
பாண்டிராஜ் படங்களில் உறவுகளை அதன் பெருமைகளைச் சொல்லும் காட்சிகளும் சம்பவங்களும் அதிகமாக இருக்கும். அதனால் மட்டுமே ஓடிய படங்கள் தான் கடைக்குட்டிச் சிங்கமும், நம்ம வீட்டு பிள்ளையும். எதற்கும் துணிந்தவனில் ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றிப் பேசி அது சரியாகப் போகவில்லை. பார்த்தார் கணவன் மனைவி உறவைப் பற்றிப் படம் எடுக்க வில்லையே. எடுத்து விடுவோம் என்று எடுத்துள்ள படம் தான் தலைவன் தலைவி.
விஜய் சேதுபதி, நித்யா மேனன், நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படம் தம்பதியர் ஒற்றுமையாய் வாழ என்ன செய்ய வேண்டும். ஒருவரை ஒருவர் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்ற காட்சிகளை மட்டும் வைத்துச் சொல்லியுள்ளது. மதுரையில் பரோட்டா கடை நடத்தி வரும் ஆகாச வீரன் (விஜய் சேதுபதி) இவரது மனைவி பேரரசி (நித்யா மேனன்). முதுகலைப் பட்டம் பெற்ற நித்யாவிடம் விஜய் சேதுபதியும் அப்படித் தான் என்று சொல்லி நிச்சயம் செய்கின்றனர். இது உண்மையல்ல என்று பின்னர் விளக்கி விதவிதமாகப் பரோட்டா செய்து கொடுத்தே நித்யாவை தன்னை விரும்பச் செய்து விடுகிறார்.
அவருக்குச் சமைக்கப் பிடிக்கும் இவருக்குச் சாப்பிடப் பிடிக்கும். போதாதா அன்பு வளர. எவ்வளவு காதலோ அதற்கு இரண்டு மடங்கு கோபமும் சண்டையும் வருகிறது நித்யாவிற்கு. மாமியாராகத் தீபா ஷங்கர் தனது மகளுக்காகக் கொஞ்சம் ஏற்றி விட மாதமிருமுறை வீட்டை விட்டு அம்மா வீட்டிற்குச் செல்வதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார் நித்யா. இவரும் சேர்ந்து அங்கே சென்று திரும்பக் கூட்டி வருகிறார். இந்தச் சண்டை ஒரு கட்டத்தில் விவாகரத்து வரை சென்று விடுகிறது. இவர்களுக்கிடையே என்ன தான் ஆனது படத்தின் முடிவு என்ன என்பது தான் கதை.
கொத்துக் கொத்தாக நடிகர்கள். விதவிதமான பெயர்கள். பலவிதமான உறவுகள். படம் முழுதும் ஒரே இடத்தில் நடக்க பிளாஷ் பாக்குக்காகச் சென்று சென்று வருகிறது கதை. தனது குழந்தைக்குத் தனக்குத் தெரியாமல் முடியிறக்கச் சென்றதால் தகராறு செய்ய வருகிறார் விஜய் சேதுபதி. அங்கு ஆரம்பிக்கும் படம் அங்கேயே முடிகிறது.
தம்பதியர்களுக்கிடையே சண்டை வருவது சகஜம். ஆனால் சண்டை, கத்தல் , கத்தல் சண்டையெனத் தொடர்ந்து கொண்டே செல்வது கடுப்பை அதிகரிக்கிறது. இவர்கள் உண்மையில் விரும்பித் தான் திருமணம் செய்து கொண்டார்களா? வாழ வந்த பெண்ணை நக்கல் செய்து கொண்டே இருப்பது பின்னர் அது விளையாட்டுக்குச் செய்தேன் என்று சொல்வதெல்லாம் எதில் சேர்த்தி என்றே தெரியவில்லை. நித்யாவின் அண்ணனான ஆர் கே சுரேஷிற்கும் விஜய் சேதுபதிக்கு என்ன பிரச்சனை என்பதைக் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான் ரேஞ்சுக்கு இழுக்கிறார்கள். ஆனால் விடை சொல்லவில்லை.
இவர்கள் சண்டையை எப்படி யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லையோ அதே போல் தான் இந்தப் படத்தையும் இயக்குநர் பாண்டிராஜ் எடுத்துக் கொள்ளவில்லை போல. அவ்வப்போது சிரிக்க வைப்பேன். ஏதாவது ஒரு காட்சியில் குடும்பத்தின் மகத்துவம் குறித்து நான்கு வசனங்கள். இது போதும் என்று நினைத்தது போல் தான் இருக்கிறது.
விஜய் சேதுபதி வெகுநாள்களுக்குப் பிறகு சற்று இலகுவாக நடித்து இருக்கிறார். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் மீட்டரில் இவர் நடிப்பது ஓகே. ஆனால் வேகமாக வசனம் பேசுவது அவர் கத்தும் கத்தலில் புரியவே இல்லை பல இடங்களில். காதல் காட்சிகளில் யதார்த்தமாக இருந்தாலும் இவர்கள் ஜோடியின் அழகு அவர்கள் சண்டை போடும்போது காணாமல் போகிறது.
சரவணன், காளி வெங்கட், செம்பன் வினோத், மைனா நந்தினி, எனப் பல நடிகர்கள் வந்து போகிறார்கள். பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்புகள் யாருக்கும் இல்லை. யோகி பாபு நகைச்சுவை இதில் சற்று பரவாயில்லை. பல இடங்களில் சிரிக்க வைக்காவிட்டாலும் புன்னகைக்க வைக்கிறார்.
இடைவேளை வரை கூட இந்தத் தம்பதியரின் சண்டையைக் கடந்து விடலாம். இடைவேளைக்குப் பிறகு படம் ஒரே இடத்தில் நின்று விட்டது போல உணர்வு. காரணம் காட்சிகளிலும் திரைக்கதைகளிலும் எந்தவிதமான புதுமையோ சுவாரசியமோ இல்லை. இவர்கள் சேர வேண்டும் என்ற எண்ணத்தைவிடப் பிரிந்து சென்றால் போதும் என்ற எண்ணமே அதிகம் வருகிறது.
ஒரு படம் ஓடுவதற்குக் கதை வசனம் எல்லாம் அவ்வளவு முக்கியமில்லை. போனோமா, சிரித்தோமா, யோசிக்காமல் வெளியே வந்தோமா என்று நினைக்கும் ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும். கொஞ்சமாவது அர்த்தமுள்ள ஒரு படம் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கனவே பிரபலமான பொட்டல முட்டாய் பாடலைவிடக் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றும் இல்லை.
குடும்பப் படங்கள் ஒவ்வொன்றாக வெற்றி பெரும் இந்தச் சூழலில் இதுவும் வெற்றியடையலாம்? நாளை அல்லது மறுநாள் சக்ஸஸ் பார்ட்டி வைத்துப் பிரியாணியும், பரோட்டாவும் பரிமாறப்படலாம். யார் கண்டது!