

ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்த க்ரைம் த்ரில்லர்!
26/6/2026 முதல் கேரளாவில் வெளியான இந்தப்படம் இப்போது ஆங்கில சப் டைட்டிலுடன் தமிழகத்தில் 3/7/2026 முதல் ஓடிக்கொண்டிருக்கிறது.
கோப்ரா என்ற தமிழ்ப்படத்தில் நடித்த மலையாள நடிகரான ரோஷன் மேத்யூ Adi Kapyare koottanani (2015) படத்தில் அறிமுகமாகி Koode (2018),Kappela (2019),Night Drive (2021), Oru thekkan thallu case(2022), Ronth (2025) உட்பட 33 படங்களில் நடித்திருக்கிறார். இது அவரது 34வது படம்.
நாயகன் 5 வயது சிறுவனாக இருக்கும்போது தன்னுடைய் அம்மா, அப்பா, தங்கையுடன் ரயில் பிரயாணம் மேற்கொள்கிறான். அப்போது அவன் அமர்ந்திருந்த ஜன்னலோர சீட்டைக்கேட்கும் தங்கையிடம் வாக்குவாதம் செய்து இடம் தர மறுத்து வேறு ஜன்னல் சீட்டுக்கு அனுப்புகிறான். சில நிமிடங்களில் அவள் காணாமல் போகிறாள். கண்டுபிடிக்கவே முடியவில்லை. தன்னால்தான் தங்கை காணாமல் போனாள் என்ற குற்ற உணர்வு பல வருடங்களாக நாயகனின் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
இப்போது நாயகன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்கிறான். அவனது முதல் கேசே கிணற்றில் விழுந்து இறந்து கிடக்கும் ஒரு பெண்ணின் கேஸ் தான். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தலையின் பின் பக்கம் அடித்துப்பின் கிணற்றில் தள்ளிக்கொலை செய்யப்பட்டிருக்கிறாள் எனத் தெரிய வருகிறது.
அந்தப் பெண்ணின் தோளில் ராஜூ என்று கன்னடத்தில் பச்சை குத்தப்பட்டு இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் என்பதும் ஒரு ஆளுடன் நிற்கும் போட்டோவும் கிடைக்கிறது. நாயகன் இந்தக் கேசை விசாரிக்கும் போது, அந்தப் பெண்ணுக்கு கணவன், கள்ளக்காதலன் என இருவருடன் தொடர்பு இருப்பதை அறிகிறான். இருவரில் ஒருவர்தான் கொலையாளி என்பதை யூகிக்கிறான்.
இதற்குப் பின் நிகழும் வித்தியாசமான திருப்பங்களும், இறந்த பெண் நாயகனின் தொலைந்து போன தங்கையா? வேறு நபரா? என்பதும் தான் மீதி திரைக்கதை.
நாயகனாக ரோஷன் மேத்யூ பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 20 வருடங்கள் ஆகியும் தன் தங்கையை நினைத்துக்குற்ற உணர்வில் மருகுவது அருமை. போலீஸ் விசாரணையில் தேவையற்ற ஹீரோ பில்டப் எல்லாம் காட்டாமல் அடக்கி வாசித்திருக்கிறார்.
நாயகனின் மனைவியாக அதுல்யா சந்திரா கெஸ்ட் ரோலில் வருகிறார். ஜிம்னாஸ்டிக் ஸ்லிம் பாடியும், கர்லிங ஹேர் ஸ்டைலும் அவரது பிளஸ்.
மர்மமான முறையில் இறந்த பெண்ணாக ஸ்ருதிமேனன் நடித்திருக்கிறார். இந்தக் கதையைப் பொறுத்தவரை இவர் தான் நாயகி.
ஓப்பனிங்க் சீனிலேயே பிணமாக வந்தாலும் பிளாஸ்பேக் காட்சிகள் உயிர்ப்போடு விளங்க இவரது நடிப்பும் முக்கிய அங்கம் வகிக்கிறது. இவரைச் சுற்றித்தான் மொத்தக் கதையும் பயணிக்கிறது. இவரது விழிகள் உயிர்ப்புடன் நடித்திருக்கின்றன.
