அழகு முக்கியமா, மனசு முக்கியமா? பேசும் 'ட்ரோன்ஸ்' படம்!

நிறக் காதலைப் பற்றிப் பேசும் தேவதர்ஷினி மற்றும் சித்தி இதானி நடித்த அமானுஷ்யப் படத்தின் அலசல்.
ட்ரோன்ஸ் படம்
ட்ரோன்ஸ் படம்
Updated on: 
ரேட்டிங்(3 / 5)

ஜெயிலர் 2 படத்துடன் சத்தம் இல்லாமல் இன்னொரு படமாக வந்திருக்கிறது ட்ரோன்ஸ். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் தேவதர்ஷினி,சித்தி இதானி நடித்து வெளிவந்துள்ள படம் ட்ரோன்ஸ். கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் சந்தர்ப்ப வசத்தால் பிளாக் ஹோல் எனப்படும் ஒரு மர்மமான பங்களாவில் தங்க நேர்கிறது. அந்த பங்களாவிற்கு ஓனராக இருப்பவர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்க சொல்கிறார்.அவர்களும் அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடந்து கொள்கிறார்கள்.

அவர்களுக்கு தேவையான உணவை ட்ரோன் எனப்படும் ஒரு பறக்கும் தட்டு மூலமாக கொண்டு வந்து தர ஏற்பாடு செய்கிறார் முதலாளி. ஒரு நாள் இரண்டு ஆண்களில் ஒரு இளைஞருக்கு அந்த தட்டு மூலமாக வெளியில் இருக்கும் ஒரு பெண் மீது காதல் ஏற்படுகிறது. அழகாக இருக்கும் அந்த பெண்ணை பார்க்க இரவு நேரத்தில் சென்று வருகிறார். அந்தப் பெண் "நான் எதிர்காலத்தில் வயதானாலும், நரை சூழ்ந்தாலும் என் மீது காதல் இருக்குமா?" என்று கேட்கிறார் அந்த இளைஞரும் "இந்த காதல் மாறாது" என்று உறுதி அளிக்கிறார்.

இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் செய்த அடுத்த நொடியே அந்தப் பெண் ஒரு விகாரமான சூனியக்கார கிழவி போல மாறிவிடுகிறார். அந்த இளைஞர் செய்வதறியாது திகைக்கிறார். அதிலிருந்து தப்பிக்க என்ன செய்வது என்று யோசிக்கிறார். அந்த சூனியக்கார கிழவி இதுபோன்று பலரை திருமணம் செய்து கொண்டு ஒரு பொம்மையாக தொங்க விட்டிருப்பது தெரிய வருகிறது. இதிலிருந்து அந்த இரண்டு இளைஞர்களும், அந்தப் பெண்ணும் மீண்டார்களா என்பது தான் மீதி கதை.

படத்தின் தொடக்கத்தில் "இந்த படத்தை பார்க்கும் முன் உங்கள் லாஜிக்கை கழட்டி வைத்து விடுங்கள், செல்போனை ஆஃப் மோடில் வையுங்கள். நாம் சின்ன வயதில் படித்த நாவல்கள் காமிக்ஸ் தான் இந்த படம் என்று வாய்ஸ் ஓவரில் சொல்கிறார்கள். இதை இந்த படம் சொன்னபடி எடுத்து இருக்கிறார்களா என்று இப்போது பார்க்கலாம். 

ட்ரோன்ஸ் படம்
ட்ரோன்ஸ் படம்

படத்தின் பிளஸ்.....படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் தான் உண்மையான கதைக்குள் படம் செல்கிறது. இது குழந்தைகளுக்கான படம் என்று முதலில் சொல்கிறார்கள். ஆனால் இது குழந்தைகளுக்கான படம் என்று சொல்வதை விட காதலுக்குள் இருக்கும் ஒரு நுண்ணிய உளவியலை பற்றி இந்த படம் பேசுகிறது.

அதாவது காதலுக்கு மனது தான் முக்கியம். அழகு முக்கியம் இல்லை என்ற கருத்து இங்கே சொல்லப்படுகிறது. ஆனால் ஆண்கள் பலருக்கு அழகான குறிப்பாக சிவந்த அல்லது வெள்ளை நிறமுடைய பெண்களை தான் பிடிக்கிறது அல்லது அவர்கள் மீது தான் காதல் வருகிறது. இது எதனால்? மனதுதான் உண்மையான காதல் என்றால் நிறத்தின் மீது ஏன் இந்த மோகம்? என்று கேள்வி கேட்கிறது இந்த படம்.

