
சினிமா கலைஞர்களுக்கு நடிப்பு தவிர பல்வேறு திறமைகள் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அதை பூட்டி வைத்து கொண்ட பிரபலங்கள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் இருந்து விலகி தன்னுள் புதைந்து கிடந்த திறமையை வெளிவுலகிற்கு காட்டியுள்ளனார் பிரபல நடிகை ஒருவர். அவர் வேறு யாரும் இல்ல. நடிகை சுகன்யா தான். ஆரம்பத்தில் பரத நாட்டிய கலைஞராக இருந்து, பின்னர் நடிகையாக மாறி, இப்போது இசையமைப்பாளர் மற்றும் பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார் நடிகை சுகன்யா.
90களில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், சரத்குமார் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்து புகழ் பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. ஆர்த்தி தேவி என்ற இவரது இயற்பெயர் பாரதிராஜாவால் சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரையுலகில் நுழைந்தார். இயக்குநர் பாரதிராஜாவால் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் முதன் முதலாக அறிமுகம் ஆனார்.
தற்போது 55 வயதாகும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, உறுதிமொழி, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, கேப்டன், டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம் ஆகியவை இவரது நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
இதுமட்டுமின்றி இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
குணச்சித்திர மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக கார்த்திக் நடித்த ‘தீ இவன்’ படத்தில் நடித்திருந்தார். 2019-ம் ஆண்டுக்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய அவர் நடன நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.
கடந்த 2002-ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறிய சுகன்யா ஒரே வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்.
இதற்கிடையில் மலையாள திரையுலகில் பாடலாசிரியராக புது அவதாரம் எடுத்த சுகன்யா ‘டி.என்.ஏ.' படத்திற்கு பாடல் எழுதியிருந்தார்.
எஸ்.வி.சேகர் இயக்கிய 'கிருஷ்ண கிருஷ்ணா' படத்தில் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார் சுகன்யா. அதுமட்டுமின்றி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி ‘ஜெய் ஸ்ரீ ராம்' என்ற பாடலை எழுதி இசையமைத்தும் பாடியிருந்த இவர் தற்போது முழு நேர பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார்.
நடிப்பில் இருந்து விலகிய இவர் தற்போது ஆன்மிக தலங்களில் நடைபெறும் ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பயபக்தியுடன் முழு ஈடுபாட்டுடனும் பங்கேற்று பாடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் ஒரு ஆன்மிக நிகழ்ச்சியில் தனது இனிய குரலால் மெய்மறந்து உணர்ச்சி பொங்க பாடிய காணொலி காட்சி இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் இடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது ரமணா ஆசிரமம். இங்கு நடந்த ரமண மகரிஷி 75-ம் ஆண்டு ஆராதனை நிகழ்ச்சியில் நடிகை சுகன்யா பங்கேற்று மெய்மறந்து ரமணர் பாடல் பாடி உள்ளார். சுகன்யா மனமுருகி பாடல் பாடிய வீடியோக்கள் வைரலான நிலையில் ரசிகர்கள் அவரது ஆன்மிக பக்தியையும், அவரது குரல் வளத்தையும் புகழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி புதிய அவதாரம் எடுத்துள்ள சுகன்யாவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.