‘புஷ்பா 2’ நடிகருடன் நடிக்க மறுத்த ‘பாலிவுட் நடிகை’
சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அல்லு அர்ஜுனின் அசுர தாண்டவத்துடன் வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 1720 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனுடன், அட்லி கைகோர்த்துள்ளார். தமிழில் ‘ராஜா ராணி', ‘மெர்சல்', ‘தெறி', ‘பிகில்' போன்ற வெற்றி படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானை வைத்து இயக்கிய ‘ஜவான்' மிகப்பெரிய ‘ஹிட்' அடித்து பாலிவுட்டில் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
2000 ஆண்டின் உலக அழகியான பிரியங்கா சோப்ரா, 2003-ல் ‘தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
ஆனால் இவர் பாலிவுட்டில் அறிமுகமாகவதற்கு முன்னர் தமிழில் நடிகர் விஜய் உடன் 2002-ல் வெளியான தமிழன் என்ற திரைப்படத்தில் மூலம் முதல் முதலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
கிரிஷ், டான் போன்ற படங்கள் அவருக்கு பேரையும் புகழையும் தந்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த, காமினி, 7 கூன் மாஃப், பர்ஃபி, மேரி கோம், தில் தடக்னே தோ, பாஜிராவ் மஸ்தானி போன்ற படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களை சித்தரித்ததற்காக பாராட்டை பெற்ற பிரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் முன்னனி நாயகியாக வலம் வந்தார்.
2015 முதல் 2018 வரை, ஏபிசி திரில்லர் தொடரான குவாண்டிகோவில் அலெக்ஸ் பாரிஷாக நடித்த இவர் அமெரிக்க நெட்வொர்க் நாடகத் தொடருக்கு தலைமை தாங்கிய முதல் தெற்காசியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அதுமட்டுமின்றி பேவாட்ச், இஸ் நாட் இட் ரொமாண்டிக், தி வைட் டைகர், மற்றும் தி மேட்ரிக்ஸ் ரிஸெரக்ஷன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களிலும் தோன்றியுள்ளார்.
மேலும் சிட்டாடல் (2023–தற்போது வரை) என்ற அதிரடி திரில்லர் தொடரிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் 2018ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் மற்றும் நடிகர் நிக் ஜோனாஸை சில மாதங்கள் காதலித்துவிட்டு அதே ஆண்டில் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஹாலிவுட், பாலிவுட் என பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, அல்லு அர்ஜூன், அட்லி கூட்டணியில் நடிக்க கேட்ட போது அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த விமர்சனங்களை பிரியங்கா சோப்ரா தரப்பினர் மறுத்துள்ளனர்.
''ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். அதேபோல இந்தியில் உருவாகவுள்ள ‘கிரிஷ்-4' படத்துக்கும் அவர் கால்ஷீட் அளித்துள்ளார். எனவே கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே அல்லு அர்ஜூன் படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க முடியாமல் போய்விட்டது. மற்றபடி யூகங்களை நம்பவேண்டாம்'', என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.