

வீடு இன்றி வறுமையில் தவித்து வந்த தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனுக்கு, தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு எம்எல்ஏ குடியிருப்பை தமிழ்நாடு அமைச்சர் ராஜ்மோகன் தற்காலிகமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் திரையில் வந்தாலே ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன். தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக், கவுண்டமணி உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல நூறு திரைப்படங்களில் நடித்து தமிழர்களை மகிழ்வித்த உன்னதமான கலைஞன்.
இவர் 2000-ல் வெளிவந்த ‘மாயி’ படத்தில் வடிவேலுவுடன் நடித்து இவர் பேசிய ‘வாம்மா மின்னல்’ என்ற ஒரே ஒரு வசனத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்ததுடன், இன்றளவும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அடுத்து ஆனந்தம் படத்தில் திருடனாக வந்து வீட்டு வேலைக்காரனாக மாறும் பாத்திரம் இவருக்கு நல்ல பெயரைத் தேடித்தந்தது.
திரையுலகில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து வரும் இவர், தொடக்கத்தில் விக்ரமனின் திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராகவும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. கடந்த சில வருடங்களாகக் கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு, எதிர்பாராத விபத்து மற்றும் நோய் பாதிப்பு காரணமாக, அறுவை சிகிச்சை மூலம் அவரது காலில் உள்ள 3 விரல்கள் நீக்கப்பட்டன.
இதனால் அவரால் வழக்கம்போல் படங்களில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பட வாய்ப்புகளும் குறைந்ததால் குடும்பத்தை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவச் செலவுக்கே பணம் இல்லாமல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகிறார். இது குறித்து அண்மையில் நடிகர் பாவா லட்சுமணன் அளித்த பேட்டியில், திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போதைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. மருத்துவச் செலவுக்கும், தங்குவதற்கு இடம் கூட இல்லாமல் தவிக்கிறேன் என்று கண்ணீர்மல்க உருக்கமாக பேசியிருந்தார்.
அத்துடன் ‘விஜயகாந்த் சார் உயிரோட இருந்திருந்தா நான் இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்’ என்று அவர் கண்ணீருடன் பேசியது பலரையும் நெகிழ வைத்தது. மேலும், தனக்கு வாழ்வாதார உதவி செய்யுமாறு தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அவர் உருக்கமான கோரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டினர்.
நடிகர் கூல் சுரேஷ் அவருக்கு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்து வீட்டு உபயோக பொருட்களும் வாங்கி கொடுத்தால். நடிகர் ஜீவா மற்றும் கே.பி.ஒய் பாலாவும் உதவி செய்தனர். குறிப்பாக தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், மருத்துவச் செலவு மற்றும் குடும்பச் செலவுக்காக ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
நடிகர் பாவா லட்சுமணனின் இந்த இக்கட்டான சூழ்நிலையை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், உடனடியாக அவருக்கு உதவ முன்வந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு எம்எல்ஏ குடியிருப்புக்கான வீட்டை, பாவா லட்சுமணன் தற்காலிகமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
இன்னும் ஆறு மாத காலத்திற்கு இந்த வீட்டிலேயே தங்கி உங்களது உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். அதற்குள் உங்களுக்கு நிரந்தரமாகச் சொந்த வீடு ஒன்றினை ஏற்பாடு செய்து தருவதாக பாவா லட்சுமணணுக்கு அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் பாவா லட்சுமணன், தற்போது எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் குடியேறியதாக செய்தி வெளியானது. இது பற்றி பாவா லட்சுமணனிடம் கேட்டதற்கு, ‘கடந்த 2 நாட்களாக எம்எல்ஏ விடுதியில் தங்கியுள்ளேன். அமைச்சர் ராஜ்மோகன் தான் என்னை தங்க வைத்தார். விரைவில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்’ என்றார்.
ஒரு கலைஞனின் துயரத்தைப் பார்த்து அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று ஆறுதல் கூறி, அரசு சார்பில் தேவையான உதவிகள் கிடைக்கும் என்று உறுதியளித்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள், ‘இதுதான் ஒரு கலைஞருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வறுமையின் விளிம்பில் நின்ற ஒரு மூத்த கலைஞனுக்கு, மக்கள் பிரதிநிதியான அமைச்சர் ஒருவர் தனது சொந்த அரசு குடியிருப்பையே ஒதுக்கித் தைரியம் கொடுத்த இச்சம்பவம், இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதுமட்டுமின்றி கஷ்டமான நேரத்தில் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய லெஜண்ட் சரவணன் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.