கண்ணதாசன் பாடல்கள்: நெஞ்சை அள்ளும் அழியா நினைவுகள்!

திரையுலகைக் தன் வரிகளால் ஆண்ட கவிஞரின் பொக்கிஷப் பாடல்கள் பற்றிய ஒரு பார்வை.
கண்ணதாசன்
கண்ணதாசன்Gemini image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on: 

எத்தனையோ பொழுது போக்கு அம்சங்கள் இருந்தாலும், எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முந்திக் கொண்டு நிற்பது திரைப்படங்களே! ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் கெடுதல் செய்வோரைத் தண்டிக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும், அவர்களால் நிறைவேற்ற முடியாத சூழலில், திரையில் நிறைவேற்றும் நாயகனை, ரசிகன் தானே அதனைச் செய்ததாக எண்ணிக் கொண்டாடுகிறான். தன் ஆழ்மன ஆசையை நிறைவேற்றும் நடிகனைப் போற்றிப் பாராட்டி மகிழ்கிறான். இந்த மனத்தத்துவத்தை நன்கறிந்த இயக்குனர்களால் தான் வெற்றிப் படங்களைக் கொடுக்க முடிகிறது!

ஆனாலும், சினிமாவை வெற்றி  பெறச் செய்ய மிகப் பெரிய கூட்டணி தேவைப்படுகிறது. கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, ஸ்டண்ட், இயக்கம் என்று ஏகப்பட்டவையின் கூட்டுக் கலவை மிகச் சரியான விகிதத்தில் கலந்திருந்தாலே, ரசிகனை உற்சாகப்படுத்தும், ஜெயிக்கவும் வழி வகுக்கும். இந்த மிக்சரில், சில சமயம் ஒன்று சற்றே குறைந்தாலும் மற்றவை அதனை எளிதாக ஈடுகட்டி விடும்.

1. நல்ல கதைக்காக ஓடிய படங்கள் உண்டு.

2. இனிய பாடல்களுக்காக ஓடியவை பல.

3. சிலவற்றில் ஒளிப்பதிவு மனதைக் கவர்வதுண்டு.

4. திரில் சண்டைகள் பலசமயம் நெஞ்சை நிறைப்பதுண்டு.

5. சில நடிகை, நடிகர்களுக்காகவே பல படங்கள் ஓடுவதுமுண்டு.

6. இயக்கும் நுட்பத்தால் பல படங்கள் ஃபாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாவதுண்டு.  

இப்படியெல்லாம் இருந்தாலும், இனிய பாடல்கள் பார்ப்போரின் இதயத்தைக் கொள்ளை கொண்டு, மீண்டும் மீண்டும் ரசிகனைத் தியேட்டரை நோக்கி இழுப்பதுண்டு. அதோடு மட்டுமில்லாமல், ஒலி வடிவில் அந்தப் பாடல்களைக் கேட்கும் வசதியையும் விஞ்ஞானம் நமக்குக் கொடுத்திருப்பதால், அந்தப் பாடல்களைத் திருப்பித் திருப்பிக் கேட்பதால் அவை மனதில் ஆழப்பதிந்து விடுகின்றன.

சுமார் இரண்டரை, மூன்று மணி நேரம் இயக்குனர் சொல்ல வரும் கதையைத் தன் ஒரே பாடலால் கூட சில நல்ல கவிஞர்கள் உணர்த்தி விடுவதுண்டு. மூன்று மணி நேர கேரக்டரை, மூன்றே நிமிடத்தில் நமக்குத் தெளிவாகச் சொல்லி விடுவதுமுண்டு. அதற்குத் தனி சாமர்த்தியமும், உலகோதய ஞானமும், கதையுடன் ஒன்றிப் போகும் பக்குவமும் வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கே பெற்றவர்தான் நமது கவிஞர் கண்ணதாசன்!

அப்பப்பா! எத்தனையெத்தனை பாடல்கள். இதயப் புண்ணை மேலும் ரணமாக்கவும், ரணமானதை மயிலிறகை மருந்தில் தோய்த்துத் தடவி ஆற வைக்கவும் கற்ற அற்புதக் கவிஞரல்லவா அவர்!

கண்ணதாசன்
கண்ணதாசன்Gemini image

இன்றைக்கு 63 ஆண்டுகளுக்கு முன்னர் (1963), முற்பிறவியின் தொடர்ச்சியைக் குறிக்கும் விதமான கதைக் களத்துடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் வெளியானது.

கதைக் கருவைத் தன் பாடல் வரிகளால் படம் பிடித்துக் காட்டினார் கவிஞர்!

“நெஞ்சம் மறப்பதில்லை

அது நினைவை இழக்கவில்லை!

ஒரு பொழுதேனும் உன்னுடன் நான் 

உயிரால் இணைந்திருப்பேன்!

அதை இறப்பினிலும் 

மறு பிறப்பினிலும் நான் 

என்றும் நினைத்திருப்பேன்!"

அதே முற்பிறப்பு தொடர்பினை 1971 ல் வந்த ‘பிராப்தம்’ படமும் கொண்டாட, அதற்குப் பாடலெழுதிய நம் கவிஞர் இப்படி எழுதினார்:

“சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் முடிவே இல்லாதது!

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது!”

