
சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமா தயாரிப்பாளர் தனஞ்சயன் ஒரு விஷயம் சொன்னார். குட் பேட் அக்லி பற்றிய பேட்டி அது. "அது வசூலில் சாதித்தது இல்லையா? பிறகு அது நல்ல படம் தானே?" என்று கேட்டார். உண்மையில் அந்தப் படம் இருநூறு கோடி ரூபாய் வசூலித்ததாகத் தகவல். ஆனால் அந்தத் தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தையே சந்தித்தது. காரணம் படத்தின் தயாரிப்புச் செலவு.
நாயகர்களின் சம்பளம் நூறு கோடியென்ற எண்ணைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. ரஜினி, விஜய், அஜீத், இவர்கள் படம் என்றால் இது அடிப்படைத் தொகை. சிவகார்த்திகேயனும் அமரன் வெற்றிக்குப் பிறகு இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படித் தயாரிப்புச் செலவில் எண்பது சதமானம் நடிகர்கள், நடிகைகள் ஊதியமாகவே சென்று விட்டால் படம் எடுக்கப் பணம் எங்கே மீதி இருக்கும்.
ஏற்கனவே பல தயாரிப்பு நிறுவனங்கள் படம் எடுப்பதையே நிறுத்தி வைத்திருக்கின்றன. ஏவிஎம், கவிதாலயா, சத்யா மூவீஸ் போன்ற நிறுவனங்கள் படமே எடுப்பதில்லை. சூப்பர் குட் பிலிம்ஸ், சத்யஜோதி, ஏ ஜி எஸ் மூவீஸ் என வெகுசில நிறுவனங்கள் தான் தயாரிப்பில் இருக்கின்றன. புதுப் புது தயாரிப்பாளர்கள் வந்து கொண்டே இருந்தாலும் ஒரு கட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் தேங்கி விடுகிறார்கள். மிகப் பிரபலமான ஆஸ்கார் பிலிமிஸ் என்ன செய்கிறது என்று யாருக்காவது தெரியுமா?
சன் பிக்சர்ஸ் கதையே தனி. சூப்பர் ஸ்டாரின் ஆஸ்தான நிறுவனமாகி விட்டது அது. லைகா அல்லது சன்பிக்சர்ஸ் தவிர வேறு நிறுவனங்களில் சமீபத்தில் அவர் நடிக்கவே இல்லை.
சன் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக இருப்பதால் அது செலவைத் தாங்கும். ஆனாலும் திட்டமிட்டு பெரிய படங்கள் எடுத்துக் காசு பார்க்கிறார்கள். ஜெயிலரின் வெற்றி சாமான்யமானதா. அவர்களுடைய அடுத்தடுத்த படங்களைப் பாருங்கள் கூலி, ஜெயிலர் 2 கிட்டத்தட்ட ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் இதில் இறக்கியிருக்கிறார்கள்.
லைகா நிறுவனம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் லண்டனிலிருந்து வந்தது. தொடர்ந்து பெரிய படங்கள், சிறிய படங்கள் என வரிசையாக எடுத்துத் தள்ளினார்கள். இந்த நிறுவனத்தில் நடிக்காத பெரிய நடிகர்களே கிடையாது. இயக்காத பெரிய இயக்குநர்களும் கிடையாது. பெரியகல் சின்ன லாபம் என்று இருந்தால் கூடப் பரவாயில்லை. பெரியகல்லு பெரிய நஷ்டம் என்று தொடர்ந்து அடி வாங்கியது. இந்தியன் 2 யாருமே எதிர்பார்க்காத ஒரு தோல்வியை அடைந்தது. அதிலிருந்து மீண்டு வரக் கமல்ஹாசன், ஷங்கர், லைகா என அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கமல் சற்று சுதாரித்து மணி ரத்னத்திடம் சென்று விட்டார். முப்பத்து ஏழு ஆண்டுகள் கழித்து இருவரும் இணைய இன்று தக் லைப் தான் ஊரெங்கும் பேசு பொருள்.
