

படத்தின் அனைத்து விமர்சனங்களையும் பார்த்து விட்டேன். படம் மிகவும் சுமார் என்று ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிட்டனர். அதன் பிறகு படம் பார்ப்பதில் ஒரு வசதி. பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமே இருக்காது. அப்படிப் பார்த்த படம் தான் பராசக்தி.
அறுபதுகளில் நடந்த மொழிப்போராட்டத்தைப் பற்றிய கதை. புறநானூறு என்ற மொழிப்போராட்டக் குழுவின் தலைவர் சிவகார்த்திகேயன். தமிழகத்தில் நடக்கும் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடுகிறார். ஒரு ரயிலைக் கொளுத்துகிறார். அப்போது இவருக்கும் ரவி மோகனுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதைத் தடுக்க வந்த அதிகாரி அவர். அதில் இவருக்கு ஒரு விரல் போகிறது. சிவா தரப்பில் அவர் உயிர் நண்பன் மரணமடைகிறார். அந்த மரணத்தால் மனமாற்றம் அடைந்த செழியன் (சிவா) அரக்கர் போராட்டத்தைக் கைவிட்டு அறப்போராட்டத்தில் இறங்குகிறார். பின்னர் ஒரு ரயிலில் கரி அள்ளிப் போடும் வேலைக்கும் செல்கிறார். ஒரு மரணத்தில் நிகழும் மனமாற்றம் மற்றொரு மரணத்தில் மீண்டும் வீறு கொண்டெழ வைக்கிறது. இதற்குப் பழி வாங்க அலையும் திருநாடன் (ரவி) மீண்டும் பொறுப்புக்கு வருகிறார். என்னவானது என்பது தான் படம்.
கற்பனைக்கதை. சாயல்கள் தற்செயலானவை என்று போட்டு, படித்துத் தான் தொடங்குகிறார்கள். அது எவ்வளவு உண்மையோ பொய்யோ தெரியவில்லை. ஆனால் இப்படியொரு போராட்டம் நடந்திருக்கிறது. அது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த போராட்டம் ஒரு தீர்வை கொண்டு வருகிறது. ஆனால் இன்றுவரை அந்தப் போராட்டம் வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மத்தியில் ஆளும் அரசின் ராஜதந்திரம் இது... மாநிலக் கட்சிகள் சூழ்ச்சி என்று என்ன வேண்டுமெனில் சொல்லலாம்.
ஒரு நேர்காணலில் ஹிந்தி கற்றுக் கொண்ட தமிழனையும் இந்தி தாய்மொழியாகக் கொண்டவனையும் ஒப்பிடுகிறார்கள். இது எப்படிச் சரியாகும் என்று கேட்கும் செழியனை வெளியே அனுப்பி விடுகிறார்கள். இந்தக் காட்சி படத்தின் மிக முக்கியக் காட்சிகளில் ஒன்று.
வங்கிகளில் பணம் அனுப்பும் படிவங்களில் இந்தி மட்டும், யு பி எஸ் சி தேர்வுகளில் இந்தியில் மட்டும் நடத்த நடக்கும் ஒரு முயற்சி அதனால் போகும் ஓர் உயிர், சுடமாட்டார்கள் என்று நம்பி நடக்கும் ஒரு மாணவர் போராட்டம். அப்பொழுது ரப்பர் குண்டுகளுக்குப் பதிலாக நிஜக் குண்டுகள் பயன்படுத்துவது, இந்தி வாழ்க முதல், அவர்கள் ஊரின் இடங்களின் பெயர்களைத் தமிழில் எழுதி ஸ்தம்பிக்க வைப்பது, போராட்டக்காரர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் காட்சி எனச் சுவாரசியமான பல காட்சிகள் உள்ளன.
பொள்ளாச்சி கலவரக் காட்சிகள் சற்று நீண்டு கொண்டு சென்றாலும் அதைப் படமாக்கிய விதம் இலேசாகப் பதைபதைப்பை உண்டாக்குகிறது. வசனங்கள் மிகப் பெரிய பலம் இந்தப்படத்துக்கு. சூரியன் உதித்தால் முரசொலிக்கும். Unity Uniformity இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது மேடம். தெலுங்கு பேசினாலும் நான் தமிழ்நாடு தான். தமிழுக்கு ஒன்று என்றால் இந்த கொல்ட்டி தான் முதலில் நிற்பாள் என்று ஸ்ரீலீலா பேசும் வசனம் இப்படிப் பல உதாரணங்கள் சொல்லலாம்.
நடிப்பென்று பார்த்தால் ரவி மோகன் சுலபமாக ஸ்கோர் செய்து விடுகிறார். ஒரு நல்ல வில்லனாக ஒரு படம் கிடைத்தால் வழக்கமான வில்லன்களைத் தண்ணீர் குடிக்க வைத்துவிடுவார். எந்தக் காட்சியிலும் அவர் ஒரு ஹீரோ என்ற எண்ணமே நமக்கு வரவேயில்லை.
