

செல்போன், சமூக ஊடகங்கள், லைக், ஷேர் மட்டுமே உலகம் என்று வாழும் பெண். அலைபேசியே கிடையாது. மனிதர்களோடு மட்டுமே தொடர்பு என்று வாழும் இளைஞன். இவர்களுக்கிடையே வரும் காதல். அந்தக் காதலுக்குக் கூட லைக் எனப்படும் ஓர் ஆப் (APP) அல்லது தொடர்பின் அங்கீகாரம் வேண்டும் என்று நினைக்கிறாள் அந்தப் பெண். இந்தக் காதல் கைகூடியதா என்பது தான் கதை.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி எஸ்.ஜே சூர்யா உள்படப் பலர் நடித்துள்ள படம் தான் lik (life insurance kompany) லைக் எனப்படும் அந்த நிறுவனத்தின் முதலாளி எஸ்.ஜே சூர்யா. உலகிலுள்ள காதலர்கள், தம்பதியர் அனைவரும் இந்த லைக்கின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவர்களுடைய காதல் மதிப்பெண்கள் இந்த லைக் கொடுக்கும். அதை வைத்து அவர்கள் சேர்வதும் பிரிவதும் நடக்கும். இப்படி ஒரு பின்னணி. 2040 இல் நடப்பது போன்ற கதைக்களம்.
களமாகப் பார்த்தால் கொஞ்சம் வித்தியாசம். இதை வைத்துப் பரபரப்பாக ஒரு காதல் கதையைக் கொடுத்திருக்கலாம். அதற்குத் தான் இயக்குநர் விக்னேஷ் சிவன் முயன்றிருக்கிறார். ஆனால் அதில் பாதியளவு கூட தாண்டவில்லை என்பது தான் சோகம். காதலர்களுக்கு இடையேயான சண்டை சூரியன் எனப்படும் சூர்யா பாத்திரத்தின் மூலம் வருகிறது. ஆனால் அதை நாயகன் வில்லன் சந்தையாக மாற்றியதில் தான் சறுக்கி விட்டது.
காதலர்கள் பிரிவதிலும் சேர்வதிலும் ரசிகர்களுக்கு ஓர் அழுத்தமும் மகிழ்ச்சியும் இருக்க வேண்டும். இங்கே அது எதுவுமே இல்லை. 2040 இலும் மாறாத ஒரு விஷயம் உண்டு. அது தான் கண்டதும் காதல் என்கிறார் நாயகன் பிரதீப். அது தான் தமிழ் சினிமாவின் தலையெழுத்து என்று நமக்குத் தோன்றுகிறது.
செல்போன் மூலம் சமூகத்தில் பிரச்சினைகள் ஏற்படுவது உண்மை. ஆனால் செல்போன்கள் மட்டுமே காரணம். அது தவிர்க்கப் பட வேண்டிய தீமை என்று போராடும் அன்புக் கடல் என்ற வேடத்தில் இயக்குநர் சீமான். நாயகனின் அப்பா. இதை அவர் செய்வதற்கும் தனிப்பட்ட இழப்பு ஒன்று காரணமாக இருக்கிறது. தன்னுடைய மகன் எந்தக் காலத்திலும் செல்போன் அடிமையாகத் தலை குனிந்து இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். செல்போன் இருந்தால் தான் காதல் என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறார் மகன்.
இந்தப்படத்தின் முதல் ஹீரோ அனிருத் தான். பாடல்கள் பின்னணி இசை எனப் படம் முழுதும் அட்டகாசப் படுத்தி இருக்கிறார். தீமா, பட்டுக் குட்டிமா, எனக்கென யாருமில்லையே என்று பாடல்கள் பக்கா திரையரங்கு அனுபவங்கள். இது போதாதென்று எஸ்.ஜே சூர்யாவுடன் வரும் ஒரு ரோபோட்டுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். அது நச்சென்று பொருந்தி இருக்கிறது. இதற்குக் கைகோத்து அமர்க்களப்படுத்தி இருப்பவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஒரு கதை. அதில் தமிழ் நாட்டில் நடைபெறும் மாற்றங்கள் எனப் படத்தை வண்ணமயமாக்கி இருக்கிறார். கூவம் சர்க்கஸ், கோலிவுட் லோகோ, பெரியார் ஐடி பார்க் எனக் கற்பனை செய்திருக்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளில் இப்படியொரு வளர்ச்சி கற்பனையில் மட்டுமே சாத்தியம்.
