திரையுலகில் ரஜினி ரசிக இயக்குனர்கள் பலர் உண்டு. கார்த்திக் சுப்பாராஜ் அதில் முதலாமவர். அவரை ஆராதிக்கவென்றே பேட்ட என்ற படத்தை எடுத்தவர். அதற்கு அடுத்தது வருவது வேட்டையன் என்றே சொல்வேன். ஜெயிலர் இதற்குப் பிறகுதான். பட வெளியீட்டுக்கு முன் இயக்குனர் ஞானவேல் குறைந்தது ஐம்பது பேட்டிகளாவது கொடுத்திருப்பார். இது ரஜினி படமா ஞானவேல் படமா என்ற கேள்விக்கு இரண்டும் என்று பதிலளித்திருப்பார். அது உண்மை என்பது படம் முடியும்போது நிச்சயம் நமக்குத் தோன்றுகிறது.
ரஜினி படத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை வைக்காமல் கதை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கவே முடியாது என்ற நிலைக்குத் தமிழ்த் திரையுலகம் வந்து மூன்று தசாப்தங்கள் ஆகின்றன. ஆனாலும் தான் சொல்ல வந்த கதை நிதானமான வேகத்துடன் ரஜினியை வைத்துச் சொல்வது என்பது அனைவருக்கும் கைவரக்கூடியது அல்ல. ஞானவேல் அதில் ஜெயித்து விட்டார் என்று சொல்லலாம். என்கவுண்டர் என்ற ஒரு வார்த்தையை மட்டுமே வைத்துப் படம் இது தான் என்று அனைவரையும் சிந்திக்க வைத்து விட்டுக் கல்வியில் ஊழல், மெடிக்கல் தேர்வுகள்மூலம் அநியாயமாகச் சம்பாதிக்கும் கோச்சிங் சென்டர்கள் விஷயத்தை மையமாக வைத்து விட்டார். இதைத் தவிர சேரிகள் என்று பொதுமைப் படுத்துவது, ஒரு குற்றவாளியைக் கைது செய்யும் முன் வரும் அரசியல் அழுத்தங்கள், மார்பிங் விடியோக்கள், பெற்றோர்கள் பிள்ளைகள்மேல் போடும் அழுத்தங்கள் காரணமாக நடக்கும் விஷயங்கள் எனப் பல சம்பவங்களை அடுக்கிப் படத்தைக் கொண்டு போகிறார்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று எஸ் பி அதியன் (ரஜினிகாந்த்) அவரசமாக வழங்கப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதி என்று சத்யதேவ் (அமிதாப்). இந்த இரு துருவங்களுக்கு இடையே நடக்கும் பிரச்னை வேறு விதமாக வடிவம் கொண்டு ஒரு புள்ளியில் இருவரையும் இணைகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் வேட்டையனின் கதை.
மாணவர்களின் பிரச்சனைக்காகப் போராடும் ஆசிரியர் சரண்யா (துஷாரா) ஒரு கட்டத்தில் கொடூரமாக வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட, மாநிலமெங்கும் பிரச்னை வெடிக்கிறது. குற்றவாளியைக் கண்டு பிடித்துப் போட்டுத் தள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான ரஜினியை வரவழைக்கிறார் டி ஜி பி. இரண்டே நாட்களில் குற்றவாளியைக் கண்டு பிடித்து என்கவுண்டர் செய்கிறார் அவர். மக்கள் உரிமை மையத்தின் சார்பில் சிறப்பு நீதிபதியான அமிதாப் இதுகுறித்து விசாரித்துச் சில எதிர்பாராத தகவல்களைக் கண்டுபிடிக்கிறார். பின்னர் இந்த வழக்கு விசாரணை பல கோணங்களில் பயணித்துக் கல்வி மாபியாவிடம் வந்து முடிகிறது.
இவ்வளவு நட்சத்திரங்களை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்ற கேள்வி கண்டிப்பாக எழுந்திருக்கும். பாஹத், துஷாரா, ரித்திகா, ரோகிணி, அபிராமி, மஞ்சு வாரியர், கிஷோர், ராணா என அனைவரையும் கச்சிதமாகப் பயன்படுத்தி உள்ளார் ஞானவேல். இதில் மஞ்சுவிற்கும் ராணாவிற்கும் இன்னும் கொஞ்சம் அவர் மெனக்கெட்டிருக்கலாம்.
அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார் பாஹத் பாசில் (பாட்டரி என்ற பேட்ரிக்). ரஜினிக்கு இணையாக அவருடனேயே பயணிக்கும் பாத்திரம். வெகு இயல்பாக அதைச் செய்து அவருக்கு அடுத்து அதிக கைதட்டல்களை அள்ளிக் கொள்கிறார். பெண்களிடம் இயல்பாக வழிவது அவர் குணமாக இருந்தாலும் யாருடனும் ஜோடி போடாமல் அந்தப் பாத்திரத்தைக் கையாண்டது சுவாரசியம். பெண் பாத்திரங்களைக் கவர்ச்சிக்காக உபயோகப்படுத்தாமல், கதையை வளர்க்கவும், கதை நெடுக வருமாறும் அமைத்த ஞானவேல் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவின் திரைக்கதை அமைப்பு சுவாரசியம்.