நாயகியின் கணவனாக நடித்திருப்பவர் அச்சு அசல் ஒரு குடிகாரனின் உடல் மொழியை நகல் எடுத்திருக்கிறார். நாயகியின் காதலனாக வருபவர் நடந்த சம்பவத்தை மாற்றி மாற்றித் திரித்துக் கூறி, போலீசைக் குழப்புவதில் பிரமாதப்படுத்துகிறார். நாயகனுடன் பணிபுரியும் சக போலீஸ் ஆபீசராக பைஜூ சந்தோஷ் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சைஜூ மாரத், நிகில் கே மேணன் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத, இயக்கி இருப்பவர் பத்மகுமார். பின்னணி இசை மர்மம் நிறைந்த பகுதிகளுக்கு உயிர்ப்பு ஊட்டுகிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் தரம்.
சபாஷ் டைரக்டர்
1. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் தர்மாடம் போலீஸ் ஸ்டேஷன் ஏரியாவில் நடந்த உண்மை சம்பவம் இது என்பதால் உயிர்ப்புடன் இருக்கிறது.
2. கிணற்றில் விழுந்திருக்கும் நாயகியைப் போலீஸ் வலையில் மீட்கும் காட்சி தத்ரூபம்.
3. நாயகியின் கணவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் போலீசை திசை திருப்ப சொல்லும் கதை செம.
4. நாயகியின் கணவன் ராஜூ, காதலன் புவனேஷ், குழந்தைகள் இருவர், அரிக்கேன் விளக்கு என நான்கு அத்தியாயங்களாகப் பிரித்து குழப்பமில்லாமல் கதை சொன்ன பாங்கு அருமை.
5. இடைவேளை ட்விஸ்ட், ப்ரீ க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இரண்டும் அருமை.
6. ஒரு பக்கத்தில் முடிந்துவிடக்கூடிய சின்னக்கதை தான். ஆனால் அதைத் திரைக்கதையாக்கிய விதம் அருமை.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்:
1. ரெகுலராகக் கணவன் வீட்டுக்கு வரும் சமயம் இதுதான் என்பது நாயகிக்குத் தெரியாதா? அந்த நேரத்தில் காதலனுடன் நெருக்கமாக இருப்பது என்ன தைரியத்தில்?
2. கூலி வேலை செய்யும் ராஜூவின் வீடு அவ்ளோ விசாலமாக இருப்பது எப்படி?
3. ராஜூவைப் பிடிக்கும் சமயம் போலீஸ் தேவை இல்லாமல் ராஜூவின் நண்பர்களுடன் சண்டை செய்வது எதற்கு?
4. நாயகியின் கணவன் என்று சொல்லிக்கொள்பவனின் ஸ்டேட்மெண்ட்டை நம்பி போலீஸ் அவனை விட்டு விடுவது எப்படி? (நிஜ சம்பவத்தில் அப்படித்தான் விட்டார்களாம்)
5. மெயின் கதை முடிந்த பின் குழந்தைகளைத்தேடும் படலம் இழுவை. ஷாம் நடித்த 6 மெழுகுவர்த்திகள் உட்பட பல படங்களில் பார்த்தவை தான்.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+
ஃபைனல் கமெண்ட் - பொறுமையாக செல்லும் திரைக்கதை என்பதால் பொறுமைசாலிகள் பார்க்க வேண்டிய நல்ல க்ரைம் திரில்லர் இது.
ரேட்டிங் 3/5
இந்தப் படத்தின் முழுமையான அலசலைப் படிப்பதன் மூலம், ஒரு சாதாரண க்ரைம் கதையை உண்மைச் சம்பவத்தின் மூலம் எப்படி சுவாரஸ்யமான த்ரில்லராக மாற்றலாம் என்பதைப் புரிந்துகொண்டு, உங்கள் அடுத்த வாரத் திரைப்படத் தேர்வினைச் சரியாகத் திட்டமிட முடியும்.