
மே 1-ம்தேதி (இன்று) பல படங்கள் வெளியாக உள்ள நிலையில் தென்னிந்தியாவில் இரு பெரிய ஹீரோக்களான சூர்யாவின் 'ரெட்ரோ' மற்றும் நானியின் 'ஹிட் 3' படங்கள் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் இடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவிற்கு கடந்த சில காலமாக வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் தோல்வி அடைந்தது. இந்நிலையில் கடந்தாண்டு ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் சூர்யாவுக்கு வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் படம் வெளியாகி எதிர்மறை விமர்சனமே மிஞ்சியது. அதுமட்டுமின்றி இந்த படம் ரூ.180 கோடி வரையில் நஷ்டத்தை கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்த தோல்வி படங்களை கொடுத்து வருவதால் இன்று (மே 1-ம்தேதி) தொழிலாளர் தினம் அன்று வெளியாக உள்ள 'ரெட்ரோ' படத்தையே நடிகர் சூர்யா அதிகம் நம்பியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், சுஜித் சங்கர், சுவாஷிகா, சிங்கம் புலி, பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரொ’வை அவரது 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் இதுவரை வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதுடன், சூர்யாவிற்கு இந்த படமாவது வெற்றி படமாக அமையுமா என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இப்படத்தின் ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ.15 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 'ரெட்ரோ' படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில் இப்படம் இன்று உலகளவில் சுமார் 3,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 500 திரையரங்குகளில் வெளியாகிறது.
சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியாகும் அதேநாளில் தெலுங்கு நடிகர் நானியின் 'ஹிட் 3' படமும் வெளியாகிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களால் யதார்த்தமான நடிப்பிற்காக 'நேச்சுரல் ஸ்டார்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கி உள்ள இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அடில் பாலா, ராவ் ரமேஷ் , பிரம்மஜி மற்றும் மகந்தி ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு மிக்கி ஜே. மேயர் இசையமைத்துள்ளார், சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் 'காதல் வெல்லுமா' மற்றும் 'அப்கி பார் அர்ஜுன் சர்க்கார்' பாடல்கள் வெளியாகி 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானதையடுத்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'ரெட்ரோ' மற்றும் 'ஹிட் 3'இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் இடையே எந்த படத்தை முதலில் பார்ப்பது என்ற பரபரப்பு எழுந்துள்ளது. காங்குவா தோல்விக்கு பின் வெளியாகும் ரெட்ரோ படம் சூர்யாவிற்கு வெற்றிப்படமாக அமையுமா அல்லது நானியின் ஹிட் படத்தின் இரு பாகங்களும் சூப்பர் ஹிட்டானதை போன்று 3-வது பாகமும் சூப்பர் ஹிட்டாகி ‘ரெட்ரோ’வை வீழ்த்துமா அல்லது வீழுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.