

ஜன நாயகன் படம் அனில் ரவிபுடியின் பகவந்த் கேசரியின் ரீமேக் என்று தமிழகம் முழுதும் பேச்சு இருக்கிறது. அது தான் உண்மையும் கூட. அது வருமா வராதா என்ற நிலை. முடிவு இப்பொழுது நீதி மன்றத்தின் கையில் இருக்கிறது. இது இப்படியிருக்க அனில் ரவிபுடி வேறொரு நகாசு வேலை பார்த்திருக்கிறார். அஜீத் நடித்த விசுவாசம் படத்தை அப்படியே உருட்டி எடுத்துச் சிரஞ்சீவி, அதே நயன்தாரா ஜோடியாக வைத்து 'மன சங்கர வரப் பிரசாத் காரு' என்ற படத்தை எடுத்துப் பொங்கலுக்கு விட்டுவிட்டார்.
ஒரு மந்திரியிடம் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிபவர் சிரஞ்சீவி. அவருக்கென்று ஒரு குழு. அதில் காதரின் தெரசா உள்ளிட்ட பலர். மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகள் தொழிலதிபர் நயன்தாரா. இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் ஒத்து வராமல் விவாகரத்தும் ஆகிவிடுகிறது. இவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதைச் சிரிக்கச் சிரிக்க சொல்வது தான் மன சங்கர் வரப் பிரசாத் காரு.
இப்பொழுது ரஜினி என்ன மாதிரியான கதைகளைத் தேடி வருகிறார் என்பதை இந்தப்படத்தைப் பார்க்கும்பொழுது புரிகிறது. சிரஞ்சீவி என்ற மெகா ஸ்டார் கிடைத்தாலும் அவரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று நன்கு அறிந்திருக்கிறார் அனில். அவ்வப்பொழுது அந்த மாஸ் மொமேன்ட்கள் வைத்தாலும் முற்றிலும் சிரஞ்சீவியை அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார். இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று அவரும் அவர் சொன்னபடியெல்லாம் நடித்திருக்கிறார். ஜாலியாக வருவோம். பேசுவோம். டான்ஸ் ஆடுவோம். போவோம் என்று தூள் கிளப்பியிருக்கிறார். தன்னை படம் முழுதும் அடுத்தவர்கள் கிண்டல் செய்வதை அனுமதிக்கும் பாத்திரத்தில் நடித்ததற்கே அவருக்கு ஒரு தனிப் பாராட்டு.
சீரியல் பார்த்து அழும் பொழுதும், குழந்தைகளைப் பிரிந்து தவிக்கும் போதும். மனைவிக்குப் பயந்து நடுங்கும் போதும், அவரிடம் வழியும் போதும் பழைய சிரஞ்சீவியைப் பார்க்க முடிகிறது. தான் நடிக்கும் படங்கள் இனி எப்படி இருக்க வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டால் சரி. மறுபடியும் ஆக்சன் அவதாரங்கள் எடுத்தால் அவ்வளவு தான். நயன்தாரா அவ்வளவு அழகாக இருக்கிறார். அந்த மிடுக்கு, கர்வம், சிரிப்பு என்று கொள்ளை கொள்கிறார்.
அவருடைய தந்தையாகச் சச்சின், ஒரு கேமியோ பாத்திரத்தில் வெங்கடேஷ், அம்மாவாக ஜரீனா வஹாப் அனைவரும் கச்சிதம். பதினைந்து நிமிடங்களே வந்தாலும் வெங்கடேஷ் மொத்த அரங்கத்தையும் சிரிப்பில் ஆழ்த்துகிறார். ஒரு கௌரவ வேடம் என்றால் எப்படி இருக்கலாம் என்று இதைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். ஐவரும் சிரஞ்சீவியும் ஆடும் குத்தாட்டம் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்.
நகைச்சுவையாக நகரும் படத்தில் அவ்வப்பொழுது செண்டிமெண்ட் காட்சிகளும் நன்றாகவே வந்திருக்கின்றன. மருமகளுக்குக் காபி போட்டுத் தரும் காட்சி, முதன்முதலில் அப்பாவை டாடி என்று அழைக்கும் காட்சி, இவை இரண்டையும் சொல்லலாம். நகைச்சுவைக் காட்சிகளுக்கு பஞ்சமேயில்லை. டைனிங் டேபிள் காட்சி, நயன்தாராவை கவரச் சிரஞ்சீவி செய்யும் செயல்கள், வெங்கடேஷ் தன்னுடைய மனைவியை வர்ணிக்கும் பொழுது தவிக்கும் தவிப்பு எனச் சிரிப்புக்கு நான் கியாரண்டி என்று சொல்லியிருக்கிறார்.
ஓர் உல்ட்டா கதை என்பதால் அவர் கதையில் எந்தவிதமான சீரியசான தருணமும் இருக்குமாறு வைக்கவில்லை. அவரே சீரியஸாக இல்லாதபோது ரசிகர்களும் அப்படியே. போனோமோ பார்த்தோமா சிரித்தோமா வந்தோமா என்று இருக்கிறார்கள். பீம்ஸ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ஆனால் காட்சிகளை அட்டகாசமாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.
வில்லனைப் பற்றிச் சொல்லவில்லையே என்று நினைப்பவர்களுக்கு, அவர் வில்லன் என்றால் பாவம் அவரே நம்ப மாட்டார். இடைவேளைக்குப் பிறகு வருகிறார். போய்விடுகிறார். ஒரே குறை பாடல்கள். வந்து கொண்டே இருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம், பள்ளியில் பாடும் அந்த ஆங்கிலப் பாடல் ஜோர். கிராபிக்ஸ் மிகவும் மோசம். கிளைமாக்ஸில் காரில் வருவதைக் கூடக் கிராபிக்சில் எடுத்துச் சேர்த்திருக்கிறார்கள். லாஜிக் என்ற மூன்று எழுத்துக்கும் இந்தக் கதைக்கும் தொடர்பே இல்லை. வருவதைப் பார்த்து ரசித்துச் செல்லுங்கள் என்று தான் இயக்குநரே சொல்லியிருக்கிறார். அந்த விதத்தில் குடும்பத்துடன் போய்ப் பார்த்து ஜாலியாகச் சிரித்து வருவதற்கு ஏற்றப் படம் தான் மன சங்கர வரப் பிரசாத் காரு.
படத்தில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலை ஆங்காங்கே பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்தக் காட்சிகளில் எல்லாம் அழகாகக் கவிதைபோல இருக்கின்றன. இளையராஜாவின் அடுத்த கேஸ் இவர்கள்மீது இல்லாமல் இருக்கட்டும்.