
சிவகார்த்திகேயன் படத்தில் சண்டை நன்றாக இருந்தது என்று சொல்வோம் என நினைத்தே இருக்க மாட்டோம். மதராஸி பார்க்கும் வரை. ஆனால் சண்டை மட்டும் தான் நன்றாக இருந்ததா இல்லை மதராஸி படமுமா எனப் பார்க்கலாம்.
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரத்தைப் பரப்ப ஐந்து கன்டெய்னர்களில் விதவிதமான துப்பாக்கிகளைக் கடத்திக் கொண்டு வருகிறார்கள் வித்யுத் ஜம்வாலும், ஷபீர் கல்லரக்கலும். அதைத் தடுக்க நினைக்கும் என் ஐ ஏ என்ற குழுவின் தலைவர் பிஜு மேனன். அவரது மகன் விக்ராந்தும் இந்தக் குழுவில் ஓர் அதிகாரி. அவர்களது முயற்சிகளை முறியடித்துக் கன்டெய்னர்கள் உள்ளேயும் வந்துவிடுகின்றன. அதைப் பாதுகாத்து வைத்திருக்கும் கிடங்கிலேயே அதை அழித்துவிட வேண்டும். அதற்கு ஒரு சாவுக்குத் துணிந்த ஒருவர் தேவை என்று நினைக்கிறார் பிஜு மேனன்.
முதலில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் அடிபட்ட இவரும் மற்றொரு சம்பவத்தில் அடிபட்ட சிவகார்த்திகேயனும் ஒரு மருத்துவமனையில் சந்திக்கிறார்கள். தனது காதலி தன்னை விட்டுப் போய்விட்டதால் எப்படியாவது செத்து விட வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை இதற்குப் பயன்படுத்தினால் என்ன என்று யோசிக்கிறார் பிஜு. இதில் ஜெயித்தால் மக்களைக் காப்பாற்றத் தான் உயிரை விட்டதாகத் தனது காதலியிடம் (ருக்மிணி வசந்த்) சொல்லச் சொல்லி ஒப்புக் கொள்கிறார் சிவா. அதன் பிறகு என்ன ஆனது என்பது தான் மதராஸி படத்தின் கதை.
ஒரு வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அமரன் படத்திற்குப் பிறகு வரும் படமாதலால் இது அந்த அளவு இல்லாவிட்டாலும் மோசமாக வந்துவிடக் கூடாது என்று இருப்பவர் சிவா. துப்பாக்கி, கத்தி, ரமணா, கஜினியென முத்திரைப் படங்களைக் கொடுத்த முருகதாஸ் அதிலிருந்து சில முக்கிய விஷயங்களை நாசூக்காக இதில் பயன்படுத்தி இருக்கிறார். அது சில இடங்களில் பலம். சில இடங்களில் பலவீனம்.
சிவகார்த்திகேயன் பாத்திரத்திற்கு ஒரு விதமான மனவியாதி இருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். யாருக்கு அடிபட்டாலும் கஷ்டம் வந்தாலும் அவர்கள் தன்னுடைய குடும்பமாக நினைத்து உதவுகிறார். அதற்கு ஒரு காரணமாகப் பிளாஷ் பாக் காட்சி ஒன்று வருகிறது. சிறிய காட்சியாக இருந்தாலும் அவருடைய நடவடிக்கைகளுக்குப் பலம் சேர்ப்பதாக இருக்கிறது. இப்படி அவர் உதவுவதைப் பார்த்த ருக்மணி வசந்த்துக்குக் காதலைத் தவிர வேறு ஏதாவது வருமோ. வருகிறது. தன்னுடைய காதலால் அவர் மாறிவிடுவதைப் பார்த்தாலும் ஒரு கட்டத்தில் பிரிந்து விடுகிறார் ருக்மிணி. இடைவேளை வரை காதல், காமெடியெனக் கலாட்டாவாக எந்தவிதமான சுவாரஸ்யமும் இல்லாமல் நகரும் கதை இடைவேளையின்போது சூடு பிடிக்கிறது.
இடைவேளைக்குப் பிறகு இது முருகதாஸ் படமா ஹரி படமா என்று யோசிக்க வைக்கும் அளவு பரபரவெனத் திரைக்கதை பறக்கிறது. லாஜிக் எல்லாம் தூக்கி பரண் மேல் வைத்து விட்டு வித விதமான சண்டைக்காட்சிகள், ஷூட் அவுட்டுகள் என ஆக்க்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். வில்லன்களான வித்யுத் ஜம்வாலும் ஷபீரும் சண்டைக்காட்சிகளில் தங்களது திறமைகளைக் காட்டியிருக்கிறார்கள். வித்யுத் கிட்டத்தட்ட ஒரு ஹீரோபோலச் சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் ஒரு தனியறையில் சிவகார்த்திகேயன் மோதும் காட்சி, துறைமுகத்தில் கிளைமாக்ஸ் சண்டையென இரண்டைச் சொல்லலாம்.
