
தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது நடிப்பை நிறுத்தி விட்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் அவரது திரையுலக பயணத்தில் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜன நாயகன் (Jana Nayagan).
விஜய் திரைப்பயணத்தில் இது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் இடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திலிருந்து ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’ ஆகிய 2 பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து, விஜய் தனது குரலில் பாடிய பாடலான ‘செல்ல மகளே’ என்ற 3-வது பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு, படத்தின் முழு பாடல் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.
விஜய் சொந்த குரலில் பாடிய கடைசி பாடல் என்பதால் இந்த பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட்டான நிலையில் இந்த பாடலும் பெரியளவில் ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
நடிகர் விஜய் தனது இசை வாழ்க்கையில் இதுவரை 40 பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார். 1994-ம் ஆண்டு வெளியான ரசிகன் என்ற படத்தில் ‘பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி’ பாடலைப் பாடி முதல் முறையாக பாடகராக அறிமுகமானார். விஜய் தனது படத்தில் மட்டுமல்லாமல் சூர்யாவிற்காக பெரியண்ணா படத்தில் 3 பாடல்களையும் பாடியுள்ளார்.
1994 முதல் தனது படங்களில் பாட ஆரம்பித்தவர் சச்சின் படத்திற்கு பிறகு (2005 முதல் 2012 வரை 7 ஆண்டுகள்) நடிப்பதில் கவனம் செலுத்திய விஜய் பாடல்களை பாடவில்லை. 7 ஆண்டுகளுக்கு பிறகு 2012-ல் வெளிவந்த துப்பாக்கி படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘கூகிள் கூகிள்’ பாடல் மூலம் ரீஎன்டரி கொடுத்தார்.
விஜய் பாடிய பாடல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் சிறந்த தரவரிசையில் இடம்பிடித்த 10 பாடல்களின் பட்டியல் இங்கே:
2021-ல் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி’ பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வெற்றி பெற்றது. அனிருத் ரவிச்சந்தரின் கவர்ச்சிகரமான பாடல் வரிகள் மற்றும் இசைக்காக இந்த பாடல் மிகவும் பிரபலமானது.
2023-ல் வெளிவந்த வாரிசு படத்தில் தமன்.எஸ் இசையமைப்பில் விஜய் பாடிய ‘ரஞ்சிதமே’ பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டதுடன் துள்ளல் போட வைத்தது.
லியோ படத்தில் அனிருத் ரவிச்சந்தரின் இசையமைப்பில் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் பிரபலமான பார்ட்டி பாடலாக அனைவரையும் கவர்ந்தது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் பாடிய ‘விசில் போடு’ துள்ளல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பாடல் கேட்கும் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும்.
2019-ல் வெளியான பிகில் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடிய ‘வெரித்தனம்’ பாடல் ரசிகர்களில் மனதை கொள்ளை கொண்ட பாடல் என்றே சொல்ல வேண்டும். இது விஜய்யின் மாஸ் பாடல் என்றே சொல்லலாம்.
2022-ல் வெளியான பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற வேடிக்கையான பாடல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ பார்வையாளர்களை பரவலாக கவர்ந்த பாடல் என்றே சொல்லலாம். விஜய் பாடிய இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
2012-ல் வெளியான துப்பாக்கி படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் விஜய் பாடிய ‘கூகிள் கூகிள்’ பப் பாடல், மிகவும் பிரபலமானது. விஜய் தொலைக்காட்சியில் சிறந்த பாடலுக்கான விருதையும் வென்றது.
கத்தி படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் விஜய் பாடிய ‘செல்ஃபி புள்ள’ பாடலை இளைஞர்கள் இன்று மட்டுமல்ல எப்போது கேட்டாலும் துள்ளல் போட வைக்கும்.
2014-ல் ஜில்லா படத்தில் டி.இமான் இசையமைப்பில் ஸ்ரேயா கோஷலுடன் விஜய் பாடிய ‘கண்டாங்கி கண்டங்கி’ டூயட் பாடலில் மெல்லிசை கேட்க இரவில் கேட்க மிகவும் இனிமையானது.
2005-ல் சச்சின் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் விஜய் பாடிய ‘வாடி வாடி’ உள்ளூர் கானா பாடல் அந்த காலகட்டத்தில் மட்டுமல்ல இன்றும் மிகவும் பிரபலமானது.