Maareesan Review: வடிவேல் பஹத் பாசில் கூட்டணியின் இன்னொரு வெற்றி!

Maareesan Movie - Vadivelu and Fahadh Faasil
Maareesan Movie - Vadivelu and Fahadh Faasil
Published on

சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து வாழ்க்கையை ஓட்டும் தயா (பஹத் பாசில்). இவர் திருடப்போகும் ஓர் இடத்தில் விலங்கு பூட்டப்பட்டிருக்கும் வேலாயுதம் பிள்ளை (வடிவேல்). அல்சைமர் எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வடிவேல் தன்னை அந்த வீட்டிலிருந்து காப்பாற்றினால் 25,000 ரூபாய் பணம் தருவதாகச் சொல்ல, அவரை விடுவித்து அழைத்து வருகிறார் பஹத். அவர் பணம் எடுக்கும்போது அவர் கணக்கில் இருபத்து ஐந்து லட்சம் இருப்பதைப் பார்க்கிறார். அவரிடமிருந்து மொத்தப் பணத்தையும் எடுத்துவிட யோசிக்கிறார். திருவண்ணாமலைக்கு ஒரு நண்பரைப் பார்க்கச் செல்வதாகச் செல்லும் வடிவேலுவை தன்னுடைய பைக்கிலேயே கூட்டிச் சென்று விட்டு விடுவதாகக் கூறி அழைத்துச் செல்கிறார். இவர் பணத்தை எடுத்தாரா? வடிவேல் பணத்தை இழந்தாரா? அவருடைய மறதி நோய் என்னவானது? என்பது தான் மாரீசன் படத்தின் கதை.

Maareesan Movie -
Maareesan Movie -

மாமன்னன் படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைவதால் இந்தப்படத்திற்கு ஓர் எதிர்பார்ப்பு கிளம்பி இருந்தது. படத்தின் முன்னோட்டமும் அதைக் கூட்டுவதாகத் தான் இருந்தது. இவர்களது பயணத்தில் இவர்கள் சந்திக்கும் மனிதர்கள், இவர்களுக்கிடையில் ஏற்படும் உறவு எனப் படத்தின் முதல் பாதி அழகாகப் பயணிக்கிறது. சரியாக இடைவேளைக்கு முன்பு வடிவேலுவைப் பற்றிய ஒரு திருப்பம் வருகிறது. அதன்பிறகு தான் மாட்டிக் கொண்டிருப்பது வடிவேலு அல்ல. பஹத் தான் என்று தெரிகிறது.

மறதி மனிதராக வடிவேல் கச்சிதம். 'கொஞ்ச நாள்ல என்னையே நான் மறந்துடுவேன் போல.', 'மன்னிக்க மட்டுமே தெரியறதால தான் கோயில்ல இவ்வளவு கூட்டமா?' 'நல்லது நினைக்க ஆரம்பிச்சுட்டல்ல. இனிமே உனக்கு நல்லது தான் நடக்கும்' என்று பல இடங்களில், அவர் பேச்சும் நடிப்பும் சபாஷ். பஹத் பாசிலும் பல இடங்களில் மிக அழகாகப் பொருந்துகிறார். 'மறக்கிறது ஒரு விதத்துல நல்லது தாங்க. எதிர்காலத்தைப் பத்தி பயந்துக்கவும் வேண்டாம். கடந்து போனதை நெனச்சு வருத்தப் படவும் வேண்டாம். உங்களுடைய ஏ டி எம் பின் இது தானே. இதை நீங்க எப்படி மறக்க முடியும். எனக்கும் தெரியும் ஆனா பயன்படுத்த மனசு வரல' என்று கடைசியில் அவர் சொல்லும் காட்சி நெகிழ்ச்சி.