படத்தின் துப்பாக்கிச் சூடு காட்சிகளும் நன்கு படமாக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் சுதீப், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இருவரும் இணைந்து மிகச் சிறந்த தரத்தில் சண்டைக் காட்சிகளைக் கொடுத்துள்ளனர். ஸ்டண்ட் மாஸ்டர்கள் கெவின், திலீப் சுப்பராயன் இருவருக்கும் ஒரு பாராட்டு.
ஆக்க்ஷன் காட்சிகள் எல்லாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று யோசித்த இயக்குநர், கதாபாத்திர வடிவமைப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். சிவாவின் பாத்திரம். அவருக்கு மனதளவில் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆனால் அதற்காக அவர் வரும் பல காட்சிகளில் அவர் கிட்டத்தட்ட மனநிலை பிறழ்ந்தவர் போலவே தோன்றும் அளவு நடிக்கிறார். அவர் என்ன வேலை செய்கிறார். அவருக்கு எப்படி அப்படியொரு யானை பலம் வருகிறது என்பதெல்லாம் வசனங்களில் கடத்தப்பட்டாலும் ஒட்டவில்லை. மாலதி மாலதி என்று அவர் உருகுவது கிட்டத்தட்ட குணா அபிராமியைத் தேடுவதை நினைவூட்டியது. ருக்மிணி வசந்த அவர் திருந்த வேண்டும் என்று நினைத்துக் காதலை விடுவதாகக் காண்பிப்பது நம்பும்படி இல்லை. அவர் சொன்னாலே அவர் கேட்டிருப்பார். சரி கதை நகர வேண்டுமே.
அவ்வளவு பெரிய தாக்குதல் நடக்கிறது. தேசிய அளவிலான ஒரு பிரச்சினையைச் செய்யும் கும்பலை உள்ளூர் ரவுடிகளை அணுகுவது போல் அணுகுகிறார் பிஜு மேனன். தனது கூட்டத்தில் ஓர் எதிராளி இருக்கிறார் என்று கூட்டத்திலேயே சொல்கிறார். அதிகப் பாதுகாப்பு உள்ள ஓர் இடத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும் அது டாப் சீக்ரட் என்றும் அடுத்த காட்சியிலேயே இன்னொருவரிடம் சொல்கிறார். காட்டுக்கு நடுவில் இருக்கும் அந்த இடத்திற்கு ஆட்டோவில் செல்கிறார் சிவகார்த்திகேயன். நம் காதுகளில் மலர் மணக்கிறது. இதெல்லாம் போதாதென்று சிண்டிகேட் என்ற ஓர் அமைப்பைக் காட்டுகிறார்கள். அதன் தலைவர்களை ஜஸ்ட் லைக் தட் போட்டுத் தள்ளுகிறார் நாயகன்.
அனிருத். பொதுவாக அனிருத் எஸ்கே கூட்டணி அசத்தும். இதில் ம்ஹூம். பாடல்கள் படத்தின் மிகப்பெரிய வேகத்தடைகள். சலம்பல பாட்டு கூட அடங்கப்பா என்று தான் இருக்கிறது. காதல் பாடல்கள் கொஞ்சம் கூடச் சுவாரஸ்யமில்லை. பின்னணி இசையில் அதைக் கொஞ்சம் சரிக்கட்டி இருக்கிறார். அனிருத் படங்களிலேயே மிகச் சாதாரணமான பாடல்கள் இருக்கும் படம் இது எனத் தைரியமாகச் சொல்லலாம். விக்ராந்த், நரேன் போன்றவர்களை வீணடித்திருக்கிறார்கள்.
மிகச் சுமாரான முதல் பகுதி, எங்கேடா லாஜிக் என்று முடிந்த பிறகு யோசிக்க வைக்கும் பரபர இரண்டாம் பகுதியென நகரும் மதராஸி படம் முதலில் குறிப்பிட்டது போலச் சண்டைக்காட்சிகளுக்காகப் பார்க்கலாம் என்று சொல்லும்படி முடிந்துவிட்டது தான் கண்டபலன். சிறுவர்கள், குழந்தைகள் ரசிக்கலாம். வேறு வழி இல்லாமல் இவர்களுக்காகப் போகும் பெற்றோர்கள் பார்த்து வைக்கலாம். அந்த வகையில் பிரமாதம் என்றும் சொல்ல முடியாமல் சுமார் என்றும் கைவிடமுடியாமல் நடுவில் பயணித்து விட்டது மதராஸி.