

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். ஆனால் , நீண்ட காலமாக ஏதேனும் சர்ச்சையில் அவர் அடிக்கடி சிக்கிக் கொள்கிறார். தமிழ் சினிமா எப்போதும் இல்லாத வகையில் இப்போது மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. அரசியல் களத்தில் நடிகர் விஜய் பெற்ற மாபெரும் வெற்றி, மற்ற நடிகர்களையும் தூண்டிவிட்டுள்ளது. தற்போது நடிகர்கள் தங்களது இருப்பை காட்டிக் கொள்வதற்காக தினசரி ஏதேனும் ஒரு கவன ஈர்ப்பு செயல்பாட்டில் ஈடுபடுகின்றனர்.
சிவகார்த்திகேயன் தனது திரைப்படங்களின் ஆடியோ லாஞ்ச் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் பரபரப்பை உண்டாக்கும் வகையில் செண்டிமெண்டாக பேசுவது வழக்கம். நடிகர் , பாடகர் என்பதையும் தாண்டி தற்போது சிவகார்த்திகேயன் வெற்றிகரமாக வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். சிறந்த கதையம்சம் கொண்ட திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து வருகிறார். அவர் பெரும்பாலும் மிகக் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து அதிக லாபம் ஈட்டி வருகிறார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த தாய்க்கிழவி திரைப்படத்தை, அதற்கு நல்ல உதாரணமாக கூறலாம். இந்த திரைப்படத்தை சிவா கூடுமான அளவிற்கு செலவு இல்லாத வகையில் தயாரித்துள்ளார். அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் , பெரிய தொழில் நுட்ப கலைஞர்கள் , அதிக செலவு கொண்ட பாடல் காட்சிகள் , சண்டைக் காட்சிகள் , பெரிய செட்கள் ஆகிய எதுவும் இந்த திரைப்படத்தில் இடம்பெறவில்லை. இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ராதிகா மட்டுமே குறிப்பிடும் வகையில் சம்பளம் வாங்கிய நடிகை. படத்தின் திரைக்கதையும், ஒவ்வொரு காட்சிகளும் , சுவாரசியமாக இருந்தது படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.
நேற்று ஊடக சந்திப்பில் பேசிய சிவகார்த்திகேயன் ,"ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது சந்தோஷமான விஷயம். பெரிய படம், சின்ன படம் என்று பட்ஜெட்டை வைத்து பிரித்துப் பார்க்கிறோம். ஆனால், பெரிய படமா? சிறிய படமா? என்று படத்தின் வெற்றி தான் முடிவு செய்கிறது. நிறைய சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெற்றி பெறும் போது, அது பெரிய படங்களுக்கும் பிளஸ் ஆக அமையும். புதிய தொழில்நுட்ப வல்லுனர்கள், திறமையான கலைஞர்கள் இயக்குனர்கள் சினிமாவிற்குள் வருவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
ஓடிடி தளங்களின் வளர்ச்சியினால் சின்ன பட்ஜெட் திரைப்படங்களை ஓடிடியில் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தது. தற்போது நல்ல திரைப்படமாக இருந்தால் பட்ஜெட்டை பார்க்காமல் தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. சிறை, டூரிஸ்ட் ஃபேமிலி, தாய்கிழவி போன்ற திரைப்படங்களின் வெற்றி தரமான கதைகளை தொடர்ந்து படமாக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இந்த திரைப்படங்களின் வெற்றினால் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்த முடிகிறது புதிய கதைகளையும் கொண்டு சேர்க்க முடிகிறது" என்று கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், சிறிய பட்ஜெட் திரைப்படங்களை நான் பாராட்டும் போது அதற்கு எனக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருகிறது. அவர்களைப் பாராட்டுவதில் எந்த ஒரு தயக்கமும் இருக்கக்கூடாது. உலகத்தில் சிறந்த விஷயம் மற்றவர்களை பாராட்டுவது தான். ரஜினி சாருக்கு போன் செய்து நான் பாராட்டியது கூட அப்படித்தான். அதற்கு , "நான் ரஜினியை நேரில் அழைத்து பாராட்டியது போல", ஒரு வீடியோவை வெளியிட்டு கிண்டல் செய்கிறார்கள். இது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. யாரென்று தெரியாதவர்களிடம் வரும் எதிர்மறையான கருத்துக்கள் நம்மை எப்படி பாதிக்க முடியும்? என்று சிவகார்த்திகேயன் பேசி இருந்தார்.