சிகையலங்காரம், உடைகள் என்று மெனக்கெட்டு இருந்தாலும் பின்னணிகளில் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்திருக்கலாம். காரைக்குடி தெருக்களிலேயே வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள். மதுரை மேலமாசி வீதி என்று காட்டுவதெல்லாம் சுத்த போங்கு. மற்ற துறைகளில் இருக்கும் ஒரு நேர்த்தியை இந்த இடத்திலும் கொஞ்சம் செலுத்தி இருக்கலாம் என்றே தோன்றியது. சிவகார்த்திகேயனும் கண்டிப்பாக மெனக்கெட்டு இருக்கிறார். உடல் மொழியில் தவறில்லை. ஆனால் குரலில் இன்னும் கொஞ்சம் வீரியமும் அழுத்தமும் தேவை. அதில் அதர்வா பரவாயில்லை.
சிவாவின் தம்பியாக அதர்வா. சிறிய பாத்திரமாக இருந்தாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். ஸ்ரீலீலாவும் அதே போல. என்ன இரண்டு பாடல்களில் ஒன்றைக் குறைத்து இருக்கலாம். ஆனால் இரண்டு பாடல்களுமே மிக இனிமை. பிற மொழி நடிகர்களின் கேமியோக்களும் கொஞ்சம் பொருத்தமாகவே இருந்தது.
ஜி வி பிரகாஷின் இசை நிச்சயமாகப் பெரிய பலம். பின்னணி இசையிலும் படத்தைத் தாங்குகிறார். நூறாவது படமாயிற்றே. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவில் அப்படியொரு துல்லியம். ரயில் காட்சிகள், கலவரக் காட்சிகளில் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் நன்கு கைகோத்துக் கொண்டிருக்கிறது.
படத்தின் பிரச்னை என்னவென்றால் செழியன் பாத்திரத்தின் திடீர் மனமாற்றங்கள். இது போன்ற போராட்டங்களில் இழப்புகள் இல்லாமல் இருக்குமா? சுதந்தரப் போராட்டத்துக்குப் பின்பு உடனே நடக்கும் போராட்டம் இது. ஒருவர் செத்தால் உடனே கைவிடுவது. அடுத்த சாவில் திரும்ப வருவது என்ற போக்கு சற்று பலவீனமாகத் தெரிகிறது. ஸ்ரீலீலாவுடனான காதலிலும் பெரிதும் ஈர்ப்பில்லை. வைக்க வேண்டுமே என்று வைக்கப்பட்டது போலத் தான் தெரிகிறது.
படத்தின் கடைசி அரை மணி நேரப்பரபரப்பு ஊன்றிப் படம் பார்க்க வைக்கிறது. இவர்கள் ஒரு விதமாக ஜெயித்து விடுவார்கள் என்று தெரியும். எப்படி என்ற கடைசி நிமிடத் திருப்பத்தில் இருக்கிறது சாமர்த்தியம். கதறி அழ வைக்கக் கூடிய சாத்தியங்கள் பல இருந்தாலும் அதற்குள் செல்லவில்லை சுதா கொங்கரா. ஆனாலும் சில இடங்களில் நம்மை மீறிக் கண்கலங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.
இது சொல்லும் கதை எவ்வளவு உண்மை என்பதில் இல்லை விஷயம். இப்படிப் பல போராட்டங்களும் நம் மாநிலத்தில் நடந்திருக்கிறது. சொந்த மாநிலத்தில் அவரவர் மொழியையே காப்பாற்ற என்ன பாடு பட்டிருக்கிறார்கள். இன்றும் படுகிறார்கள். அந்தப் போராட்டக் காரர்கள் சொல்வது போல நாங்கள் இந்திக்காரர்களுக்கோ, இந்தி மொழிக்கோ எதிரி இல்லை. இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். வேலை செய்யும் இடத்துக்குத் தேவையான மொழியைக் கற்றுக் கொள்வதில் எங்களுக்குத் தடையில்லை. ஆனால் அதில் கூட பிரச்னை வரும் பொழுது புறநானூறு போன்ற பல புரட்சிப் படைகள் உருவாகும் என்பதில் ஐயமில்லை. காதல் காட்சிகளைக் குறைத்து விட்டு புறநானூறு படை உருவான விதம் அதன் வளர்ச்சி குறித்துக் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது.
படத்தின் இறுதியில் போராட்டம் நடந்த செய்திகளையும், போராடியவர்களையும் ஆவணப் படமாகக் காட்டுகிறார்கள். அரங்கில் இருந்த நூறு பேரில் ஒருவர் கூட வெளியே செல்லவில்லை. முழுதும் பார்த்து கடைசியில் விசிலும் கைதட்டலுமாகத் தான் வெளியே வந்தார்கள். அப்படியிருக்கச் சில குறைகள் இருந்தாலும் தமிழில் கண்டிப்பாகச் சொல்லவேண்டிய ஒரு கதை; பார்க்க வேண்டிய ஒரு படம் தான் பராசக்தி.
அரசு சார்பின்றிக் கட்சிப் பார்வையின்றி மொழி என்ற ஒரே அடிப்படையில் இந்தப்படத்தைப் பார்க்கும் பொழுது அதில் உள்ள வீரியம் புலப்படலாம். புலப்படும்.