இவ்வளவு ஆண்டுகள் கட்டிக் காத்த பெயரை எல்லாம் ஒரே படத்தில் கோட்டை விட்டார் ஷங்கர். அதற்குப் பிறகு வந்த கேம் சேஞ்சர் தன்னைக் காப்பாற்றும் என நினைத்தார். அது இந்தியன் 2 வே தேவலாம் என்ற நிலைக்குத் தள்ளி விட்டது. ஏகப்பட்ட செலவு செய்து அந்தப் படத்தை எடுத்த தில் ராஜு மிகப் பெரிய நஷ்டத்திற்கு ஆளானார். ராம் சரண் அவரைச் சந்தித்து அந்த நஷ்டத்தை ஈடு கட்ட ஒரு படம் செய்து தருவதாகச் சொல்லி இருக்கிறார். அந்த விதத்தில் அவர் தப்பித்தார்.
முன்பெல்லாம் கதாநாயகிகள் மட்டுமே வெளி மாநிலங்களிலிருந்து வருவார்கள். அவ்வப்போது வில்லன்கள். இப்பொழுது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்ப்படவுலகில் நுழைந்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதில் குறிப்பிடத்தக்கவர்கள். குட் பேட் அக்லிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு படம். அடுத்து அஜீத்குமாருடன் ஒரு படம் என இறங்கி இருக்கிறார்கள். பல வெற்றிப்படங்களும் நல்ல பணபலமும் உள்ள இந்த நிறுவனம் தான் கோலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் பேசுபொருளாக இருக்கிறது. காரணம் சன்னி தியோல் நடிப்பில் கோபி சந்த் மல்லினேணி இயக்கத்தில் வெளியான ஜாட் என்ற இந்திப் படம். பக்கா தெலுங்கு கமர்ஷியல் படம் போலவே அதை எடுத்து வட இந்தியாவின் மாஸ் மார்க்கெட்டை பிடித்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டாருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அதைத் தெலுங்கு இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
பணம் அள்ளிக் கொடுக்கிறார்கள். இது போதாதா? நாயகர்களும் இது போன்ற நிறுவனங்களுக்கே கால்ஷீட்டில் முன்னுரிமை கொடுக்கிறார்கள். உள்ளூரிலேயே இருந்து சாதித்த தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கைகளைச் சுட்டுக் கொள்ளத் தயாரில்லை. தயாரிப்பாளர்களுக்கிடையே இருக்கும் போட்டியில் கூடியது படங்களின் எண்ணிக்கை அல்ல. நடிகர்களின் சம்பளம் மட்டுமே. பணம் கொட்டுவதால் மட்டுமே ஒரு படத்தை வெற்றி பெற வைக்க முடியாது என்று திரையுலகினருக்குத் தெரியாதா என்ன. அது ஒரு மாய வலை. அதில் சிக்கிக் கொண்டவர்கள் வெளியே வருவது மிகக் கடினம்.
சமூக ஊடகங்கள் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு படத்தின் வெற்றி முதல் மூன்று மணி நேரத்திலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. முதல் நாள் முதல் காட்சி பார்த்தவுடன் வெளியாகும் விமர்சனங்கள் படத்தின் ஓட்டத்திற்குப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. விதிவிலக்குகள் சில படங்களுக்கு இருக்கலாம். ஆனால் இந்த உடனடி விமர்சனங்கள் மக்களைத் திரையரங்குகளிலிருந்து தள்ளி வைக்கின்றன.
சில வாரப் பத்திரிகைகளும் நாளிதழ்களும் மட்டும் செய்து கொண்டிருந்த விமர்சனங்களை இப்பொழுது நூற்றுக் கணக்கானவர் செய்கின்றனர். எக்ஸ்க்ளூசிவ் என்ற பெயரில் அனைத்து யூ ட்யூப் சானல்களும் இந்த வேலையில் இறங்கிவிட்டன.
நூறு நாள்கள், வெள்ளி விழா, ஒரு வருடம் என ஓடிய தமிழ்ப் படங்கள் இப்பொழுது வெற்றிகரமான இரண்டாவது நாள் என்று விளம்பரம் கொடுக்கும் நிலையில் தான் இருக்கின்றன. ஒரு நல்ல படத்தின் வெற்றி அதன் முதல் மூன்று நாள்கள் அல்லது முதல் வார இறுதி வசூலில் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. ஓடாத படங்கள் என்றால் அது ஒரே காட்சியில் முடிவாகி விடுகிறது. இது தான் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை. அடுத்த முறை படத்தின் வெற்றி விழா என்று பார்த்தால் குழம்பி விட வேண்டாம். கண்டிப்பாக அது படம் வந்த மூன்றாம் நாள் அல்லது நான்காவது நாளாகத் தான் இருக்கும்.