
கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் பெண்கள் அவர்களுடைய நலனில் மட்டும் அக்கறை கொள்ளாமல் வயிற்றில் இருக்கும் சிசுவின் ஆரோக்கியத்திலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் தான் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலில் நீர்ச்சத்து இருப்பது மிகவும் முக்கியமானது. தாய் மற்றும் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவது வரை, உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பது முக்கியமாகும்.
கர்ப்ப காலத்தில் சரியான அளவு நீர்ச்சத்து செரிமான அமைப்பை பராமரிக்க உதவுவதுடன், மலச்சிக்கல், மூல நோய் போன்ற பொதுவான கர்ப்ப கால சிக்கல்கள் வராமல் தடுக்கிறது. நீரிழப்பு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், முன்கூட்டிய பிரசவம் போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்ப காலத்தில் பெண்கள் வழக்கத்தை விட வெப்பமாக உணரலாம். உடலை நீரோட்டமாக வைத்து கொள்வது உடல் வெப்பமாவதை தடுத்து சீராக்க வைத்திருக்க உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 8-12 கப் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பொதுவான பரிந்துரை. தாகம் உங்கள் உடலுக்கு அதிக திரவம் தேவை என்பதற்கான ஒரு நல்ல அறிகுறியாகும். கர்ப்பிணிகள் தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீரைக் குடித்தால் சிறுநீர் மஞ்சளாக போவது, உதடு வறட்சி, தலைச்சுற்றல் போன்ற நீரிழப்பால் வரும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
எப்போதும் கையில் தண்ணீர் பாட்டிலை வைத்திருங்கள். ஏனெனில் இது நீங்கள் வேலையில் இருந்தாலும் அல்லது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும், நாள் முழுவதும் தண்ணீர் பருகுவதை எளிதாக்குகிறது.
வெறும் தண்ணீர் பருக சலிப்பு ஏற்பட்டால் பழங்கள், மூலிகைகள், வெள்ளிக்காய், எலுமிச்சை ஒரு துண்டு இப்படி ஏதாவது ஒன்றை பருகலாம். நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் (தர்பூசணி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி) மற்றும் காய்கறிகளை (வெள்ளரி, கீரை, செலரி) உங்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை மூலம் இழக்கப்படும் நீரிழப்புக்கு ஈடாக தண்ணீர் பருகுவது மிகவும் அவசியம் என்பதை மறக்காதீர்கள்.
தண்ணீருக்கு பதிலாக மூலிகை தேநீர் அருந்தலாம். இருப்பினும் சிலருக்கு மூலிகை தேநீர் ஓவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம். அதேபோன்று சூப், குறைந்த கொழுப்புள்ள பால், பழச்சாறுகளையும் எடுத்துக்கொள்ளலாம். பழச்சாற்றில் சர்க்கரை சேர்க்காமல் இருப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் மஞ்சள் நிற சிறுநீர், லேசான தலைவலி, மயக்கம் அல்லது மிகவும் சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு நீரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று உணர்ந்து கொள்ளலாம். சிறுநீரின் அளவு குறைவதும் நீரிழப்புக்கான உறுதியான அறிகுறியாகும். இருப்பினும், வேகமான இதயத் துடிப்பு, குழப்பமான மனநிலை, மயக்கம் அல்லது தொடர்ச்சியான வாந்தி போன்ற கடுமையான நீரிழப்பு அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது நல்லது.
கர்ப்ப காலத்தில் உடலில் நீர்ச்சத்தை சரியாக பராமரித்தால் தான் உங்கள் வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்பதை மறந்து வீடாதீர்கள்.