ஹாலிவுட் சினிமா உலகில், டைட்டானிக் எப்படி ஒரு மைல்கல்லாக இருக்கிறதோ அதே போல இந்திய சினிமாவிற்கு அடையாளமாக விளங்கும் ஒரு திரைப்படம் தான் ஷோலே. ஷோலே திரைப்படம் வெற்றிபெற்ற அளவிற்கு உலகில் இன்னொரு திரைப்படம் வெற்றி பெறுமா ? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. 1975 இல் வெளியான வரலாறு காணாத அளவில் வெற்றியை பெற்றது. ஷோலே திரைப்படம் , அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் 25 கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்று சாதனை செய்துள்ளது. அன்று ஹாலிவுட் சினிமாவும் செய்யாத சாதனை அது.
ஷோலே திரைப்படம் ஒட்டு மொத்த சினிமா வரலாற்றையும் தலைகீழாக புரட்டிப்போட்டது. அமிதாப்பச்சன், தர்மேந்திரா , சஞ்சீவ்குமார் , ஹேமாமாலினி , ஜெயா பச்சன், அம்ஜத்கான் ஆகியோர் நடிப்பில் வெளியானது. முதலில் இந்த திரைப்படத்தில் வில்லன் கப்பர் சிங் வேடத்திலோ அல்லது தாகூர் வேடத்திலோ தர்மேந்திரா நடிப்பதாக இருந்தது.
ஆனால், அவர் ஹேமாமாலினியை கவரும் பொருட்டு நாயகன் வீருவாக வேடம் ஏற்றுக் கொண்டார். வீருவின் நண்பன் கதாபாத்திரத்தில் சத்ருகன் சின்ஹா நடிக்க மறுத்ததால் , அன்று வளரும் நடிகராக இருந்த அமிதாப் பச்சனை ஜெய் வேடத்தில் நடிக்க வைக்க தர்மேந்திரா சிபாரிசு செய்தார். அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக ஜெயாபச்சன் நடித்தார். இந்த படத்தில் ஜோடியாக நடித்த தர்மேந்திரா - ஹேமாமாலினி , அமிதாப் - ஜெயா ஆகியோர் திருமணம் செய்து நிஜ வாழ்க்கை ஜோடியாகவும் மாறினர்.
கர்நாடக மாநிலம் ராம் நகரில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது. ஒரு ஊரில் கொள்ளையர்கள் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. அந்த ஊரில் வசிக்கும் போலீஸ் அதிகாரியான சஞ்சீவ்குமார் மக்களை காப்பாற்ற திருடர்களான தர்மேந்திரா மற்றும் அமிதாப்பை ஊருக்கு அழைத்து வருகிறார். இரண்டு திருடர்களும் ஊரோடு ஒன்றி கொள்ளையர்களை ஒழிக்கப் போராடுகின்றனர்.
அந்த ஊரில் தர்மேந்திரா ஹேமமாலினியையும் , அமிதாப் ஜெயாவையும் காதலிக்கின்றனர். இறுதிக் காட்சியில் கொள்ளையர்கள் உடனான சண்டையில் அமிதாப் , தர்மேந்திராவை காக்க உயிர்த் துறக்கிறார். தர்மேந்திரா ஊரைக் காப்பாற்றி தன் காதலியுடன் சேர்கிறார். படத்தின் வில்லனை சஞ்சீவ் குமார் கொடூரமாக ஷூவால் மிதித்தே கொன்று விடுகிறார்.
1975 இல் ஷோலே வெளியானபோது படத்திற்கு எந்த வரவேற்பும் இல்லாமல் போனது. சில நாட்களில் படத்தின் கதை வசனம் ஆடியோவாக வெளியானதும் மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டரை நோக்கி வர ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் படத்தின் ஒரு டிக்கெட் மும்பையில் ₹2000 க்கும் அதிகமாக விற்கப்பட்டது. அன்றைய காலத்தில் அந்த தொகை பல லட்சங்களுக்கு இணையானது. பல தியேட்டர்களில் மற்ற படங்களை தூக்கிவிட்டு ஷோலே திரையிடப்பட்டது.
வட இந்தியா முழுக்க ஷோலே மட்டுமே பெரும்பாலான திரையரங்குகளில் ஓடியது. 100 திரையரங்குகளில் வெள்ளிவிழாவும் (25 வாரங்கள்) , 60 திரையரங்குகளில் பொன் விழாவும் (50 வாரங்கள்) கொண்டாடிய திரைப்படமாக ஷோலே உள்ளது. மும்பையின் 1500 பேர் அமரும் பெரிய தியேட்டரான மினர்வாவில் 5 வருடங்கள் தொடர்ச்சியாக ஓடி ஷோலே சாதனை படைத்தது.
ஷோலேவின் பாதிப்புகள் பாலிவுட்டில் கடுமையாக இருந்தன. தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் பாலிவுட்டின் மற்ற திரைப்படங்களுக்கு திரையரங்கம் கிடைப்பதில் பெரிய தட்டுப்பாடு நிலவியதால், பல நடிகர்களின் மார்க்கெட் சரிந்தது. ஷோலேவில் துணை நாயகனாக நடித்த அமிதாப் பச்சனை தான் மக்கள் கதாநாயகனாக நினைக்க தர்மேந்திராவுக்கு சங்கடம் ஆனது. இந்த திரைப்படம் சிறந்த நட்புக்கு எடுத்துக் காட்டாக இன்று வரை உள்ளது. சிறந்த நட்பு பாடலாக " ஏ தோஸ்த் தீ" தான் இன்று வரை உள்ளது.
ஒரே படத்தின் மூலம் அமிதாப் இந்தியாவின் நம்பர் 1 நடிகர் ஆனார். உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் முதல் இடத்தில் உள்ளார். ஷோலே இந்தியா முழுக்க திரையிடப்பட்டது . அந்த காலத்தில் ஷோலே திரைப்படம் பார்க்காதவர்கள் இந்தியாவில் மிகவும் அரிது. ராகுல்தேவ் பர்மன் இசையில் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியை பெற்றது. 1994 இல் வெளியான "ஹம் ஆப் கே ஹென் கோன்" திரைப்படம் ஷோலேவின் பாக்ஸ் ஆபிசை முறியடித்தது ஆயினும் 1975 இல் உள்ள பண மதிப்பு 1994 இல் மிக அதிகம் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஷோலேவின் பாதிப்பில் ஏராளமான திரைப்படங்கள் அதை தழுவி எடுக்கப்பட்டது. இந்திய சினிமாவின் அடையாளமாக ஷோலே நிலைப் பெற்றுள்ளது.
தற்போது ஷோலே திரைப்படத்தை 4K தொழில் நுட்பத்தில் மேம்படுத்தி, மீண்டும் உலகம் முழுக்க திரையிட உள்ளார்கள். நேற்று இத்தாலியில் ஒரு திறந்தவெளி தியேட்டரில் ஷோலே திரைப்படம் காட்சியிடப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி , சுதந்திர தினத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் ஷோலே வெளியான அதே நாளில் மீண்டும் வெளியாக உள்ளது.