Kadhal Reset Repeat
Kadhal Reset Repeat

விமர்சனம்: காதல் ரீசெட் ரிபீட் - பழைய பாட்டில், புதிய ஒயின்..!

Published on
ரேட்டிங்(3 / 5)

திரை விமர்சனம்: காதல் ரீசெட் ரிபீட் (Kadhal Reset Repeat)

இயக்கம்: ஏ.எல். விஜய்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா

மதராசபட்டினம், தெய்வத்திருமகள், பொய் சொல்ல போறாம் போன்ற படங்களை இயக்கியவர் டைரக்டர் ஏ.எல்.விஜய். இவரின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் 'காதல் ரீசெட் ரிபீட்' (Kadhal Reset Repeat). இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்த காதல் காவியம் ரசிகர்களைக் கவர்ந்ததா என்று பார்ப்போம்.

அதிதி என்ற அழகான இளம் பெண். இசை குழுவில் இருக்கிறார். இவர் இந்த குழுவில் உள்ள ஹரி என்ற இளைஞனை காதலிக்கிறார். அதிதியை சிறு வயது முதல் தெரிந்த சித்தார்த் என்ற இளைஞனும் ஒரு தலையாக காதலிக்கிறார். அதிதி லண்டன் செல்கிறார். சித்தார்த்தும் அதிதிக்கு தெரியாமல் லண்டன் செல்கிறார். அங்கே அதிதிக்கு விபத்து ஏற்பட்டு பழைய நினைவுகளை இழக்கிறார். இவரை காப்பாற்றும் சித்தார்த் தான் அதிதியின் காதலன் என்று அதிதியிடம் பொய் சொல்கிறார். இதை அதிதி நம்பும் நேரத்தில் ஒரிஜினல் காதலன் ஹரி வந்து சேர்கிறார். ஹரியா? சித்தார்த்தா? என்று விடை சொல்கிறது 'காதல் ரீசெட் ரிபீட்'.

ஒரு நல்ல காதல் படத்திற்கு என்ன வேண்டும்? அழகான ஹீரோயின் வேண்டும், இருக்கிறார். நல்ல பாடல்கள் வேண்டும், இருக்கிறது. கண்ணுக்கு குளிர்ச்சியான லொகேஷன் வேண்டும், இதுவும் இருக்கிறது. ஆனால் கதை 'மெமரி லாஸ்' என்ற மூன்றாம் பிறை காலத்து கதை. இதே ஒன்லைனில் பல கதைகள் வந்து விட்டன.

கதையிலும், திரைக்கதையிலும் பெரிய மாற்றம் செய்யாமல் தந்திருக்கிறார் டைரக்டர். படத்தில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் நாம் அனுமானிக்கும் அளவில் தான் உள்ளது. படத்தில் இது போன்ற சில குறைகள் இருந்தாலும், இந்த குறைகளை மறக்க செய்யும் அளவிற்கு ஹீரோயின் ஜியா சங்கர் நடிப்பும் அழகும் இருக்கிறது. காதலன் ஏமாற்றும் போது உடைந்து போவதும், ஒரு குழந்தையின் துள்ளல் போல் எனர்ஜியாக பல காட்சிகள் நடித்துள்ளார். உருவத்திலும், நடிப்பிலும் தமன்னாவின் சாயல் தெரிகிறது. அழகும் நடிப்பும் சேர்ந்த ஒரு ஹீரோயின் தமிழ் சினிமாவிற்கு கிடைத்து விட்டார் என்று தைரியமாக சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: முஸ்தபா முஸ்தபா - விழிப்புணர்வு ஓகே... ஆனா சிரிப்பு தான் வரலைப்பா!
Kadhal Reset Repeat

ஹீரோயினுக்கு மாற்றாக முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருக்கிறார் சித்தார்த்தாக நடிக்கும் மது மகேஷ். ஹரியாக நடிக்கும் அர்ஜுன் அசோக் நடிப்பில் ஒரளவு பரவாயில்லை.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் நம்மை தாலாட்டுகிறது (இந்த பாடல்களை கேட்கும் போது இளையராஜா படத்தின் பாடல்கள் நினைவுக்கு வந்தால் இது யதார்த்தமானதே)

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் ஸ்காட்லாந்து கூடுதல் அழகாக தெரிகிறது.

"பழைய காதல் கதையாக இருந்தாலும் பரவாயில்லை, அழகான லொகேஷன், நல்ல பாடல்கள் மற்றும் நாயகியின் சிறப்பான நடிப்பிற்காகப் படம் பார்க்கலாம்" என்பவர்களுக்கு 'காதல் ரீசெட் ரிபீட்' ஒரு நல்ல சாய்ஸ்!

logo
Kalki Online
kalkionline.com