
"என்னுடைய மிகப்பெரிய வருத்தம் ஒன்று உண்டு. கடைசி வரை என் மகள் பார்வையில் அவளை நான் வெறுப்பவன் போலவே இருந்தது. அப்படி இல்லை என்று சொல்லாமலேயே நான் போகப் போகிறேன்.
ஒரு ரயில்வே நெட்வொர்க்கின் செயல்பாடுகளில் மூன்று நாடுகளின் பங்கு இருக்கிறது. வெற்றியில் அனைவரும் கைகோர்த்துக் கொள்வோம். ஒரு பிரச்சினை என்றால் ஒரு நாடு மட்டும். இது என்ன விதமான உறவு.
மதர்போர்ட், சாஸிஸ், ஸ்டாண்ட் ஆப்ஸ் நான் சிறுபெண்ணாக இருக்கும்போது என் அப்பா ஒரு பெட்டியில் கொண்டு வந்து தந்தது. இரண்டு வாரங்கள் இதுபற்றி மட்டும் தான் பேச்சு. எனக்குப் பிடிக்கிறதா. என்னவாக விரும்புகிறேன். அம்மா இல்லாத ஒரு பெண்ணுக்கு என்னத்தேவை. எதுவும் அவருக்குத் தேவையில்லை. இந்த மூன்று வார்த்தைகள் மட்டுமே. கடைசியில் கம்பியூட்டரும், அதற்கு எழுதப்படும் கோடுகளும் என் வாழ்வாகிப் போனது.
ஒரு பிரிட்டிஷ் காரன், மற்றொரு ஆணுடன் அதுவும் மாற்று மதத்தவனுடன் தொடர்பில் இருப்பதை எப்படிப் பார்ப்பார்கள். வசதி பெற்றவர்கள், வி ஐ பிக்கள் மட்டுமே பயணம் செய்யும் இந்த ரயில் பயணம் அவன் எப்படிப் பார்ப்பது. எனக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை.
உங்களைக் கண்டால் என் தந்தையின் நினைவு எனக்கு அதிகம் வருகிறது. ஏன் உனக்கு உன் அப்பாவை அதிகம் பிடிக்குமா. இல்லை நான் அவரை அந்த அளவு வெறுத்தேன். அதே வெறுப்பு தான் உங்கள்மீதும்.
நான் உயிருடன் திரும்புவேனா என்பது தெரியாது. ஆனால் நான் ஒரு பத்திரிகையாளர். நீங்கள் சொல்ல நினைக்கும் பொய்களை எழுதுவது என் வேலையல்ல. இங்கு நடக்கும் சம்பவங்களைப் பதிவு செய்கிறேன். உண்மைகள் உலகுக்குச் சொல்லப்பட வேண்டும்.
பெரும்பாலான நேரம் மக்கள் தூங்கிக் கொண்டு தான் இருப்பார்கள். ஆனாலும் பல நேரங்களில் நாங்கள் பாரில் பணியாற்றும் ஊழியர்கள்போலத் தான் அவர்களுக்குத் தெரிவோம். நாங்கள் விழித்திருப்பதே அவர்கள் நிம்மதியாகத் தூங்கத் தான்."
இது போன்ற வசனங்கள் தான் இந்தச் தொடருக்கு மிகவும் அழகு. பி பி சி பிளேயரில் வெளியாகியுள்ள நைட் ஸ்லீப்பர் (Night Sleeper) என்ற தொடர் மேலோட்டமாகப் பார்த்தால் மற்றுமொரு ரயில் பயணத் தாக்குதல் முடிவு என்று மேம்போக்காகக் கடந்து போய்விட முடிகிற தொடர்தான். ஆனால் முதல் அரை மணி நேரத்திலேயே இந்தப் பயணத்தில் முற்றிலுமாக நம்மை இணைத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வரும் திருப்பங்கள் திடுக்கிடும் வகையில் இல்லாவிட்டாலும் சுவாரசியமாக இருக்கின்றன.
கிளாஸ்கோவிலிருந்து லண்டன் வரை செல்லும் இரவு நேர சொகுசு ரயில். இதைப் பிரிட்டனின் இதயம் என்று அழைக்கிறார்கள். (Heart of britain). முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு இயங்கும் ரயில் இது. ஒரு குறிப்பிட்ட பயணத்தில் அந்த ரயிலின் கட்டுப்பாட்டை வெளியில் உள்ள ஒரு குழு தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்தில் பெரும்பான்மையான மக்கள் இறங்கிவிட அந்த ரயில் தானாக இயங்காத தொடங்கிவிடுகிறது. ஓட்டுநர் இல்லாத ரயிலை வெளியிலிருந்து இயக்க ஆரம்பித்தது விடுகிறார்கள். அந்த நேரம் நாடு முழுதும் உள்ள ரயில்வே இயக்கங்கள் ஸ்தம்பிக்கின்றன. இந்த ஆறு மணி நேரப் பயணம். அதில் உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட பயணிகள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. இது தான் இந்தத் தொடர்.
இது போன்ற படங்களும் தொடர்களும் வந்து கொண்டே இருந்தாலும் இதை எடுப்பவர்கள் எண்ணிக்கை குறைவதே இல்லை. பார்ப்பவர்கள் சுவாரசியம் மட்டும் அமைந்து விட்டால் இது ஒரு நல்ல பார்முலாவாகத் தான் இருக்கிறது.
