

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கு முன்னதாக இன்று மதியம் 3:30 மணியளவில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. தளபதி விஜய்க்கு ஜனநாயகன் கடைசி படம் என்பதால், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் மலேசியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்றே தனி விமானம் மூலம் மலேசியா வந்தடைந்த விஜய்க்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தளபதி கச்சேரியாக நடக்கும் இந்த விழாவில் விஜய்யின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். விஜய்யின் பாட்டி இன்று காலை அவரை சந்தித்து ஆசீர்வாதம் செய்துள்ளார்.
மேலும் விஜய்யை இயக்கிய இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜய்க்கு மறக்க முடியாத தருணத்தை பரிசாக கொடுக்க உள்ளனர்.
விஜய் நடித்த படங்களில் இருந்து, பல்வேறு பாடல்கள் இன்றைய இசையமைப்பு விழாவில் பாடப்பட உள்ளன. மேலும் இசையமைப்பாளர் அனிருத், விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய பாடல்களை மலேசியாவில் பாடி அசத்தவுள்ளார்.
தளபதி கச்சேரி விழாவிற்கு தொடர்ந்து தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். அவ்வகையில் காலை 9:30 மணி அளவில் பாடகி ஸ்வேதா மோகன், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன் மற்றும் அட்லி ஆகியோர் மலேசியாவிற்கு வந்துள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் மைதானத்தில் தளபதி கச்சேரி விழாவிற்கு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய தளபதி கச்சேரி விழாவில் கிட்டத்தட்ட 80,000 முதல் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் அனுராதா ஸ்ரீராம், க்ரிஷ், சைந்தவி, ஹரிசரண் மற்றும் திப்பு உள்ளிட்ட பாடகர்கள் விஜய் நடித்த படங்களிலிருந்து பாடல்களை பாட உள்ளனர். இது ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மட்டுமல்ல; நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமா கொடுக்கப் போகும் மறக்க முடியாத நினைவுகளாகும்.
சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் இறங்கியுள்ள விஜய்க்கு, தமிழ் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க உள்ளனர்.
ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் பேசும் கருத்துக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அவ்வகையில் இன்று விஜய் என்ன பேசப்போகிறார் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இருப்பினும் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் சார்ந்த எதைப் பற்றியும் பேசக்கூடாது என மலேசிய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், விஜய் அரசியல் பற்றி பேச வாய்ப்பில்லை. இருப்பினும் நிச்சயமாக ஏதேனும் ஒரு குட்டி ஸ்டோரியை ரசிகர்களுக்காக அவர் சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் சார்ந்து பேசக்கூடாது என்பதால், தனது அன்பான ரசிகர்கள் வாழ்க்கையில் முன்னேறும் விதமாக ஊக்கமளிக்கும் ஒரு குட்டி ஸ்டோரியை விஜய் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகன் திரைப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியான நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் செல்ல மகளே என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பாடலை பாடியது விஜய் தான் என்பதால், இன்றைய இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் பாடுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜயின் சினிமா பயணத்தில் கடைசி விழாவாக ‘தளபதி கச்சேரி’ களைகட்டப் போவது உறுதி.