அம்மா சொன்ன ஒரு வார்த்தையால் 22 வயதில் சினிமாவிற்கு குட்பை சொன்ன 'நாயகன்' பட குழந்தை..!

அம்மா சொன்ன ஒரு வார்த்தையால் 22 வயதில் சினிமாவிற்கு குட்பை சொன்ன 'நாயகன்' பட குழந்தை..!
Nayakan Child Artist Neena
Nayakan Child Artist Neenasource: indian express
பிருந்தா நடராஜன்

பிருந்தா நடராஜன், 1987-88-ல் ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகிப் பணியாற்றியவர். கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் என்று பல பிரிவுகளிலும் திறம்பட எழுதும் ஆற்றல் பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

ஒரு காலத்தில் திரையில் குழந்தை நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டவர்... சுமார் 50 படங்களில் நடித்தவர்... புகழின் உச்சத்தில் இருந்தபோதே திரையுலகை விட்டு விலகியது ஏன்?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987-ல் வெளியான 'நாயகன்' திரைப்படத்தை இன்றும் ரசிகர்கள் மறக்க முடியாது. அந்தப் படத்தில் கமல்ஹாசனின் மகளாகச் சிறுமி சாருமதியாக நடித்த நீனா பலரது கவனத்தையும் ஈர்த்தார். அந்தக் குழந்தை நட்சத்திரம் வளர்ந்து கதாநாயகியாகவும் நடித்தார் என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர் தனது 22-வது வயதிலேயே நடிப்புக்கு விடை கொடுத்துவிட்டார். அதற்கான காரணத்தை அவரே தற்போது பகிர்ந்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் :

1981-ல் பிறந்த நீனா, தனது இரண்டு வயதிலேயே 1983-ல் வெளியான 'அபூர்வ சகோதரிகள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்தார். மணிரத்னத்தின் 'நாயகன்' படத்தில் கமல்ஹாசன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரின் மகளாக நடித்ததுடன், தனது கதாபாத்திரத்திற்குத் தானே பின்னணிக் குரலும் கொடுத்தார்.

அதன்பிறகு மணிரத்னத்தின் 'கீதாஞ்சலி', வசந்த் இயக்கிய 'கேளடி கண்மணி', பி.சி. ஸ்ரீராம் இயக்கிய 'மீரா' போன்ற படங்களில் நடித்தார். அஜித், ரம்பா நடித்த 'ராசி' படத்திலும் இடம்பெற்றார். அகத்தியன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக 'விடுகதை' படத்தில் கதாநாயகியாக நடித்தபோது அவருக்கு வயது 15 மட்டுமே. 'கண்ணாத்தாள்', 'சுதந்திரம்', 'நாகலிங்கம்', 'புரட்சிக்காரன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரையில் 'சித்தி', 'இப்படிக்கு தென்றல்', 'அண்ணாமலை' போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். மொத்தத்தில் சுமார் 50 முதல் 55 படங்களில் நடித்த அனுபவம் அவருக்கு உண்டு.

நடிப்பை விட்டு விலகியது ஏன்?

2004-ஆம் ஆண்டு, தனது 22-வது வயதில் நீனா திரையுலகிலிருந்து விலகினார். சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தனக்குச் சுதந்திரம் இருக்கவில்லை என்று கூறியுள்ளார். நடிப்பைத் தொடரலாமா, திருமணம் செய்துகொள்ளலாமா என்பதைக்கூட தன்னால் தீர்மானிக்க முடியவில்லை என்றும், அப்போது பெற்றோர் மீது கோபமும் வருத்தமும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது தாயார், "புகழும் பணமும் ஒருவித போதை போன்றவை; அவற்றின் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கக் கூடாது" என்று அறிவுறுத்தியுள்ளார். காலப்போக்கில் தாயின் அறிவுரையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டதாக நீனா தெரிவித்துள்ளார்.

இப்போது என்ன செய்கிறார்?

