.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
தனது வசீகரம், நடிப்புத் திறன், கவர்ச்சி மற்றும் தொற்றுப் புன்னகையால் உலகளவில் மில்லியன் கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, 'நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்ததன் மூலம் 'பான் இந்தியா' நடிகையாவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
2016-ம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், அந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக இவர் நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமில்லாமல் அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.
இந்நிலையில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இவர் சமீபத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' படத்திலும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா' படத்தில் கிராமத்து பெண்ணாக இவர் ஏற்று நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தேசிய அளவில் பாராட்டைப் பெற்றது மட்டுமில்லாமல் அவரை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். அதன்பிறகு தான் இவருக்கு ஜாக்பாட் அடித்தது என்று சொல்லலாம்.
விஜய் ஜோடியாக இவர் நடித்த 'வாரிசு' படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. அதனைத்தொடர்ந்து இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக கவர்ச்சியிலும் தாராளம் காட்டி நடித்த 'அனிமல்' படம் ரூ.1,000 கோடி வசூலை குவித்து சாதனை படைத்தது. இந்தியில் அறிமுக படத்திலேயே பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் வகையில் ராஷ்மிகா அதிக கவர்ச்சியில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அல்லு அர்ஜூனுடன் அவர் நடித்த ‘புஷ்பா-2' ரூ.1,850 கோடி வசூல் செய்துள்ளது. இப்படி நடிகை ராஷ்மிகா கடைசியாக நடித்த மூன்று படங்களும் இதுவரை ரூ. 3000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
'அனிமல்', 'புஷ்பா -2' திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர் உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். இப்படி சாதனை மேல் சாதனை படைத்து தனது அழகாலும், கவர்ச்சியாலும், புன்னகையாலும் நடிகை ராஷ்மிகா பல முன்னணி கதாநாயகிகளை பின்னுக்கு தள்ளி டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். அந்தவகையில் அனைவராலும் விரும்பும் நடிகையாகவும், தயாரிப்பாளர்களுக்கு ராசியான நடிகையாகவும், ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாகவும் வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தான் நம்பர்-1 ஹீரோயின் என ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு திரையுலகை தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்த நடிகை ராஷ்மிகா படத்திற்கு ரூ.15 கோடி வரை பெறுவதாக கூறப்படுகிறது. நடிகை ராஷ்மிகாவின் நடிப்பில் 'குபேரா', 'தி கேர்ள்பிரண்ட்', 'சாவா', 'சிக்கந்தர்' என்ற படங்கள் வரிசையாக திரைக்கு வர தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.