

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைய மோசடி கும்பல் , தனது கைவரிசையை காட்ட இருந்தது. தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகராக 50 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பவர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தற்போது அரசியல்வாதியாகவும் இருக்கிறார். மக்கள் நீதி மையத்தின் தலைவராகவும் ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவர் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம் தயாரிப்பு நிறுவனம் (RKFI) என்ற பெயரில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார். 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தயாரிப்பு நிறுவனம் கமல் நடிப்பில் ராஜபார்வை என்ற திரைப்படத்தை முதன்முதலாக தயாரித்தது. பின்னர் விக்ரம் , அபூர்வ சகோதரர்கள், சத்யா , தேவர் மகன் , மகளிர் மட்டும் , விருமாண்டி , விஸ்வரூபம் உள்ளிட்ட பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களை தயாரித்து இருந்தது.
கமல் நடிப்பில் மட்டுமல்லாமல் சத்யராஜ் , விக்ரம் , மாதவன் , சிவகார்த்திகேயன் ஆகிய நடிகர்களை வைத்தும் சில படங்களை தயாரித்து வெளியிட்டிருந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆழ்வார் சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக முரளி கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் என்ற திரைப்படத்தை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு அடுத்து ரஜினி நடிக்கும் தர்மன் திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளது.
கடந்த வாரம் ஜூலை 2 ஆம் தேதி , ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மேலாளர் ஆன முரளி கிருஷ்ணனுக்கு ஒரு புதிய வாட்ஸ் அப் நம்பரில் இருந்து மெசேஜ்கள் வந்திருந்தது. அதற்கு முன்னர் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணை இணைய மோசடி கும்பல் முடக்கி இருந்தது. அதற்குப் பின்னர் ஒரு புதிய நம்பரில் இருந்து, அந்த பங்குதாரரின் புகைப்படத்துடன் முரளி கிருஷ்ணனை அழைத்திருந்தனர்.
அவரைப் போலவே பேசி, தான் ஒரு அவசர தேவையில் இருப்பதால் உடனடியாக தனது கணக்கிற்கு ₹38.50 லட்சம் ரூபாய் பணத்தினை அனுப்புமாறு மெசேஜ் அனுப்பி உள்ளனர். இந்த மெசேஜை பார்த்த முரளி கிருஷ்ணன் தயாரிப்பாளரின் வழக்கமான எண்ணிலிருந்து செய்தி வராமல், புதிய எண்ணில் இருந்து செய்து கொண்டிருப்பதால் அவருக்கு சந்தேகமும் வந்துள்ளது. இதனால் உஷாரான முரளி கிருஷ்ணன் அவருக்கு எந்த ஒரு பணமும் அனுப்பாமல் நேரம் கடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக முரளி கிருஷ்ணன் சென்னை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரது புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இணைய மோசடி , ஆள் மாறாட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முரளி கிருஷ்ணனுக்கு தகவல் அனுப்பிய மொபைல் எண் மற்ற விவரங்களை கண்டறியும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற மோசடிகள் சமீபத்திய காலமாக நடைபெற்று வருகின்றன. தெரிந்த நபர்களின் புகைப்படங்களை வைத்துக் கொண்டு வாட்ஸ்அப் மூலமும் பேஸ்புக் மூலமும் அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவசர தேவைக்காக பண உதவி கேட்பது போல் , பண மோசடி செய்கின்றனர். இதிலிருந்து கவனமாக இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.