திருமணத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் குடும்பத்துடன் வசித்து வரும் நீனா, கணவரின் உணவகத் தொழிலிலும் பணியாற்றியுள்ளார். பின்னர் ஆசிரியர் பயிற்சியில் பட்டயப் படிப்பை முடித்து, உதவி ஆசிரியராகவும் சிறப்புக் கல்விப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். தற்போது பள்ளி நேரத்திற்கு முன்பும் பின்பும் நடைபெறும் குழந்தைகள் பராமரிப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

actress neena
actress neena source:news 18

'நாயகன்' படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம் :

'நாயகன்' படத்தில் நடித்தபோது கமல்ஹாசன் எவ்வளவு பெரிய நடிகர் என்பது தனக்குத் தெரியாது என்கிறார் நீனா. படத்தில் இடம்பெற்ற "தென்பாண்டிச் சீமையிலே" பாடல் காட்சியின்போது கமல்ஹாசன் மடியில் படுத்துத் தூங்கிவிட்டாராம். அப்போது துப்பாக்கிச் சத்தம் கேட்டு கமல்ஹாசன் ஓடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அவர் ஓடியதும் பயந்துபோன சிறுமி நீனாவும் அவரைப் பின்தொடர்ந்து ஓடிவிட்டாராம்.

அந்தக் காட்சியில் அவரது இயல்பான பயத்தைப் பார்த்து கமல்ஹாசனே பாராட்டியதாக நீனா நினைவுகூர்ந்துள்ளார். குழந்தையாக இருந்தபோதே நடிப்பில் இயல்பாக வெளிப்பட்ட திறமைக்கு இது ஒரு சுவாரஸ்யமான உதாரணம்.

பாட்டி தொடங்கி வைத்த நடிப்பு பயணம்!

நீனா சினிமாவுக்கு வந்தது திட்டமிட்ட ஒன்றல்ல. அவரது பெற்றோருக்குத் தொடக்கத்தில் அவர் நடிப்பதில் விருப்பம் இல்லையாம். ஆனால், அவரது பாட்டிதான் அவரை முதன்முதலில் படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். முதல் படமான 'அபூர்வ சகோதரிகள்' படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குத் திரும்பியதும் நீனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாம். இதனால் குடும்பத்தினர் கவலைப்பட்டுள்ளனர். பின்னர் படக்குழுவினர் அவரது பெற்றோரிடம் பேசி மீண்டும் நடிக்க அழைத்துச் சென்றுள்ளனர். இப்படித்தான் அவருக்கே தெரியாமல் அவரது திரைப்பயணம் தொடங்கியிருக்கிறது.

குழந்தைப் பருவத்தில் தொடங்கிய இப்பயணம் பின்னாளில் பல மொழிப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என விரிவடைந்தது. குறிப்பாக ஒரு சிறுமியாகத் தொடங்கி, பதினைந்து வயதிலேயே கதாநாயகியாக உயர்ந்தது அவரது திரைப்பயணத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

திருமண முடிவும் மனமாற்றமும் :

நடிப்பில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் திருமணம் செய்துகொள்வது நீனாவிற்கு விருப்பமில்லாத ஒன்றாக இருந்தது. கைவசம் பல படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் இருந்ததால் நடிப்பைத் தொடரவே விரும்பியிருக்கிறார். ஆனால், குடும்பத்தினரின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னாளில் தாயின் அறிவுரையையும் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் புரிந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இப்போது கணவரே மீண்டும் நடிக்கச் சொல்லி ஊக்குவித்தாலும், ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள குடும்ப வாழ்க்கையிலும் பணியிலும் மகிழ்ச்சியாக இருப்பதால் உடனடியாகத் திரும்பும் எண்ணம் அவருக்கு இல்லை. வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்து நடிப்பதற்கான பயணச் செலவுகளையும் நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார்.

திரையில் கிடைத்த புகழை விட வாழ்க்கையின் அமைதிக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து புதிய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் நீனா. குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய அவரது பயணம் இன்று கல்வித்துறையில் தொடர்கிறது. ரசிகர்களின் நினைவில் அவர் என்றும் 'நாயகன்' படத்தின் சாருமதியாகவே நிலைத்திருப்பார்!

இதையும் படியுங்கள்:
சிதம்பரம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை: ஆன்மிகப் பயணம் தந்த ஆனந்த அனுபவம்!
Nayakan Child Artist Neena