தம்பி ராமையா இயக்கப் போகும் படம் - முதல் முதலாக நம் கல்கிக்கு பகிர்ந்து கொண்ட விஷயம்!
பிரபல நடிகரும், இயக்குனருமான தம்பி ராமையா 'ராஜாக்கிளி' என்ற படத்திற்கு கதை வசனம் எழுதி உள்ளார். இப்படத்தை இவரது மகன் உமாபதி ராமையா இயக்குகிறார். இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மீடியாக்களில் பரவலாக பேசப்பட்ட தொழிலதிபர் வாழக்கையில் நடந்த விஷயங்கள் இடம் பெற்றிருப்பதை போல் தெரிகிறது. இந்த சந்தேகங்கள் உட்பட ராஜாக்கிளி படம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறார்கள் தம்பி ராமையாவும், உமாபதி ராமையாவும்.
இவர்கள் இருவரும் இணைந்து நமது கல்கி ஆன் லைன் இதழுக்கு அளித்த நேர்காணல்.....
"வாங்க, வாங்க முதல்ல நாம இரண்டு பேரும் பேசலாம். உமாபதி போஸ்ட் ப்ரோடாக்ஷன்ல பிசியா இருக்காரு" என்று பேச ஆரம்பிக்கிறார் தம்பி ராமையா.
இது இன்ஸ்பிரேஷனா? அல்லது தழுவலா?
இந்த இரண்டுல எது பிடிக்குதோ அதையே வச்சுக்குங்க. சின்ன வயசுல இருந்து என் கிட்ட பேசுற நிறைய பேர் தங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மனம் விட்டு பேசுவாங்க. இப்படி பேசுற நிறைய பேருக்கு நான் அட்வைஸ் பண்ணி அவங்க வாழ்க்கையை மாற்றி இருக்கேன். என் ஜாதக விசேஷம் அப்படி. தமிழ்நாட்டில் தென்கோடியில் பிறந்து தனது உழைப்பால் உலகம் முழுவதும் பல்வேறு கிளைகள் பரப்பி பெரிய தொழில் சாம்ராஜ்யம் நடத்தி சில சந்தர்ப்ப சூழ்நிலையால் மீடியாக்களில் தவறாக பப்ளிசிட்டி செய்யப்பட்ட ஒரு பிரபல (மறைந்த) தொழிலதிபர் ஒருவர் என் நெருங்கிய நண்பர். இந்த நண்பர் பல்வேறு தனிப்பட்ட விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். இவர் பேசிய சம்பவங்களை வைத்து நான் எழுதிய கதைதான் ராஜாக்கிளி
அந்த தொழிலதிபரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் எது?
நல்ல இதயத்திற்கு சொந்தகாரர் அந்த மனிதர். அந்த நல்ல மனிதர் இயங்கியவர் அல்ல. பலரால் இயக்கப்பட்டவர். இதுவும் இவரின் வாழ்க்கை என்னை ஈர்த்ததற்கு ஒரு காரணம். ராஜாக்கிளி போல் சுதந்திரமாக பறந்து கொண்டிருந்தவரை இந்த சமுதாயம் எப்படி இறக்கைகளை பிய்த்து எறிந்து நடை பிணமாக மாற்றி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன்.
நீங்களும் அடிப்படையில் ஒரு டைரக்டர். இந்த கதையில் என்ன ஸ்பெஷல்?
இப்ப படம் எடுப்பவர்கள் 25 - 35 வயதுக்குள் இருக்கும் நாயகனை மைய்யமாக வைத்து கதை எழுதுகிறார்கள். இங்கே 50 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. 50 வயதிற்கு மேற்பட்ட மனிதர்களின் பிரச்சனைகளை சொல்லும் பவர் பாண்டி போன்ற சில படங்கள் வந்திருக்கின்றன. 50 வயது மனிதனிடம் அனுபவம் இருக்கும். இந்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
பொண்ணுங்களோட சேர்ந்து குத்தாட்டம் போடுறீங்களே...தேவையா?
