
நடிகர் தளபதி விஜய் தற்போது தனது சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார். 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை குறி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய். விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் பற்றி முன்னணி நடிகரான பிரகாஷ்ராஜ், தற்போது சர்ச்சைக்குரிய வகையில் வெளிப்படையாக தாக்கி பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரகாஷ்ராஜ் சொன்னதில் என்ன தவறு என சிலரும், அவர் பேசியது தப்பு என விஜய் ரசிகர்களும் கூறி வருகிறார்கள். இத்தனைக்கும் விஜய்யுடன் ‘நேருக்கு நேர்', ‘கில்லி', ‘சிவகாசி', ‘வில்லு', ‘வாரிசு' படங்களில் பிரகாஷ்ராஜ் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமா துறையில் முன்னணி நடிகரான பிரகாஷ்ராஜ், நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக வலம் வருகிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். மத்திய அரசை தொடர்ந்து தாக்கி பேசி வரும் அவர், தற்போது பவன் கல்யாணையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தநிலையில் நடிகர் விஜய்யை அவர் தற்போது தாக்கி பேசியுள்ளார்.
அவர் கூறும்போது, “விஜய் அரசியலுக்கு புதியவர். அவரை நான் அறிந்தவரையில் நாங்கள் அரசியலை பற்றி தீவிரமாக பேசியதில்லை. சினிமாவில் இருக்கும் பிரபலத்தை பின்புலமாக கொண்டே அவர் அரசியலுக்கு வந்துள்ளார். பவன் கல்யாணும் அப்படிதான். அவர்கள் இருவரும் நடிகர்கள். சினிமா மூலம் கிடைத்த புகழை வைத்து அரசியலுக்கு வந்துவிட்டார்கள். விஜய், பவன் கல்யாண் இருவருக்கும் நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து தெளிவான பார்வை இல்லை, புரிதலும் இல்லை. இவர்கள் இருவருமே தேர்தலில் நின்றால் ஒரு சில இடங்களை பெறலாம்.
ஆனால், அதற்கு பிறகு தங்களை நிரூபிக்க வேண்டும். விஜய் பேசும்போது வசனங்களை கேட்பதுபோல் தான் இருக்கிறது. ஆனால் அவருக்கு ஆழமான புரிதலே இல்லை. இவரை நம்பியா இந்த நாட்டின் தலைவிதியை ஒப்படைப்பது?" என விமர்சித்துள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த கருத்து பரபரப்பையும், சலசலப்பையும் உண்டாக்கி இருக்கிறது.