பிரதீப் ரங்கநாதன் மூன்று மாபெரும் வெற்றிக்குப் பிறகு வந்தாலும் அவருக்கென்று ஓர் உடல் மொழி, பார்வை என்று இருக்கிறார். மேக்கப், ஹேர் ஸ்டைல், இரண்டிலும் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. சோகமாகவே இருப்பது போலத் தோன்றுகிறது. பாடல்களில் நடனத்தில், அதை ஈடு செய்து விடுகிறார்.
எஸ்.ஜே சூர்யாவுடன் மோதும் காட்சிகளில் தனது முத்திரையைப் பதிக்கிறார். எஸ்.ஜே சூர்யாவுக்கு இது போன்ற வேடங்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. மிக இயல்பாகக் கடந்து விடுகிறார். சில சமயம் அவருடைய வசனங்களும் ஒரு காட்சியில் நடனமும் மிகப் பலத்த வரவேற்பைப் பெறுகிறது.
க்ரித்தீ ஷெட்டி அழகாக இருக்கிறார். கொஞ்சமே கொஞ்சமாக நடிக்கிறார். அவர் அம்மாவாக வாளமீனு என்ற பாத்திரத்தில் மாளவிகா. ஷாரா, கௌரி கிஷன், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி என்று மற்றும் பலர் வந்து போகிறார்கள்.
காமெடி படமாக எடுப்பதா கருத்து சொல்வதா காதல் படமாகக் காட்டுவதா என்பதில் உள்ள சந்தேகம். படம் வெளியாக ஆன இரண்டாண்டுக் காலத் தாமதம். மேம்போக்காக நகர்கின்ற காட்சிகளும் திரைக்கதையும் படத்தின் பலவீனங்கள். வசனங்கள் பல இடங்களில் அழுத்தமாக இருந்தாலும் காட்சியமைப்பும், சந்தர்ப்பங்களும் பலவீனமாக இருப்பதால் கவனத்தைப் பெறவில்லை. காதலர்கள் சேர வேண்டும் என்ற என்னமோ, பிரிந்து விடுவார்களோ என்ற தவிப்போ இரண்டுமே இல்லை.
இன்றைய ஜென் சீ தலைமுறையை மட்டும் கவனத்தில் வைத்துப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அவருடைய இயல்பான சற்றே குயுக்தியான காமடி இதில் கொஞ்சம் மிஸ்ஸிங். யோகி பாபு காமெடி செய்வதையே மறந்து விட்டார்.
கலர்புல்லான மேக்கிங், துள்ளலான இசை, ஆங்காங்கே வந்து போகும் நகைச்சுவை போன்றவற்றுக்காக மட்டும் பார்ப்பேன் என்று சொல்பவர்கள் முயலலாம்.
இளைஞர்களுக்குப் பிடிக்கச் சில விஷயங்கள் இருக்கிறது. முப்பதைக் கடந்தவர்களுக்குப் பெரிதாக ஈர்க்கக் கூடிய விஷயங்கள் இல்லை. கீர்த்தி ஷெட்டியைத் தவிர.
சமூக ஊடகங்கள், இன்ப்ளூயன்சர்கள் பற்றிப் பேசும் கதையில் பிரஷாந்த், வலைப் பேச்சு டீம், அபிஷேக், உள்பட பலரை உபயோகிப்படுத்தி இருப்பது சாமர்த்தியம்.