

1976 ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது இசை வாழ்க்கையை தொடங்கிய இளையராஜா , இன்று 'டோரதி ' வரை தனது சூடு குறையாமல் பணியாற்றுகிறார். 16 வயதினிலே , இதயக் கோயில் , நாயகன் , சிந்து பைரவி , கரகாட்டக்காரன், தளபதி , அழகி , காதலுக்கு மரியாதை உள்ளிட்ட 1400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். பல தேசிய விருதுகளையும் , பிலிம்பேர் விருதுகளையும் பெற்று சாதித்தவர்.
இளையராஜா அவரது திரையுலக இசைப் பயணத்தின் 50-வது ஆண்டை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், கடந்த ஜூலை மாதம் முதல் உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அந்த பயணத்தின் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் உள்ள தென்இந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில்
செப்டம்பர் 26 அன்று சிட்னி நகரிலும், அக்டோபர் 5 அன்று பிரிஸ்பேன் நகரிலும் தனது இசை நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளார். இதற்காக உலகெங்கிலும் உள்ள அவரது இசை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிகளுக்காக ஆஸ்திரேலியா சென்ற இளையராஜாவிற்கு, அந்த நாட்டு அரசாங்கம் கவுரவம் அளித்துள்ளது. தமிழ் திரையுலகில் அரை நூற்றாண்டு காலத்தையும் கடந்து, தன் இசையால் லட்சக்கணக்கான ரசிகர்களை வசப்படுத்தியுள்ளவர் இளையராஜா. அவரது நீண்ட கால இசைப் பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் அவருக்கு சிறப்புப் தபால் தலையை வெளியிட்டு கவுரவித்துள்ளது.
இந்திய இசையமைப்பாளர் ஒருவருக்கு , சர்வதேச அளவில் ,அதுவும் ஒரு நாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து தபால்தலை வெளியிட்டு , உயர்ந்த மரியாதை வழங்கப்படுவது, இதற்கு முன் அறியாத சிறப்பான நிகழ்வாகும். தனக்கு தபால் தலை வெளியிட்ட ஆஸ்திரேலிய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக , இளையராஜா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில் "விக்டோரியன் (ஆஸ்திரேலியா) அரசாங்கத்தின் நிதித்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு என்வர் எர்டோகன் அவர்களுக்கும், பிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது 50 ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டமைக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது , இளையராஜாவிற்கு மேலும் ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. 2027 ஆம் ஆண்டு நடைபெறும் 99 வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் , சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இந்தியாவின் சார்பில் அதிகாரப்பூர்வமாகப் போட்டியிட ‘கோந்தல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மராட்டி மொழியில் உருவான இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இளையராஜா இசையமைத்துள்ள படங்கள் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையில் போட்டியிட்டது இல்லை. இதுவரை 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள சாதனையும் உலகளவில் இளையராஜாவிடம் உள்ளது. தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , மராட்டி , ஹிந்தி , இங்கிலீஷ் என்று இளையராஜா ஏராளமான மொழித் திரைப்படங்களில் தனது இசைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது ஆஸ்திரேலிய அரசின் இளையராஜாவிற்கு வழங்கிய கவுரவத்தினை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.