
கண்டிப்புடன், கம்பீரம், பாசம் ,சோகம் , நகைச்சுவை என பல கலவைகள் இணைந்த நடிகைகள் வெகு சிலரே. அந்த சிலரில் ஒருவராக பேசப்படுபவர் சௌகார் ஜானகி. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகி நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர் என்பது சிறப்பு. சமீபத்தில் இணையத்தில் 5 தலைமுறையினர் கொண்ட இவரது குடும்பப் படம் பகிரப்பட்டு வெகுவாக ரசிக்கப்பட்டது.
1931 ல் பிறந்து இந்த டிசம்பரில் தனது 93 ஆவது வயதைக் கொண்டாடிய பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகி பற்றிய சில நினைவலைகள் இங்கு...
புகழ்பெற்ற பெரும் நடிகர்களே இவ்வளவு காலத்துக்கு திரையுலகில் பணி செய்வது சிரமம் எனும் நிலையில் நடிகையாக செளகார் ஜானகியின் திரைப்பயணம் 75 ஆண்டுகள் கடந்தும் சளைக்காமல் தொடர்ந்த காரணம் என்ன தெரியுமா? 1950, 1960களில் பல படங்களில் கதாநாயகியாக நடித்த நிலையிலும் தன்னைத் தேடி வந்த இரண்டாவது நாயகி, தங்கை வேடங்கள் போன்ற வாய்ப்புகளையும் தவிர்க்காமல் ஏற்று நடித்ததுதான் எனலாம்.
தனது 15-வது வயதிலேயே சென்னை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றியவருக்கு சிறு வயதில் திருமணம். 18 வயதில் குடும்ப சூழல் காரணமாக வாய்ப்பு தேடி சென்னை வந்து பல சோதனைகளை சந்தித்தவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். 'மோதிரக்கையால் குட்டு' என்பதைப் போல் பிரபல தயாரிப்பாளர் நாகிரெட்டியின் தயாரிப்பில் சவுகார் எனும் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் கடவுளாக கொண்டாடும் என்.டி.ராமாராவின் நாயகியாக திரையுலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார்.
"சவுகார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் எனக்கு ரூ.2,500 சம்பளம் தந்தாங்க. குடும்ப கஷ்டத்தில் இருந்து மீளத்தான் சினிமாவுக்கு வந்தேன்..." என்று தனது குடும்ப சூழலை பேட்டிகளில் நினைவுகூர்ந்தவர்.
எந்த விஷயம் என்றாலும் மனதில் பட்டதை துணிவுடன் சொல்பவராகவும் செய்பவராகவும் இருந்த தனித்தன்மை சௌகார் ஜானகிக்கே உரியது. இதனால் பிரபலமானவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அதையும் சமன் செய்து அவர்களுடன் நல்லிணக்கமாக செல்லும் குணம் கொண்டவர். உதாரணமாக ஜெமினி நிறுவனம் தயாரித்த 'ஒளிவிளக்கு' படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் நடித்த போது, பெயர் முன்னுரிமை விஷயத்தில் செளகார்ஜானகி எஸ். எஸ் வாசனிடம் தனது உரிமைக்காக குரல் தந்தது; இவரது கால சம நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட படத்தின் தவறான சித்தரிப்பைக் கண்டித்தது என பல சம்பவங்களை குறிப்பிடலாம்.
மாடப்புறா என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க சவுக்கார் ஜானகிக்கு வாய்ப்பு கிடைத்து படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது சவுக்கார் ஜானகி கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்ததால், படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக வந்த தகவல்கள் அப்போது பரபரப்பான ஒன்றாகியது. தொடர்ந்து, 1965-ம் ஆண்டு வெளியான பணம் படைத்தவன் என்ற படத்தில் சவுக்கார் ஜானகி எம்.ஜி.ஆருடன் மீண்டும் இணைந்து நடித்ததும் குறிப்பிடத்தக்கது.
காமெடி, சோகம், கம்பீரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து திரையுலகில் தன் அடையாளத்தை அழுத்தமாக பதித்தவரான இவர் அந்தக்கால எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் துவங்கி அடுத்து வந்த ஜெய்சங்கர், சிவகுமார், ரஜினி காந்த், கமல் ஹாசன் என பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்த அனுபவம் கொண்டவர்.
வயது காரணமாக சிறிய இடைவெளிக்குப் பிறகு, சந்தானம் நடிப்பில் 2020 வெளியான 'பிஸ்கோத்' படம் மற்றும் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவான 'தம்பி' படத்திலும் நடித்து வயது மற்றும் மொழிகளைத் தாண்டி திரையுலகில் தொடர்ந்து பங்களித்து வருவது பிரமிக்கத்தக்கது.
பத்ம ஸ்ரீ விருதுடன் கலைமாமணி போன்ற சிறப்பு மிக்க விருதுகளை பெற்ற சௌகார் ஜானகி, இன்றைய இளைய தலைமுறையினரின் ரோல் மாடலாக, கலையுலகின் முழுநிலவாக ஜொலிக்கிறார்.