
இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப்பச்சன். இவரை ரசிகர்கள் 'பிக் பீ' என்று செல்லமாக அழைக்கின்றனர். தற்போது இவர் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் அமிதாப்பச்சன் தன்னுடன் சேர்ந்து நடித்த ஜெயா பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெயா பச்சன் 2004 முதல் சமாஜ்வாடி கட்சி சார்பாக ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
பச்சன் தம்பதிகளுக்கு சுவேதா பச்சன் நந்தா மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருபிள்ளைகள் இருக்கின்றனர். மகன் அபிஷேக்கும் தந்தையைப் போலவே நடிகராக உள்ளார். அபிஷேக் பச்சன், நடிகையும் உலக அழகிப் பட்டம் வென்றவருமான ஐஸ்வர்யராயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார்.
நடிகர் அமிதாப்பச்சன் கடந்த 25 ஆண்டுகளாக ’கவுன் பனேகா குரோர்பதி’ என்ற ரியாலட்டி ஷோவை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து வரும் 'பிக் பீ' க்கு ரூ.1,600 கோடியில் சொத்துக்கள் உள்ளது. இவர் தனது சொத்துக்களை அவரது இரு பிள்ளைகளில் யாருக்கு கொடுப்பார் என்ற விவாதம் சமூக வலைதளத்தில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் தனது சொத்துகளை மகன் அபிஷேக் பச்சனுக்கும், மகள் சுவேதாவுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சில வருடங்களுக்கு முன்பே இந்த முடிவை எடுத்துவிட்டதாக கூறும் நிலையில் தற்போது இது குறித்து நடிகர் அமிதாப்பச்சன் பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"என் காலத்திற்கு பிறகு என் சொத்துக்கள் என் பிள்ளைகளான மகள் சுவேதா மற்றும் மகன் அபிஷேக்கு சமமாக பிரித்து கொடுக்க வேண்டும் என்று நீண்ட காலத்திற்கு முன்பே என் மனைவி ஜெயா பச்சனுடன் சேர்த்து முடிவு எடுத்து விட்டேன்," என்று கூறியுள்ளார்.
"பெண் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு சென்று விட்டாலும் என் பார்வையில் அவள் எங்கள் மகள்தான். என் சொத்தில் அபிஷேக் பச்சனுக்கு இருக்கும் அதே உரிமைகள் எனது மகளுக்கும் உள்ளது" என்று பேசி உள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராயைப் பொறுத்தவரையில் அவரது சொத்துமதிப்பு சுமார் ரூ.850 கோடிகளில் இருந்து ரூ.900 கோடிகள் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகின்றது.