீங்கள் விளையாடுகிறீர்கள்?’ என்று கேட்ட போது, “நான் விளையாடும் போது அடுத்து இருக்கும் ஒரே ஒரு நகர்த்தலைத் தான் நினைக்கிறேன். அது எப்போதுமே சரியாக இருக்கும்” என்று பதில் அளித்தார்.
சைமனின் ‘பத்து ஆண்டு விதி’:
ஆரம்ப விளையாட்டுக்காரர்கள் 30 விநாடிகள் பார்த்தாலும் கூட, அவர்களுக்கு காய் நகர்த்தலில் ஏற்படும் விளைவுகள் சரிவரத் தெரிவதில்லை. ஆனால் க்ராண்ட் மாஸ்டர்களுக்கோ படம் பிடித்தது போல நடந்தது என்ன, இனி நடக்கப்போவது என்ன என்பது தெரிந்து விடுகிறது.
இதைப் பற்றி ஆய்வு நடத்திய சைமன் என்ற விஞ்ஞானி ‘பத்து ஆண்டு விதி’ என்ற ஒரு விதியைக் கண்டு பிடித்தார். ஒரு சிறந்த கிராண்ட் மாஸ்டருக்கு விளையாடிக் கொண்டிருக்கும் போது 50000 முதல் ஒரு லட்சம் வரை செஸ் தகவல்கள் உடனே மனதிற்குள் தோன்றி விடுகிறது என்கிறார் அவர். அந்த அளவு பிரமிக்க வைக்கும் நினைவாற்றல் அவர்களிடம் இருக்கிறது.
எந்த ஒரு துறையிலும் ஒருவர் நிபுணராக வலம் வர, அவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும் என்பதே அவரது பத்து ஆண்டு விதி என்ற கண்டுபிடிப்பாகும்.
உலக செஸ் சாம்பியன்களன பிஷர் 1958ல் தனது 15ம் வயதில் கிராண்ட் மாஸ்டர் டைடிலை வென்று உலகை அசத்தினார். உக்ரேனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜகின் தனக்கு வயது 12 ஆண்டு 7 மாதம் ஆகும் போது அதைப் பெற்றார்.
போல்கர் சோதனை:
இயல்பான திறமையா, அல்லது மோடிவேஷன் என்னும் ஊக்கமூட்டுதல் மற்றும் பயிற்சியா, என்று ஆராயும் பல நிபுணர்கள் மோடிவேஷனே பெரிதும் இதற்குத் தேவை என்கின்றனர்.
பள்ளிகளில் இயல்பான திறமை உள்லவர்களை இனம் காணும் ஆசிரியர்கள் உடனடியாக ஊக்கமூட்டி பயிற்சி தந்தால் சிறந்த வீரர்கள் உருவாக முடியும் என்பது அவர்களது முடிவு.
இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு ஹங்கேரியைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளரான போல்கர் என்பவர் உலக சரித்திரமே வியக்கும் ஒரு சோதனையைச் செய்தார். இதற்கு ‘போல்கர் சோதனை’ என்றே பெயர் வந்து விட்டது. தனது மகள்களான சூசன், சோபியா, ஜூடிட் ஆகிய மூவருக்கும் அவர் செஸ் விளையாட்டில் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் இந்தப் பயிற்சி நடந்தது. இந்த மூவரில் ஒருவர் இண்டர்நேஷனல் மாஸ்டராகவும் மற்ற இருவர் கிராண்ட் மாஸ்டர்களாகவும் ஆயினர்.
இந்த போல்கர் சோதனை இரண்டு விஷயங்களை நிரூபித்தது.
1) கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்க முடியும் 2) பெண்களும் கிராண்ட் மாஸ்டர்களாக ஆக முடியும்.
ஆக மோடிவேஷன் என்பது செஸ் விளையாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வெற்றி இன்னொரு வெற்றியை அடைய ஊக்குவிக்கிறது.
இந்த விவரங்கள் எல்லாம் சரிதான் என்பதை குகேஷ் வெற்றி பெற்று நிகழ்த்திய சாதனை நிரூபிக்கிறது.
வெற்றி பெற்றவுடன் கண்களில் நீர் ததும்ப அவர் ஓடிப் போய் தன்னை ஊக்குவித்து 'பெரிய ஆளாக்கிய' தந்தையைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.
அனைவரையும் இது நெகிழ வைத்தது.
குகேஷுக்கு நமது பாராட்டுகள்!
குறிப்பு : 1913ம் ஆண்டு சதுரங்க விளையாட்டின் வரலாறு பற்றி 900 பக்கங்களில் ஹெச்.ஜே. ஆர் மர்ரே (1868-1955) எழுதிய அ ஹிஸ்டரி ஆஃப் செஸ் H. J. R. Murray - A. History of Chess, குறிப்பிடத்தகுந்த ஒரு நூலாகும். செஸ் பற்றி அறிய விரும்புவோர் நாட வேண்டிய நல்ல நூல் இது ! இண்டர்நெட்டில் இலவசமாக இதைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.