தொடரின் பிரதானப் பாத்திரங்கள் இரண்டு பேர். சைபர் பாதுகாப்பு இயக்குநராக வரும் அப்பி (அலெக்ஸாண்டரா ரோச்). குற்றம் சாட்டப்பட்ட காவலராக வரும் ஜோ (joe koel) இருவரும் பிரிட்டிஷ் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருபவர்கள். ஒரே ஒரு சாட்டிலைட் தொலைப்பேசி மட்டுமே இவர்களை இணைக்கும் ஒரு கருவி. அந்த ஹாக்கர்களிடமிருந்து ரயிலை விடுவிக்க வேண்டும். அதில் உள்ளவர்களைக் காப்பாற்ற வேண்டும். ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் இரண்டே இடங்களில் தான் முழுத் தொடரும் நடைபெறுகிறது.
மாட்டிக் கொண்ட மனிதர்களின் உணர்ச்சிகள் தான் தொடரை நகர்த்திக் கொண்டு செல்கிறது. உயிர் பயத்தில் மனிதர்கள் தன்னை மீறி எப்படி நடந்து கொள்வார்கள். அனைவரும் அனைவருக்கும் எதிரிகள். கடைசியில் ஒன்று சேர்ந்தால் மட்டுமே அனைவரும் பிழைக்க முடியும் என்று இணைந்து போராடுகிறார்கள். இது பல முறை பார்த்துச் சலித்த கதை தான். நடிப்பும், வசனங்களும், திரைக்கதையும் தான் இதை வலுவாக்க வேண்டும். அதில் இந்த அணி ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது.
இது போன்ற கதைகளில் ஆக்க்ஷன் அதிகம் இருக்க வேண்டும். வெடித்துச் சிதற வேண்டும். ரயில் பெட்டிகள் உருள வேண்டும் என்றெல்லாம் நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். தேவைப்படும் இடங்களில் மட்டுமே அது போன்ற காட்சிகளை வைத்து விட்டு அதைக் காப்பாற்ற நினைக்கும் போராடும் உரையாடல் காட்சிகள் தான் எனக்குச் சுவாரஸ்யமாகப் பட்டது. சந்தேகப்பார்வை ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒவ்வொருவர் மீது பாய அடுத்த அத்தியாயத்தில் வேறு நிகழ்வுகள் நடக்கிறது. இவர்கள் யாருமே இல்லாமல் இந்த ஹேக்கிங்கை செய்வது யார் என்று கடைசியில் காட்டும்போது அது எதிர்பாராத திருப்பமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வது போல இல்லை என்பது தான் மிகப்பெரிய சறுக்கல்.
அப்பியாக நடிக்கும் அலெக்ஸாண்டரா அவ்வளவு அழகு. நீல நிறக் கோலிக்குண்டு கண்கள் முழுதும் பதற்றம் தெரிய அவர் பேசும் வசனங்கள் உச்சரிப்பு சபாஷ். தன்னை மீறிச் செயல்படும் உடன் பணியாற்றுபவர்கள், நம்பாமல் சில முடிவுகள் எடுக்கும் மேலதிகாரிகள், தனது பணி தனக்கு எதிராகவே திரும்பும்போது தவிப்பது என இவர் நடிப்பு கச்சிதம்.
ஆறு மணி நேரம் ஓடும் இந்தத் தொடரைப் பார்க்கக் கண்டிப்பாகச் சற்றுப் பொறுமை அவசியம். உரையாடல் சார்ந்த படங்கள் மற்றும் தொடர்கள் பார்ப்பவர்களை இது கண்டிப்பாகக் கவரும். பார்த்து முடிக்கும்பொழுது அந்த ரயிலில் பயணம் செய்யும் அரசியல்வாதி, ரயில் ஓட்டுநர், சக்கர வண்டியில் இருக்கும் வக்கீல், குடிகார கணக்காளர், எல்லாவற்றிலும் மூக்கை நீட்டும் பத்திரிகையாளர், அம்மாவை விட்டுத் தனியாக மாட்டிக் கொள்ளும் சேட்டைக்காரச் சிறுவன், என அனைவருடைய பாத்திரங்களும் நம் மனதில் நிற்கும் அது தான் இந்த அணிக்குக் கிடைத்த வெற்றி.
ஆக்க்ஷன் குறைவு. பரபரப்பு அதிகம். பெரிதாகத் தெரிந்த நடிகர்கள் தேவையில்லை. ஒரு நல்ல தொடர் பார்த்தால் போதும் என்றும் நினைப்பவர்கள் இதைப் பார்க்கலாம். காட்சிக்குக் காட்சிபற்றிக் கொண்டு செல்ல வேண்டும். பேச்செல்லாம் வேண்டாம் வீச்சு தான் வேண்டும் என்று நினைப்பவர்கள் மாற்றுப் பாதையில் சென்று விடவும். பிரிட்டிஷ் தொடராக இருப்பதால் சற்றுக் கடித்துப் பேசினாலும் ஆங்கிலம் புரியும்படி இருப்பது ஓர் ஆறுதல். தமிழ் டப்பிங்கில் இல்லை. இந்தத் தொடருக்கு ஆறு மணி நேரம் என்பது சற்று அதிகம் தான். தொடர்ந்து நடக்கும் வைரஸ், ஹாக்கிங் தொடர்பான விவரணைகள் பல இடங்களில் புரியாமல் போவதும் ஒரு மைனஸ். இதை எல்லாம் சற்று கவனித்து கொஞ்சம் மெனக்கெட்டு காட்சிகளில் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் ஆஹா சூப்பர் என்று சொல்லியிருக்கலாம்.