

தமிழ் திரையுலகில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்தின் சாதனையை பாராட்டி ' தர்மன்' திரைப்பட குழு வீடியோ வெளியிட்டு கொண்டாடியது. 1975 ஆம் ஆண்டு 'அபூர்வராகங்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கமல் கதாநாயகனாக நடித்த அந்த திரைப்படத்தில் ரஜினி துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கினார்.
ரஜினியின் ஆரம்ப காலகட்ட வளர்ச்சியில் கே. பாலச்சந்தருக்கும் , கமலுக்கும் குறிப்பிட்ட அளவில் பங்கு உள்ளது. கமல் தான் கதாநாயகனாக நடித்து வந்த பல திரைப்படங்களில் ரஜினிக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்தார். கே.பாலசந்தர் இயக்கிய படங்களிலும் ரஜினிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 'மூன்று முடிச்சு' திரைப்படத்தில் ரஜினியின் வில்லன் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாரதிராஜாவின் '16 வயதினிலே ' திரைப்படத்தில் ரஜினி நடித்த 'பரட்டை ' என்கிற வில்லன் கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்படுகிறது. அதன் பின்னர் 'பைரவி' திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். அந்த திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ரஜினிக்கு கதாநாயகன் வாய்ப்பு தொடர்ச்சியாக கிடைத்தது. 1980 -களிலேயே ரஜினியின் மார்க்கெட் சூடுபிடிக்கத் தொடங்கியது. பில்லா , பிரியா போன்ற திரைப்படங்களின் வெற்றி ரஜினியை கமலுக்கு போட்டியாக மாற்றியது.
தமிழ் மட்டுமின்றி மலையாளம் , கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரஜினி தொடர்ச்சியாக நடித்து வந்தார். ஒவ்வொரு மொழியிலும் ரஜினி நடிக்கும் திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றது. ஒவ்வொரு மாநில சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்த ஒரே நடிகராக ரஜினி இருக்கிறார். அமிதாப் பச்சனுடன் ரஜினி அந்தா கணுன், கிராப்தார் ,ஹம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பல வெற்றித் திரைப்படங்களின் தமிழ் ரீமேக்கில் நடித்து ரஜினிகாந்த் புகழ்பெற்றார். பில்லா , தீ, மிஸ்டர் பாரத், சிவா , நான் மகான் அல்ல , படிக்காதவன் , வேலைக்காரன் ஆகியவை ரஜினி நடித்த அமிதாப் பச்சன் படங்களின் மறுபதிப்புகள். 90 -களின் தொடக்கத்தில் ரஜினி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
பாட்ஷா திரைப்படம் ரஜினியின் திரை உச்சத்தை உலகிற்கு காட்டியது. 'முத்து ' திரைப்படம் ரஜினிகாந்தை ஜப்பான் வரை கொண்டு சென்றது , 'படையப்பா ' திரைப்படம் ரஜினியின் வெள்ளி விழா ஆண்டு திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டாகி ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தியது. 2000- களின் பிற்பகுதி ரஜினியை தேசிய அளவில் முதலிடத்திற்கு போட்டி போட வைத்தது. சிவாஜி , எந்திரன் , 2.0 போன்ற திரைப்படங்கள் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த திரைப்படங்களாக சாதனை செய்தது.
ரஜினிகாந்த் ₹500 கோடி , ₹600 கோடி வசூல் செய்த முதல் தமிழ் சினிமா நடிகராகவும் , இன்று வரையில் அந்த சாதனையை மற்ற தமிழ் நடிகர்கள், தொடாத அளவிலும் உச்சத்தில் இருக்கிறார். 51 வருடங்களுக்கு முன்னர் அபூர்வ ராகத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், இன்று வரையிலும் கதாநாயகனாகவே இருப்பது , அவரது திரையுலக ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது. தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி, தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்புக் குழு ரஜினியின் சாதனையை கொண்டாடும் வகையில் , கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் அவரை பெருமைப்படுத்தியுள்ளனர்.