ட்ரோன்ஸ் படம்
ட்ரோன்ஸ் படம்

குறிப்பாக தமிழ்நாட்டில் சிவந்த நிறமுடைய பெண்களுக்கு காதல் ப்ரபோசல் அதிகமாக வந்திருக்கும். அவ்வளவு ஏன்?இன்றும் கூட மேட்ரிமோனிகள் பக்கத்தில் பெண் தேடுபவர்கள் நன்று படித்த நல்ல குடும்பப் பின்னணி கொண்ட, சிவந்த நிறமுடைய பெண் தேவை என்று கேட்பதை பார்க்கலாம். காதலுக்கும் இது போன்ற அழகு என்று நாம் நம்பும் நிறத்திற்கும் என்ன தொடர்பு இது ஏன் என்று இந்த படத்தில் இந்த படம் கேள்வி கேட்கிறது.

இதையும் படியுங்கள்:
எளிய மனிதனின் மானத்திற்கு 'என்ன விலை'? கருணாஸ் - நிமிஷா கூட்டணி எப்படி?
ட்ரோன்ஸ் படம்

பிளாக் மேஜிக் அமானுஷ்யம் மினியேச்சர் இப்படி பல விஷயங்கள் ஆங்காங்கே சிறுவர்களை கவரும் விஷயங்கள் இருந்தாலும் கூட படத்தின் ஒன் லைன் என்பது இங்கே சொல்லப்பட்ட 'நிறக் காதல் உளவியல் தான்'. இதை மிகவும் ஆழமாகவும், மிகவும் சிறப்பாகவும் குறிப்பாக எளிமையாகவும் புரிய வைத்திருக்கிறார் இயக்குனர். அஞ்சலி நாயர், சித்தி இதானி, தேவதர்ஷினி என்று மூன்று பெண்கள் இந்த படத்தில் நடித்தாலும் தேவதர்ஷினி நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார்.

ஆரம்பத்தில் ஒரு கொடூரமான சூனியக்காரி ஆக வந்து கிளைமாக்ஸ் காட்சியில் கதறி அழும்போது இதற்குத் தான் இவ்வளவு சோகமா? மனதிற்குள் இவ்வளவு வருத்தமா? என்று ஒட்டுமொத்தமாக நம்மை திரும்பிப் பார்க்க வைக்கிறார். நடிப்பில் தேவதர்ஷினிக்கு அடுத்தபடியாக நடிப்பில் ஸ்கோர் செய்வது அஞ்சலி நாயர். காதலை மனதிற்குள் வைத்துக்கொண்டு நிறத்தால் தான் புறக்கணிக்கப்படும் போது வரும் ஏமாற்றத்தை மனதில் தாங்கிப் பிடிக்கிறார்.

சித்தி கன்னக்குழி அழகுடன் சிறிதளவு மட்டும் நடித்திருக்கிறார். ஹீரோ டிராவிட் செல்வம் காதல் என்பது அழகு என்று எண்ணிக்கொண்டு அதன் பின்பு செல்லும் இடத்தில் ஒரு சமகால இளைஞனை கண் முன் கொண்டு வருகிறார். ஒளிப்பதிவு, இசை இந்த இரண்டும் அளவோடும் மிகாமலும் இருப்பது கூடுதல் பலம்.

இதையும் படியுங்கள்:
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் வெர்சஸ் மகுடம்: நேரடி பாக்ஸ் ஆபிஸ் மோதல்!
ட்ரோன்ஸ் படம்

மைனஸ்... படத்தின் இரண்டாம் பாதி சிறப்பாக இருந்தாலும் முதல் பாதி சற்று இழுவையாக இருக்கிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகள் முதல் பாதியில் சற்று அயற்சியை தருகிறது.

இந்தப் படம் மூலம் தெரிந்து கொள்ளும் விஷயம்... இந்த படம் அமானுஷ்யம், காமிக்ஸ் பின்புலம் என்று சொல்லப்பட்டிருந்தாலும் கூட இந்த படம் உளவியல் ரீதியாக நிறத்தின் மீது நாம் கொண்டுள்ள அபிரிமிதமான ஈர்ப்பை சொல்கிறது. நிறம் என்பது ஜஸ்ட் வெளியில் பார்ப்பது தான் அதை தாண்டி உள்ளம் என்பது ஒன்று இருக்கிறது. கருப்பு நிறத்தின் பின்பும் இருப்பதும் ஒரு மனம் தான் என்று இந்த படம் சொல்கிறது. எனவே இந்த படத்தில் சில குறைகள் இருந்தாலும் படம் முடியும்போது கண்டிப்பாக நமக்குள் இருக்கும் நாம் அறியாத ஒரு நிற பாகுபாடை படம் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்பது உறுதி.

இந்த ட்ரோன்ஸ் படம் வெறும் திகில் கதையைத் தாண்டி, காதலில் நிறம் மற்றும் அழகு மீதான சமூகத்தின் பார்வையையும் அதன் உளவியலையும் எப்படி ஆழமாக அலசுகிறது என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com