
இசை மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. சோகமாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும், நடைப்பயிற்சி செய்யும் போதும், இரவில் தூங்கப்போகும் முன்பும், காரில் நீண்ட தூர பயணத்தின் போதும் மனிதர்கள் விரும்பிக் கேட்பது பாடல்களை தான். தென்னிந்தியா சினிமாவில் திரைப்படங்களில் கதை எவ்வளவு முக்கியமோ அந்தளவு அந்த படத்தில் வரும் பாடல்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் தமிழ் திரையுலகில் இளையராஜா, இமான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத், ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் நாராயணன், சாய் அபயங்கர் இப்படி பல இசையமைப்பாளர்கள் முன்னனியில் உள்ளனர். இவர்களின் பாடல்களை கேட்பதற்கு உலகளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது பாடல்களைக் கேட்பதற்கென்றே தனி செயலிகள் வந்துவிட்டன. அதில் பிரத்யேகமான செயலிகளில் முதன்மையானது ஸ்பாட்டிஃபை. அந்த செயலி இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் அதிகம் விரும்பி கேட்கப்பட்ட தமிழ் பாடல்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ‘தக் லைஃப்’ படத்தில் இடம்பெற்ற ஜிங்குச்சா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று டாப் 10 பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை இந்த பாடல் 1.33 கோடி பேர் கேட்டுள்ளனர்.
அடுத்த இரு இடங்களை ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டு பாடல்கள் பிடித்துள்ளன. அந்த வகையில் ‘காட் பிளெஸ் யு’ பாடல் 9-வது இடத்திலும், ‘ஓஜி சம்பவம்’ பாடல் 8-வது இடத்திலும் உள்ளது.
அடுத்தபடியாக லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான டிராகன் திரைப்படத்தின் பாடல்கள் இந்த பட்டியலில் 3 இடங்களை பிடித்துள்ளன. அதில் ‘ஏண்டி விட்டு போன’ என்கிற பாடல் 1.66 கோடி ஸ்ட்ரீமிங் கவுண்ட் உடன் 7வது இடத்திலும், ‘ரைஸ் ஆஃப் டிராகன்’ பாடல் 1.90 கோடி முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்டு 6-வது இடத்தையும், ‘வழித்துணையே’ பாடல் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.
அனிருத் இசையமைப்பில் அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தில் வரும் ‘பத்திக்கிச்சு’ என்கிற பாடல் ஸ்பாட்டிஃபையில் மொத்தம் 2.65 கோடி முறை ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு 5-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் அனிருத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்தபடியாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்கள் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளன. ‘கன்னிமா’ பாடல் 3.24 கோடி ஸ்ட்ரீமிங் உடன் 3-ம் இடத்தையும், ‘கண்ணாடி பூவே’ பாடல் 3.36 கோடி ஸ்ட்ரீமிங் உடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.
6 மாதங்களில் 3.45 கோடி முறை ஸ்ட்ரீமிங் செய்து டாப் 10 பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது சாய் அபயங்கரின் சுயாதீன இசைப்பாடலான ‘சித்திர புத்திரி’ பாடல் தான். கடந்தாண்டும் இந்த பட்டியலில் சாய் அபயங்கரின் ‘கட்சி சேரா’ பாடல் தான் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அனிருத், ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களை பின்னுக்கு தள்ளி சாய் அபயங்கர் முதல் இடம் பிடித்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த 10 பாடல்களில் பல இசையமைப்பாளர்களின் பாடல்கள் வந்ததிருந்தாலும் அனிருத் மற்றும் சாய் அபயங்கர் இடையே தான் போட்டி அதிகமாக உள்ளது. ஏனெனில் இன்றைய இளைய தலைமுறையினரின் ஃபேவரைட் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். ஆனால் தற்போது அனிருத்தை ஓரம் கட்டிவிட்டு முன்னேறிக்கொண்டிருக்கிறார் புதிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர். பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் சாய் அபயங்கர் கைவசம் தற்போது அரை டஜன் தமிழ் படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.