மகாபாரதத்தில், பரிதாபத்திற்கும், இரக்கத்திற்கும், கருணைக்கும், நெகிழ்ச்சிக்கும் உரியவர் கர்ணன் என்பதை அனைவருமே அறிவோம். கொடுத்துச் சிவந்த கரங்களுடனும், கொடை வள்ளல் தன்மையுடனும் கொடிகட்டி வாழ்ந்தாலும், பிறப்பின் ரகசியம் தெரியாமல் அதன் காரணமாகவே அலைக்கழிக்கப்பட்டு, அல்லலுக்கு ஆளாகி ஆயுள் முழுவதும் தம்பிகளுக்கு எதிராகவே சண்டை போட்டு வாழ்ந்த ஒரு சங்கடப் பிறவி, கர்ணன்!

கண்ணதாசன்
கண்ணதாசன்Gemini image

இந்த மண்ணுலகம், மனித உடல் மண்ணுக்கோ, நெருப்புக்கோ இரையாகும் வரை எதிர்ப்பைத் தெரிவித்து விட்டு மரணத்திற்குப் பிறகு அவனின் மகத்துவங்களை அடுக்கும். இதிகாச காலந்தொடங்கி இன்று வரை நடந்து வரும் இந்த நடைமுறை தானே கர்ணனுக்கும் நடந்தது!

சுத்த வீரனான அவனை, தர்மத்தை நிலை நாட்டி அதர்மத்தை ஒழிப்பதற்காக, அந்தப் பரம்பொருள் கிருஷ்ணனே இறங்கி வந்து பாண்டவர்களுக்கு உதவினார்.

இதையும் படியுங்கள்:
கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு: மனிதரோடு இணைந்த மகத்துவக் கவிஞர்!
கண்ணதாசன்

வஞ்சகமாகக் கர்ணன் உயிருக்கு உலை வைத்தார். கர்ண மாவீரனின் கதையைக் கிருஷ்ணர் வாயாலேயே சொல்ல வைத்து, வஞ்சகம் செய்தது தானே என்றும் தன்னிலை விளக்கம் அளிக்கும் இந்த ஒரே பாடல், கர்ணனின் வாழ்க்கைச் சரிதத்தையே நமக்கு உணர்த்தி விடும் அற்புதப் பாடல்!

“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா- கர்ணா

வருவதை எதிர்கொள்ளடா!

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க

சேராத இடஞ் சேர்ந்து 

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா- கர்ணா 

 வஞ்சகன் கண்ணனடா!"

இதிகாச காலப் பாடல் அதுவென்றால், இக்காலக் காதல் பாடல் ஒன்றும் கவிஞரால் அரங்கேற்றப்பட்டு, அகிலப் புகழையே அள்ளி வந்தது. நாயகனின் உள்ளக்கிடக்கையை உரித்துக்காட்டிய அந்தப் பாடல் இதோ:

“எங்கிருந்தாலும் வாழ்க!

 உன் இதயம் அமைதியில் வாழ்க!

 மஞ்சள் வளத்துடன் வாழ்க!

 உன் மங்கலக் குங்குமம் வாழ்க!

 வருவாய் என நான் 

 தனிமையில் நின்றேன்!

 வந்தது வந்தாய் 

 துணையுடன் வந்தாய்!

 துணைவரைக் காக்கும் 

 கடமையும் தந்தாய்

 தூயவளே நீ வாழ்க!"

இதையும் படியுங்கள்:
எம்.எஸ்.வி - கவிஞர் வாலி - எஸ்.பி.பி - கூட்டணியில்... 'முத்தான முத்தல்லவோ' படப் பாடலின் ரகசியம்!
கண்ணதாசன்

எவ்வளவுதான் கஷ்டப்பட்டு இயக்குனர் கற்பனை செய்து திரையில் அதனைக் கொண்டுவர முயன்றாலும் நடிக, நடிகையர் தத்ரூபமாக நடித்தாலும், அதற்கு முழு வடிவமும் கொடுப்பது பாடல்களே! போகின்ற இடங்களில் எல்லாம் ரசிகர்கள் ஹம்மிங் செய்து மகிழ்வதும் அந்தப் பாடல்களைத்தான்! அப்படி அழியாப் புகழ் பெற்ற பாடல்களைத் தந்து இறவாப் புகழுடன் இன்றும் கவிஞர் நம் இதயங்களில் வாழ்ந்து வருகிறார்!

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!’ என்பதுபோல், நாம் மேலே கொடுத்துள்ளவை ஓரிரண்டு சாம்பிள்கள் மட்டுமே! இது போன்று எண்ணற்ற திரைக் கதைகளை, கதாபாத்திரங்களின் தன்மையை, தன் பாடல்கள் மூலம் பகிரங்கப்படுத்தி பார்ப்போரின் மனதில் நிலையான இடத்தைப் பெற உதவியவர் கவிஞரே! பல இயக்குனர்களின் பணியை எளிதாக்கியவர். பல நடிகர்கள் மேலேறவும், இசையமைப்பாளர்களும், பாடகர்களும் நிலையான இடத்தைப் பிடிக்கவும் உதவியவர் அவர் என்றால், அது முழுவதும் உண்மையே!

வாசகர்கள் கவிஞர் கண்ணதாசனின் பொன்னான பாடல்களை நினைவுகூர்ந்து, தமிழ் சினிமாவின் பொற்காலத்தை மீண்டும் உணர்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com