விமர்சனம்: சாத்தான்: தி டார்க் - சாத்தான் பயமுறுத்தியதா?

Satan: The Dark
Satan: The Dark
Published on
ரேட்டிங்(3.5 / 5)

மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் சாத்தான்: தி டார்க் (Satan: The Dark). 1980 கால கட்டம், தமிழ்நாட்டில் அஸ்தினாபுரம் என்ற மலை கிராமம். அந்த மலை கிராமத்தில் உள்ள மக்கள் பலவேறு மூட நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக இறைவனை வழிபடுவது வீண் வேலை. சாத்தான் தான் எல்லாம் என்றென்னி வாழ்ந்து வருபவர்கள்.

அந்த ஊரில் ஒரு அம்மா இரண்டு மகள்கள் வாழ்ந்து வருகிறார்கள். இரண்டு மகள்களும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு கான்வென்டில் படிக்கிறார்கள். ஒரு நாள் அம்மாவின் உடலிலும், மனதிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கிறது. அந்த ஊரில் பல்வேறு மர்மமான மரணங்கள் நிகழ்கிறது. காவல் துறைக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இரண்டு மகள்களில் மூத்த மகளை ஒரு தலையாக காதலிக்கும் வகுப்பு தோழன் ஒருவன் தன் காதலிக்கும் பெண்ணின் வீட்டிற்கு வந்து இந்த வீட்டில் இருப்பவர்களுக்கும், நடக்கும் மரணங்களுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறான். இந்த கண்டுபிடிப்பின் விளைவாக பல்வேறு மோசமான அனுபவங்களை சந்திக்கிறான். இந்த அனுபவங்களை எப்படி சமாளித்தான் என்று சொல்கிறது கதை.

கடவுள் - சாத்தான் கதைகளை மைய்யப்படுத்தி பல படங்கள் ஹாலிவுட்டில் வந்து விட்டன. இது போன்ற இன்னொரு படம் தான் இது என்று பார்க்க தொடங்கினால் கதை பழையது தான் என்றாலும் சொல்லப்பட்ட விதம் மிக சிறப்பாக உள்ளது. படம் ஆரம்பித்து சில காட்சிகளுக்கு பிறகு மெல்லிதாக வரும் திகில் உணர்வு படம் முடியும் வரை இருக்கிறது. துண்டாக கிடக்கும் விரல்கள், கண் என பல பயமுறுத்தும் இடங்கள் உள்ளன. இந்த காட்சிகள் வரும் போது ரசிகர்கள் சிலர் தன்னை அறியாமல் கத்துவதை கேட்க முடிந்தது. தலைவிரி கோலமான பயங்கரமான உருவங்கள் வரவில்லை. ஆனால் ஏதாவது ஒன்று வந்து விடும் என்ற பய உணர்வு மட்டும் வருகிறது.

படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங், லொகேஷன், கதாபாத்திர வடிவமைப்பு, நடிகர், நடிகைகள் தேர்வு, நடிப்பு என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருக்கிறது. இந்த அனைத்தையும் விட டாப்பாக இருப்பது சப்த வடிவமைப்புதான். ஒவ்வொரு காட்சியிலும் பயத்தை நம் மனதில் ஏற்படுத்துவதில் சப்தத்தின் பங்களிப்பு முக்கியமானது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம் - Happy Raj - ரசிகர்கள் ஹாப்பியா?
Satan: The Dark

சினிமாக்களிலும், சீரியல்களிலும் அமைதியான கேரக்டரில் நடித்து வரும் மோனா பத்ரே இந்த படத்தில் ஒரு சைக்கோவாக, அன்பான அம்மாவாக நடித்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார். ஹீரோ பேட்ரிக் ஜான், அயரா இருவருக்கும் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார்கள்.

படத்தில் பல நிறைகள் இருந்தாலும், படத்தின் தொடக்கத்தில் வாய்ஸ் ஓவரில் சில கடந்த கால சம்பவங்களை சொல்கிறார்கள். இது தேவையற்ற ஒன்றாக இருப்பது சற்று குறையே. படம் முடியும் போது அடுத்த பாகத்துக்கு லீட் தருகிறார்கள். அடுத்த பாகத்தில் இது போன்ற வாய்ஸ் ஓவர் இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

சாத்தான்: தி டார்க் - நேர்த்தியான, சரியான ஹாரர் படம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com