
அவெஞ்சர்ஸ் படத்திற்குப் பிறகு ஓர் ஆங்கிலப்படத்திற்கு உலகமே எதிர்பார்க்கிறது என்றால் மிஷன் இம்பாஸிபிள் சீரியஸின் படத்தின் கடைசி அத்தியாயமாக வரும் பைனல் ரெக்கரிங் தான். அதுவும் இந்தியாவில் இந்தப்படத்திற்கு இருக்கும் அதிகபட்ச வரவேற்பைக் கருத்தில் கொண்டு ஒரு வாரம் முன்னதாகவே வெளியீடு செய்ய முடிவெடுத்தது படக்குழு.
வரும் 17 தேதி வெளியாகும் இந்தப்படத்தின் ஐ மேக்ஸ் வடிவத்திற்கு ஏகோபித்த ஆதரவு கொடுத்துள்ளனர் ரசிகர்கள். தமிழ்ப்படங்களைச் சற்றும் குறையாத அளவுக்கு ஒன்பது மணிக்காட்சி, அதிகத் திரைகள் எனத் தமிழகம் களைகட்டுகிறது.
இளைஞர்களைப் பொறுத்தவரை அன்று வெளியாகும் சந்தானத்தின் டி டி, சூரியின் மாமன் இரண்டையும் விட இதற்குத் தான் ஆவலாக இருக்கிறார்கள். படத்தைக் குறித்துக் கடந்த ஓராண்டாக வெளியான ட்ரைலர், ஸ்னீக் பிக்குகள், படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பைப் பன்மடங்காக்கி இருக்கின்றன.
1996 இல் முதல் மிஷன் இம்பாசிபிள் வெளியானபோது இது இவ்வளவு பெரிய ஒரு பிரான்சைஸ் ஆக இருக்கும் என்று அவர்களே எதிர்பார்க்கவில்லை. அதில் வெளியான மேலிருந்து தொங்கிக் கொண்டே ஒரு பொருளை எடுக்கும் காட்சி அரவிந்தசாமி நடிப்பில் அப்படியே உல்டா செய்யப்பட்டு நகைப்புக்குள்ளாக்கியது. அந்தப் படத்திலிருந்து இந்தப் படம்வரை இந்தப்படத்தின் மூல இசை ஒரே இசை தான். அந்த டோனை கேட்டவுடன் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். இன்று வரை பலர் அதைத் தங்கள் கைப்பேசியின் ரிங் டோனாகக் கூட வைத்துள்ளார்கள்.
முதல் படம் இயக்கியது பிரையன் டி பால்மா. இரண்டாவது பாகத்தை ஜான் வூவும், மூன்றாவதை ஜெ ஜெ ஆப்ராம்ஸ் ஆகியோர் இயக்கினார்கள்.
கிறிஸ்டோபர் மேக்வாயீர் வந்ததும் படத்தின் ஆக்க்ஷன் காட்சிகளின் தீவிரம் இன்னும் அதிகமானது. ஒவ்வொரு படத்திலும் டாம் க்ரூயிஸ் ஓடும் காட்சிகள் படத்தின் அதிக பட்ச விசில் பெரும் காட்சியாக இருந்தது. பைக்கில் வேகமாக மேலேறிப் போய் அதலபாதாளத்தில் பாயும் காட்சி, ஹெலிகாப்டரில் தொங்கிக்கொண்டே சண்டையிடும் காட்சி, பாரிஸ் நகரத்தில் சிறிய காரில் நடக்கும் மெகா துறத்தல், உலகிலேயே உயரமான கட்டடமான புர்ஜ் கலீபாவின் உச்சியில் நடக்கும் சண்டை என்று இந்தப் படங்கள் கொடுத்த பரபரப்பு கொஞ்சநஞ்சமல்ல.,
முகமூடி மூலம் முகத்தை மாற்றுவது, உலகத்தில் உள்ள பெரிய நாடுகள் அனைத்திலும் இந்தக் குழுவினர் பயணப்படுவது, ஆங்கிலப்படங்களுக்கே உரிய ஆபாசக் காட்சிகள் எதுவும் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொண்டது என இந்தப்படத்தினைக் குடும்பத்துடன் பார்க்கும் ரசிகர்கள் மிகவும் அதிகம்.
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்துத் துறைகளிலும் பரபரப்பும் சுவாரசியமும் மட்டுமே நோக்கம் என்று பணியாற்றி இப்படியொரு ரசிகர் கும்பலை வளைத்துள்ளது இந்தக் குழு. இந்நிலையில் பெரு நகரங்கள் மட்டுமல்ல மதுரை, திருச்சி, கோவை, என அனைத்து நகரங்களுக்கும் இந்த டாம் க்ரூயிஸ் காய்ச்சல் அடிக்க ஆரம்பித்துள்ளது வெளிப்படை. திரையரங்கு உரிமையாளர்கள் பாடு தான் இப்பொழுது திண்டாட்டம். தமிழ்ப்படங்களை முன்னுரிமை கொடுப்பதா. அல்லது இளைஞர்கள் மனத்தைக் கவர்ந்த ஈத்தன் ஹண்ட் மற்றும் அவரது குழுவிற்கு அதிகத் திரைகள் ஒதுக்குவதா என்று.
பார்க்கலாம் இந்தக் கடைசி அத்தியாயத்தில் ஈத்தன் என்ன சாகசம் செய்யக் காத்திருக்கிறார் என்று. சில ரசிகர்கள் பதற்றம் என்ன வென்றால் ஜேம்ஸ் பாண்டைக் கொன்றுவிட்டது போல் இவரையும் சாகடித்து விடுவார்களோ என்று தான். அவரவருக்கு அவரவர் கவலை.
இந்தப்படத்திற்காக நடிகர் டாம் க்ரூயிஸ் ஜப்பான், சீனா, எனப் பல நாடுகளுக்குப் பிரயாணம் செய்து ப்ரோமோஷன் செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்க வாழ் மக்களுக்குப் படம் வெளியாகும் நாளிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு மாகாணத்திற்கு நாங்கள் வரும் என்று உறுதியளித்துள்ளது இந்தக்குழு. இந்தியாவில் இந்தப்படம் பெரும் வெற்றியைப் பொறுத்து ஜூன் மாதம் இந்தியாவிற்கும் வர வாய்ப்பு உள்ளதாம். அதற்காகச் சில வரிகள் இந்தி, தமிழ், தெலுங்கு என அவர் கற்றுவருவதாகத் தகவல்.
மீடியாக்களுக்கு மட்டும் நடத்தப்பட்ட சில சிறப்பு காட்சிகளைப் பார்த்தவர்கள் இனிமேல் இது போன்ற ஒரு படம் வருவதற்கு வாய்ப்பில்லை. அது ஒரு சினிமாட்டிக் மார்வல் என்று புகழ்ந்து ட்வீட் செய்துகொண்டு இருக்கிறார்கள். மாஸ்டர் க்ளாஸ் இன் பிலிம் மேக்கிங் என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். மூன்று மணிநேரம் மூன்று நிமிடம்போல் கடந்தது தான் மிகப்பெரிய சாதனை என்றும் ஒருவர் சொல்லியிருக்கிறார்.
மீடியாக்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட இந்தப்படம் பொதுமக்கள் மனதை அள்ளுமா என்பது பதினேழாம் தேதி தெரிந்து விடும்.