

அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'டேர் டெவில்' என்று பெயரிடப்பட்டுள்ளது . அஜித்தின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது மட்டும் உறுதியாக இருந்தது. நீண்ட நாட்களாக அஜித்தின் புதிய திரைப்படம் பற்றி பல்வேறு வதந்திகளும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளும் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தன.
ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை கதாநாயகனாக வைத்து 'குட் பேட் அக்லி' என்ற திரைப்படத்தினை இயக்கியிருந்தார். கேங்ஸ்டர் வகையை சார்ந்த இந்த திரைப்படம் நகைச்சுவை கலந்து, வித்தியாசமான திரைக்கதையுடன் இருந்தது. அஜித் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடிக்கும் என்று விமர்சகர்கள் எழுதினார்கள். இந்த திரைப்படத்தில் அஜித்துடன் திரிஷா , பிரபு , ஜாக்கி ஷெராப் , அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
அஜித்தின் இறுதியாக வெளியான திரைப்படமான இது பாக்ஸ் ஆபிஸில் கலமையான விமர்சனங்களை பெற்று ஓரளவு வசூலை பெற்று தந்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தனது அடுத்த திரைப்படத்திற்கும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குனர் என்பதை உறுதி செய்து இருந்தார்.
சமீப காலமாக அஜித் ஒரே இயக்குனரின் இயக்கத்தில் தொடர்ந்து ஒன்றிரண்டிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு முன்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார். வீரம் , விவேகம் , வேதாளம் , விஸ்வாசம் என தொடர்ச்சியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. ஒரு கட்டத்தில் அஜித்தின் ரசிகர்களே சிறுத்தை சிவாவிடமிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும், என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதைப்போல் அஜித் H.வினோத் இயக்கத்தில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார். முதலில் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை அஜித்தை வைத்து இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அந்த திரைப்படத்தினை தொடர்ந்து வலிமை , துணிவு ஆகிய திரைப்படங்களை அஜித்தை வைத்து இயக்கி இருந்தார் H. வினோத். அதன் பிறகு 'விடாமுயற்சி' என்ற திரைப்படத்தில் அஜித்தை மகிழ்திருமேனி இயக்கியிருந்தார். ஆனால் அவருக்கு மட்டும் அஜித் அடுத்த திரைப்படத்திற்கான வாய்ப்பினை வழங்கவில்லை.
தற்போது அஜித்தின் கடைசி திரைப்படமான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் தனது சினிமா பயணத்தை தொடர்கிறார். AK 64 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட இந்த திரைப்படத்தை தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம் காட்டி இருந்தன, என்று தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அஜித்தின் அதிக சம்பளம் , படத்தின் உயர்ந்த பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் படத் தயாரிப்பு பற்றி தகவல் எதுவும் வராமல் இருந்தது.
இறுதியாக சில நாட்களுக்கு முன்னர், அஜித்தை வைத்து அவரது மனைவி ஷாலினி திரைப்படம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது அந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஷாலினி 'பிரேவ் ஹார்ட் ப்ரொடக்ஷன்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், அஜித் நடிக்கும் டேர் டெவில் திரைப்படத்தை ஷாலினி தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பூஜை தொடங்க உள்ளது.