
தெலுங்கு, தமிழ் பட உலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகார்ஜுனா. தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த அமலாவைக் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினரின் ஒரே மகன் நடிகர் அகில் அக்கினேனி.
நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லட்சுமிக்கும் பிறந்தவர்தான் நடிகர் நாக சைதன்யா. இவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகர் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நடிகை சோபிதா துலிபலாவை காதலித்து கடந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
நாகார்ஜுனாவை போல அவருடைய மகன்களும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். 30 வயதான அகில் அக்கினேனி அமெரிக்காவில் கலிபோர்னியாவின் சான் ஜோஸில் பிறந்தவர். நடிகர் அகில் அக்கினேனி தெலுங்கில் நடித்து வெளியாகும் படங்கள் எல்லாம் பெரிதாக ஓடாத நிலையில், சிசிந்திரி, ஆடடுகுண்டம் ரா, மிஸ்டர் மஜ்னு, ஏஜெண்ட் போன்ற சில படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது என்றே கூற வேண்டும்.
அகில் அக்கினேனியும் மும்பையை சேர்ந்த ஜைனப் ரவ்ட்ஜிம் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்தாண்டு நவம்பர் 26-ம்தேதி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்களின் நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, நடிகர் நாகார்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் “ஜைனாபை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த இளம் தம்பதியரை வாழ்த்த எங்களுடன் இணையுங்கள். மேலும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி, மற்றும் உங்களது எண்ணற்ற ஆசீர்வாதத்துடன் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்,” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அகில் அக்கினேனி திருமணம் செய்து கொள்ளபோகும் காதலி ஜைனப் ஒரு இஸ்லாமிய பெண். இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரின் மகள். ஓவியக் கலைஞரான ஜைனப் ரவ்ஜீயும் அகிலும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்தாண்டு நிச்சயதார்த்தம் நடந்தநிலையில் தற்போது திருமணம் நடைபெற உள்ளது.
அகில் அக்கினேனி மற்றும் ஜைனப் திருமணம் வரும் மார்ச் 24-ம்தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அகிலின் மூத்த சகோதரர் நாக சைதன்யாவைப் போலவே, இவரும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது.
அகில் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோ அல்லது நாக சைதன்யா, சமந்தா திருமணம் நடந்த ஐகானிக் ஸ்டுடியோவில் நடைபெறலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
2016-ம் ஆண்டில் அகில் அக்கினேனிக்கும் தொழிலதிபரான ஜி.வி. கிருஷ்ணா ரெட்டியின் பேத்திக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், வெளிவராத காரணத்தால் இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டது.
அகில் அக்கினேனி திருமண தேதி அறிவித்த நிலையில் அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் நாகார்ஜுனாவின் வீட்டில் ஒரே கல்யாண கலாட்டாதான் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.