

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், சங்கீதா, பவானி ஸ்ரீ நடிப்பில் வெளிவந்துள்ள படம் காளிதாஸ் 2.
ஹீரோ பரத் காவல் துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இவர் கண்ட்ரோலுக்கு உட்பட்ட ஒரு பகுதியில் உள்ள அப்பார்ட்மென்டில் புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கிறது. கொண்டாட்டம் நடக்கும் அன்று இரவு அந்த அப்பார்ட்மென்டில் இருக்கும் மூன்று வயது குழந்தை காணாமல் போகிறது. பரத் தனது குழுவினருடன் அந்த பகுதி முழுவதும் தேடுகிறார். இவரின் உயர் அதிகாரியாக இருக்கும் பவானி ஸ்ரீ சேர்ந்து கொள்கிறார். மறுநாள் காலை அந்த குழந்தையை பிணமாக கண்டெடுக்கிறார்கள்.
இந்த கொலையை செய்தது யார்? என்று விசாரிக்கும்போது அந்த அப்பார்ட்மென்டில் வசிக்கும் ஒரு இளைஞன் மீது சந்தேகம் கொள்ளும் போலீஸ் அந்த இளைஞனை கைது செய்கிறது. இளைஞன், வக்கீல் ஒருவரிடம் உதவியாளராக இருக்கிறார். அந்த வக்கீல் தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த இளைஞனை போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்து செல்கிறார். மேலும் இந்த இளைஞன் குற்றவாளி இல்லை, உண்மையான குற்றவாளியை கண்டுபிடியுங்கள் என்று சொல்லி விட்டு செல்கிறார். உண்மையான குற்றவாளி யார் என்று சொல்கிறது கதை.
இந்த படத்தின் தலைப்பு ஹீரோ பரத்தை மையப்படுத்தி இருந்தாலும், படத்தின் கதை அப்பார்ட்மென்டில் இருக்கும் இளைஞனாக நடிக்கும் அஜய் கார்த்தியை சுற்றி நகர்கிறது. இந்த புது முயற்சிக்காக பாராட்டலாம். வித்தியாசமாக தொடங்கும் கதை ஒரு சண்டை காட்சியில் ஆரம்பித்து, குழந்தை காணாமல் போன பிறகு சூடு பிடிக்கிறது. பரத் விசாரிக்கும் போது, பவானி குறுக்கீடு செய்வது நன்றாக இருக்கிறது.
அப்பார்ட்மெண்ட்டில் உள்ள நபர்களிடம் விசாரிக்கும் போது சில சுவாரசியங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. படத்தின் கிளைமாக்சில் நாம் முற்றிலும் யோசிக்க முடியாத ட்விஸ்ட் ஒன்று இருக்கிறது. இருந்தாலும் அஜய் கார்த்திக்கிற்கு ஒரு பிளாஷ் பேக் இருப்பது கதைக்கு வலு சேர்வதற்கு பதிலாக, கதைக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்துகிறது. இந்த பிளாஷ் பேக் இந்த படத்திற்கு ஒரு மைனஸ் தான்.
கம் பேக் தந்துள்ள சங்கீதா நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார். இவரின் கதாபாத்திரத்தை இங்கே சொன்னால் படம் பார்க்கும் போது சுவாரசியம் குறைய வாய்ப்புள்ளது. ஸோ, இவரின் நடிப்பை வெள்ளித்திரையில் பார்த்து என்ஜாய் பண்ணுங்கள்.
இவருக்கு அடுத்த படியாக அஜித் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். இவரின் நடிப்பு அப்பாவித்தனமும், பயமுறுத்தும் படியாகவும் உள்ளது. பரத், பவானி ஸ்ரீ இருவரின் நடிப்பும் பிரமாதமாக இல்லை என்றாலும் சுமாராகவும் உள்ளது.
சாம் சி.எஸ் இசை, படத்தின் ஒளிப்பதிவு இரண்டும் நன்றாக இருக்கிறது. இந்த இரண்டும் நன்றாக இருந்தும், எடிட்டிங்கில் மிஸ்ஸாகிறது.
மொத்தத்தில் காளிதாஸ் 2 - வேகமாக நகரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், வித்தியாசமான ட்விஸ்ட் கலந்த கிளைமாக்ஸ் காட்சியால் ரசிக்கும் படி இருக்கிறது.