

மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் சஞ்சனா நடராஜன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஜான் டே. கேரள தமிழக எல்லையில் சில சிறுவர்கள் காணாமல் போகிறார்கள். இந்த வழக்குகளை இரண்டு மாநில காவல்துறையும் விசாரித்து வருகிறது.கேரளாவில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் அர்ஜுன் தாஸ் இந்த வழக்கை விசாரிக்கிறார். தமிழ்நாட்டில் சஞ்சனா நடராஜன் விசாரிக்கிறார். பெரும்பாலும் காணாமல் போகும் சிறுவர்கள் மீண்டும் கிடைப்பதில்லை அல்லது பிணமாக கிடைக்கிறார்கள்.
ஹிரதய் என்ற சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக மீண்டும் அவனின் பெற்றோர்களிடம் கிடைக்கிறான். ஆனால் அந்த சிறுவனுக்கு தான் யார் என்று மறந்து விடுகிறது. அதற்காக அந்த சிறுவனுக்கு பெற்றோர்களுடன் சேர்ந்து சஞ்சனாவும், அர்ஜுன் தாசும் மனநல சிகிச்சை தருகிறார்கள். ஒரு கட்டத்தில் பல்வேறு இடங்களை தேடி அலையும் அர்ஜுன் தாஸ் இந்த வழக்கின் அடிப்படை தமிழ்நாட்டின் ஓரிடத்தில் இருக்கிறது என்று கண்டறிந்து தமிழ்நாட்டிற்கு வந்து சில விஷயங்களை செய்கிறார்.
அவர் செய்யும் விஷயத்தில் சிறுவர்களை கடத்தும் குற்றவாளி பிடிபட்டாரா அல்லது அந்த சிறுவர்களுக்கு என்ன ஆனது? என்று சொல்கிறது மீதி கதை.
படத்தின் பிளஸ்..
பொதுவாக திரில்லர் படங்களுக்கு சில வரைமுறைகளை வைத்திருப்பார்கள். அதுபோல இந்த படத்தில் பெரிய அளவில் எந்த இலக்கண விதிகளையும் பின்பற்றாமல் மெதுவாக அதிகபட்ச பரபரப்பு இல்லாமல் நிதானமாக செல்கிறது. இது ஒரு வித்தியாசமான த்ரிலர் படம் பார்த்த அனுபவத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.
படத்தில் சஞ்சனா நடராஜன் ஒரு முரட்டு காவல்துறை அதிகாரியாக ஒரு காட்டு காட்டி இருக்கிறார். கொஞ்சமும் சிரிக்காமல் கடுகடுப்பான முகத்தில் ஒரு சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார் சஞ்சனா. இவருக்கு அடுத்தபடியாக நன்றாக இருப்பது ஹிரதயாக நடிக்கும் நீரவ் என்ற சிறுவன். தனது கதாபாத்திரத்தை உள்வாங்கி நடத்தியிருக்கிறார் மாஸ்டர் நீரவ்.
அனுபமா, ஜெயப்பிரகாஷ் இருவரும் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து சபாஷ் போட வைக்கிறார்கள். ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவில் பேசாத மலைகள் கூட ஏதோ வித ஒரு பயத்தை நமக்கு சொல்வது போல் உள்ளது.
சரி இனி மைனஸ் என்ன?
படத்தில் ஹீரோ அர்ஜுன் தாஸ் நன்றாக நடித்து இருக்கிறார். இருந்தாலும் பல காட்சிகளில் கேமரா முன்பு தலையை குனிந்து நடித்தது ஏன் என்று புரியவில்லை. மேலும் இதற்கு முன்பு நடித்த பல படங்களின் நடிப்பை மீண்டும் ரிப்பீட் மோடில் தந்துள்ளார் அர்ஜுன் தாஸ்.
அர்ஜுன் தாஸ் இனி தேர்ந்தெடுக்கு நடிக்கும் கதாபாத்திரங்களில் சரியாக உள்வாங்கி மாறுபட்ட நடிப்பை தந்தால் தொடர்ந்து முன்னணி ஹீரோவாக பயணிக்கலாம். படத்தின் ஒளிப்பதிவு ஸ்ட்ராங்காக இருந்த அளவிற்கு படத்தின் படத்தொகுப்பு இல்லை. சில இடங்களில் சற்று தொய்வு தெரிகிறது. மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம் என்று சொல்ல தோன்றுகிறது.
முடிவாக என்ன சொல்ல?
இது கண்டிப்பாக மாறுபட்ட அனுபவத்தை தரும் படம் தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஒரு சில குறைகள் இருந்தாலும் தீபாவளிக்கு பிறகு அடுத்த வாரத்தில் வந்திருக்கும் படங்களில் ஜான் டே ஒரு மாறுபட்ட திரில்லர் அனுபவத்தை தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒரு மலையாள சாயலில் ஒரு திரில்லர் படங்களை பார்க்க விரும்புவர்களுக்கு ஜான் டே ஒரு சரியான தேர்வாக இருக்கலாம்.
படத்தின் மையக்கதை என்னவென்பதை வெளிப்படுத்தாமல், அந்த மர்மச் சூழலை வாசகருக்கு உணர்த்தி முழுமையான விமர்சனத்தை வாசிக்க வைக்கும்.