

ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியான், மதுரை முத்து நடிப்பில் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் Happy Raj.
ஜி.வி.பிரகாஷின் தந்தை ஜார்ஜ் மரியான். இவர் பள்ளி ஆசிரியர். இவரது உருவத்தை வைத்து 'குதிரை முட்டை' என்று ஊர் கேலி செய்கிறது. ஜி.வி.பிரகாஷையும் குதிரை முட்டை மகன் என்று கேலி செய்கிறது. இந்த கேலியால் இவரின் காதலும் கை கூடவில்லை. இந்த ஊரில் இருந்தால் தானே பிரச்சனை, 'பெங்களூரு சென்று அங்கே உள்ள பெண்ணை காதலிக்கலாம்' என்ற எண்ணத்தில் பெங்களூரு சென்று, அங்கே சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து அங்கே உள்ள ஒரு பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்கிறார்.
பெண்ணின் அப்பாவும் காதலை ஏற்று கொள்ள, ஜி.வி.பிரகாஷ் தந்தையும் பெங்களூரு வந்து சேர்கிறார். அங்கே பெண்ணின் அப்பாவிற்கு, ஜார்ஜ் மரியானின் பாமரத்தனமான நடவடிக்கைகள் பிடிக்காததால் ஈகோ பிரச்சனை ஏற்பட்டு திருமணம் நின்று போகிறது. இந்த திருமணம் நடந்ததா என்று சொல்கிறது மீதிக்கதை.
அப்பா என்பது உருவம் மட்டுமல்ல. ஒரு தோழன், ஆறுதல் என்று டைரக்டர் சொல்ல வருகிறார். இந்த தகவலை படத்தின் கடைசி பத்து நிமிடத்தில் டைரக்டர் சொல்கிறார். மற்றபடி படம் முழுவதும் ஹீரோயினுக்கு வரும் காதல், சிரிப்பே வரவழைக்காத நகைச்சுவை காட்சிகள், நடிப்பு என்ற பெயரில் ஜி.வி.பிரகாஷ் சத்தமாக பேசுவது என 'வழ வழ' காட்சிகளுடன் சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது படம்.
ஜார்ஜ் மரியான் ஜமீன், பிஸ்னஸ் மேன் என பல பில்ட் அப் தருகிறார்கள். உண்மையில் 'யார் தான் நீங்க?' என்று கேட்க தோன்றுகிறது. அம்மாவாக நடிக்கும் கீதா கைலாசம் மாடர்ன் டிரஸில் செய்யும் லூட்டிகள் எல்லாம் 'முடியல சாமி' என்று சொல்லும் படி இருக்கிறது. ஜார்ஜ் மரியான் நடிப்பு யதார்த்தமாக உள்ளது.
கம் பேக் தந்துள்ள அப்பாஸ் நடிப்பு சிறப்பு. சிறந்த நடிகையான கீதா கைலாசம் நடிப்பு வீணடிக்க பட்டுள்ளது. ஹீரோயின் கௌரி பிரியா ஓரளவு நடிக்க முயற்சி செய்துள்ளார்.
மதுரை முத்து 'நான் டிவியில் தான் சிரிக்க வைப்பேன்' என்று சத்தியம் செய்து விட்டு வந்தவரை போல் இறுக்கமான முகத்தில் இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் தான் நல்ல நடிப்பை தந்துள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையில் சப்தம் தான் பிரதானமாக இருக்கிறது. அப்பா - மகன் உறவு என்ற ஒன் லைனில் கதை சொல்ல முயற்சி செய்து காதல். குடும்ப ஈகோ போன்ற சுவாரஸ்யம் இல்லாத காட்சிகளை சொல்லி Happy Raj மிக சாதாரண படமாக வந்துள்ளது.
மொத்தத்தில் Happy Raj - 'ரசிகர்கள் ஹாப்பியா இல்லையே ராசா' என்று சொல்லத் தோன்றுகிறது.