Maareesan Movie - Vadivelu and Fahadh Faasil
Maareesan Movie - Vadivelu and Fahadh Faasil

முதல்பாதி ஒரு நீரோடை போலச் செல்லும் இந்தப்படம் இடைவேளைக்குப் பிறகு முற்றிலும் வேறொரு படமாக மாறுகிறது. இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு கொலை நடக்கிறது. செய்வது யார். எதற்கென்று தெரியாமல் காவல்துறை திணறுகிறது. ஒரு தெரிந்த குற்றவாளியாகையால் பஹத் பாசில் மீது சந்தேகமும் எழுகிறது. இதை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாகக் கோவை சரளாவும், தேனப்பனும் வருகிறார்கள். பஹத் பாசிலின் நண்பனாக விவேக் பிரசன்னா சிறிய அதே சமயத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த ஜானர் மாற்றம் தான் படத்தின் பலமும் கொஞ்சம் பலவீனமும். கொலை நடப்பது, வடிவேலுவின் இன்னொரு முகம் எனக் காட்டப்பட்டாலும் அது ஏன் நடக்கிறது என்பதற்குண்டான ஒரு தெளிவு குறைவோ என்று தோன்றியது. இவர்கள் பேசிய விஷயம் சமுதாயத்திற்கு மிக முக்கியமான பிரச்சனையாக இருந்தாலும் அதை மேம்போக்காகச் சொல்லிவிட்டதால் கிடைக்க வேண்டிய அழுத்தம் தவறிவிட்டது. நீதிமன்றத்தில் வடிவேலு கொடுக்கும் வாக்குமூலம் அவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமாகவா நீதி மன்றம் அணுகும் என்று எண்ணத் தோன்றியது. இதையெல்லாம் கொஞ்சம் இயக்குநர் சுதீஷ் ஷங்கர் கவனித்திருக்கலாம். இவர்கள் இருவருக்கிடையே ஏற்படும் உறவு பற்றியும், திகைப்பூட்டும் திருப்பங்கள் இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்து விட்டார் போல. சென்சிட்டிவான விஷயமாக இருப்பதால் அதை மேம்போக்காகச் சொன்னால் போதும் என்று முடிவெடுத்தது போல இருந்தது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: விவாகரத்துதான் முடிவா? 'தலைவன் தலைவி' சொல்லும் பதில்!
Maareesan Movie - Vadivelu and Fahadh Faasil

காவல்துறை அதிகாரியாக வரும் கோவை சரளா அந்தப் பாத்திரத்திற்குச் சற்றும் பொருந்தவில்லை. ஒரு முக்கிய சாட்சியிடம் நடக்கும் விசாரணையின்போது அவரது முக பாவனைகளில் அது இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறது.

வடிவேல், பஹத் பாசிலைத் தவிரக் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய இன்னொருவர் யுவன் ஷங்கர் ராஜா. வெகுநாட்களுக்குப் பிறகு பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார் மனிதர். கடைசி அரைமணி நேரம் இவரது ராஜாங்கம் தான். சரியான இடத்தில் இசைஞானியின் 'நேத்து ஒருத்தர ஒருத்தர பார்த்தோம்' உபயோகப் படுத்தியிருக்கிறார். மகன் என்பதால் பிரச்சனை வராது என நம்புவோம். ரேணு, சித்தாரா, பைவ் ஸ்டார் கிருஷ்ணா, லிவிங்ஸ்டன், சரவண சுப்பையா ஆகியோரும் வந்து செல்கிறார்கள். கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவும் ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங்கும் படத்திற்கு என்ன தேவையோ அதைத் தந்திருக்கிறது. பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சூப்பர் குட் பிலிம்ஸின் தொண்ணூற்று எட்டாவது படம் இது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ரோந்து - கேரளத்திலிருந்து இன்னுமொரு போலீஸ் த்ரில்லர்!
Maareesan Movie - Vadivelu and Fahadh Faasil

ஒரு நல்ல கருவை எடுத்துக் கொண்டு அதை ஒரு பயணக் கதையாக எண்ண வைத்து இரண்டாம் பாதியில் பரபரப்பாகிப் பார்க்க வருபவர்களைத் திருப்திப்படுத்தி அனுப்பி வைத்ததில் இந்தக் குழு ஜெயித்து விட்டது என்றே நம்பலாம். சில குறைகள் இருந்தாலும் வடிவேலு பஹத் பாசில் நடிப்பிற்காகக் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com