
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜாவுக்கு, இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களுக்கு இமையமைத்து சாதனை ராஜாவாக திகழும் இளையராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியான ‘விடுதலை-2' படமும் ரசிகர்களை தாளம் போட வைத்துள்ளது. இன்றும் இளம் தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு தனது காந்த இசையின் மூலம் சவால் விட்டு வருகிறார்.
90-களில் கொடி கட்டி பறந்த இளையராஜாவின் பாடல்களுக்கு இன்றும் பெரியளவில் ரசிகர்கள் உள்ளனர் என்றே சொல்ல வேண்டும். அன்றைய பாட்டிகள் முதல் இன்றைய இளம் தலைமுறையினர் வரை அனைவருமே இவரது இசைக்கு ரசிகர்களாகவே உள்ளனர். இன்றும் அவரது மெல்லிசை பாடல்களை கேட்ட பின்னர் தான் தூங்க செல்லும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனில் இசையின் மூலம் நம்முடைய உணர்வுகளை மாற்றும் திறன் இவரின் பாடல்களுக்கு உண்டு.
1976-ம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசையமைத்தன் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மூலம் இவர் பிரபலமானார். அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. "கண்ணன் ஒரு கைக்குழந்தை", "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" போன்ற பாடல்கள் இவருக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன.
இந்திய அரசு உயரிய விருதுகளான பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
இராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் 'மேஸ்ட்ரோ' என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ்த் திரைப்படக் கலைஞர்களால் 'மேஸ்ட்ரோ' என்று அழைக்கப்படுகின்றார்.
கடந்தாண்டு, ‘ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்திருக்கிறேன். இது எனக்கு சந்தோஷமான செய்தி', என்று இளையராஜா குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் சிம்பொனியின் இசை பயணம் குறித்த முன்னோட்ட வீடியோ, யூ-டியூப்பில் வெளியானது. 9 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் சிம்பொனி இசையை இளையராஜா உருவாக்குவது முதல் வெளிநாட்டவர்கள் இளையராஜாவை பற்றி எடுத்துக்கூறுவது உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி படு வேகமாக வைரலான நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சிம்பொனி நேரலை நிகழ்ச்சி வருகிற மார்ச் 8-ந்தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.