பாக்கியராஜ் சார் எதையுமே இலை மறைகாயா சொல்வாரு. இதே பார்முலாவை இங்கேயும் அப்ளை பண்ணியிருக்கேன். இந்த குத்தாட்டம் என் ஆசை இல்லை. கதை தரும் டிமாண்ட்.
எப்படி இருக்காரு உங்க சம்மந்தி அர்ஜுன்..?
ரொம்ப நல்லா இருக்காரு. நான் என்ன மாதிரி கஷ்டப் பட்டு மேல வந்தேனோ, அதே போல் அர்ஜுனும் பல ஏற்ற இறங்கங்களை பார்த்து வந்தவர். இதனால எங்க இரண்டு பேருக்கும் நடுவுல ஒரே மாதிரி எண்ண ஓட்டங்கள் இருக்கு. என் அப்பா அம்மா இரண்டு பேரும் இப்ப உயிரோட இல்லை. அர்ஜுன் சாரைதான் என் அம்மா - அப்பா ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறேன். அர்ஜுன் சாரை இப்ப வரைக்கும் சார்ன்ற மரியாதையோட தான் கூப்பிடுறேன்.
நீங்கள் அடிப்படையில் ஒரு டைரக்டர். மீண்டும் எப்போது படம் இயக்க போகிறீர்கள்?
'தங்க நட்சத்திரமும் தமிழ் குற்றாலமும்' என்கிற படம் இயக்க போகிறேன். தம்பி சமுத்திரக்கனிதான் ஹீரோ. இந்த படம் பற்றி இப்போதுதான் முதல் முறையாக நம் கல்கியில் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த நாற்பதாண்டுகள் நடக்கும் அரசியலை பின்புலமாகக் கொண்டு ஒரு அரசியல் நகைச்சுவை (political satire) படத்தை தரப்போகிறேன். (தம்பி ராமையா பேசி கொண்டிருக்கும் போதே, 'சாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சு' என்று சொல்லியவாறு உரையாடலில் கலந்து கொள்கிறார் உமாபதி)
அப்பா கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை நீங்கள் இயக்க என்ன காரணம்?
படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களை ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கதையை என்னை இயக்கும் படி கேட்டுக்கொண்டார். அப்பா சொன்னது போல இங்கே 50 வயது தொட்டவர்களின் வாழ்க்கை பேசப் படாமல் இருக்கிறது. மலையாளத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் நடுத்தர வயது ஆண்களின் கதைகளை எடுத்து வருகிறார்கள். இதைப் போன்று நானும் முயற்சி செய்கிறேன்
மாமனார் அர்ஜுனை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள்?
இந்த டைரக்ஷன் வாய்ப்பு என்பதே நான் எதிர் பார்க்காத ஒன்று. மாமா அர்ஜுனை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைக்குமா என்பதற்கான பதிலை காலம் தான் சொல்ல வேண்டும்.
அப்பாவை டான்ஸ் ஆட வைக்கும் போது 'ஆஹா' ன்னு சொன்னீங்களா? போதும்டா சாமின்னு சொன்னீங்களா?
இந்த இரண்டுமே இல்லை. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையேன்னு சொல்ற மாதிரி நானும், டான்ஸ் மாஸ்டரும் சொல்லாத ஸ்டெப்ஸ்களை போட்டு அசத்தினார் அப்பா. அதுலயும் அந்த மூணு பொண்ணுகளோட ஆடும் போது...
பேசிக்கொண்டிருக்கும் போதே கொஞ்சம் வெட்கத்தோடு இடை மறிக்கிறார் தம்பி ராமையா - 'உமாபதி போதும், கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லாத. எல்லாத்தையும் சொல்லிட்டா படம் பார்க்கற ஆர்வம் குறைஞ்சிடும். பட ப்ரோமோஷனுக்கு வெளியே கிளம்பனும்' என்று சொல்லியவரே இருவரும் நன்றிசொல்லி விடை பெறுகிறார்கள்.