இப்படித் தான் இந்தக் கதை முடியும் என்று ஊகிக்க முடியும் இரண்டாம் பாதி இரண்டாவது மைனஸ். முதல் மைனஸ் வலுவில்லாத வில்லன் கதாபாத்திரம். ஜெயிலர் போன்ற படம் நின்றதற்கு வில்லன் விநாயகனின் நடிப்பு மிகப் பெரிய காரணம். இதில் அது முழுவதும் மிஸ்ஸிங். இன்வெஸ்டிகேஷன் காட்சிகளுக்கு மெனெக்கெட்ட ஞானவேல் இதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இவர்களுக்கிடையே நடக்கும் மோதல்கள் இன்னும் கவனம் பெற்று ரசிக்கும்படி இருந்திருக்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமிதாப் - ரஜினி காட்சிகளும், இப்படி இரண்டு ஆளுமைகள் எதிரெதிர் கருத்தியல்புகளில் இருக்கும்போது அதை இன்னும் வலுவாக வெளிக்கொண்டு வந்து இருக்கலாம்.
முழுப்படத்தையும் தனியொரு ஆளாகத் தாங்கும் சக்தி இன்னும் தனக்கு உண்டு என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் ரஜினிகாந்த். முதல் அரை மணி நேரம் அவரது ராஜ்யம் தான். ரசிகர்களின் விசிலுக்கு ஏற்றவாறு படம் நெடுகிலும் அங்கங்கு சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. 'குறி வெச்சா இரை விழணும்' என்று அவர் சொல்லும் போதும், எங்கெங்கெல்லாம் கதவுகள் திறக்கின்றனவோ அங்கு அவர் நடந்து வரும் காட்சிகளும் உண்மையான சூப்பர் ஸ்டார் மொமெண்ட்ஸ்.
அனிருத் இன்னொரு நாயகன். படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் மிக முக்கிய பங்கு இவருடையது. மனசிலாயோ பாட்டும், ஹண்டர் பாட்டும் சரியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன. மற்றொரு பாட்டு இடைச் செருகலாகப் பின்னால் வந்து போகிறது. எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவும் கச்சிதம். பிலோமின் ராஜ் எடிட்டிங்கில் வழக்கு விசாரிக்கப்படும் காட்சிகள் வேகமாக நகர்கின்றன. ஆளே இல்லாமல் மோகோ பாட்டின் மூலம் ஒரு சண்டைக் காட்சியை அமைத்தது இயக்குனர், மற்றும் எடிட்டரின் சாமர்த்தியம். அன்பறிவின் சண்டைக்காட்சிகளில் இதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை.
ஜெயிலர் போன்ற ஒரு வெற்றிக்குப் பின் அதைத் தொடும் அல்லது தாண்டும் படம் தரவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஞானவேல். சற்று கவனமாகக் கையாள வேண்டிய கதை, சொல்லப்பட வேண்டிய கருவை எடுத்துக் கொண்டு அதில் ரஜினியை அழகாக உபயோகப்படுத்திக் கொண்டதில் அவர் வெற்றி பெற்று இருக்கிறார். ஆனாலும் பல இடங்களில் அவருக்குள் இருக்கும் ரசிகன் அதிகமாக எட்டிப் பார்த்தது போல இருந்தது. படத்தின் நீளம் காரணமாகச் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம். எதிர்பாராத 'அந்தத் திருப்பத்தை'த் தவிர ஊகிக்கக்கூடிய இரண்டாம் பகுதி கொஞ்சம் பலவீனம் தான்.
ரஜினி என்ற நடிகரைப் பார்க்கலாம் என்று சொன்ன ஞானவேல் அதை எங்குச் செய்து காட்டியிருக்கிறாரென்றால் தன்னுடைய ஒரு செயல் தவறு என்று அவர் உணர்வதிலும் அதற்காகப் பொது மன்னிப்பு கேட்பதிலும். மேலும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான ஒருவர் கடைசியில் துப்பாக்கியின் விசையை அழுத்தும் முன் மனசாட்சியை ஒரு முறை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்வதில் தனது நிலைப்பாட்டை உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.
சில இடறல்கள் இருந்தாலும் தனது கதையை, சொல்ல வேண்டிய கருத்தை ரஜினி போன்ற ஒரு நடிகர் மூலமாகத் தேவையான வணிக சமரசங்களுடன் சொன்ன விதத்தில் கவனம் பெறுகிறார் ஞானவேலின் வேட்டையன்.