
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன், சாய் பல்லவி ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பு லியோ படத்தில் கிட்டத்தட்ட உறுதியானது. இருப்பினும் மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். கடைசியில் விஜய்யுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்தார். லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை சாய் பல்லவி ஏன் மறுத்தார் என இப்போது தெரிந்து கொள்வோம்.
விஜய் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு லியோ திரைப்படம் வெளியானது. த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் உள்பட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இத்திரைப்படம் வசூலில் பட்டையைக் கிளப்பியது. பாக்ஸ் ஆபிஸில் ரூ.623 கோடியை வசூலித்து சாதனையும் படைத்தது. லியோ படத்தில் மாறுபட்ட கோணத்தில் விஜய் நடித்திருந்தார்.
ஆக்ஷன் திரைப்படமாக உருவான லியோ படத்தில் கதாநாயகியாக த்ரிஷா தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் இப்படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது சாய் பல்லவி தான். படத்தின் கதை உறுதியான பிறகு நடிகர்கள் தேர்வு நடைபெற்றது. அப்போது கதாநாயகியாக சாய் பல்லவியை நடிக்க வைக்கலாம் என படக்குழு முடிவு செய்தது. பிறகு அவரை அணுகி கதையைக் கூறினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
கதையை முழுமையாக கேட்ட சாய் பல்லவி, இந்தக் கதையில் நாயகியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை எனக் கூறி நிராகரித்து விட்டாராம். தயாரிப்பாளரும், இயக்குநரும் எவ்வளவோ கேட்டும் இந்தப் படத்தில் நடிக்க மறுத்து விட்டார் சாய் பல்லவி. அதன்பிறகே த்ரிஷாவை தேர்வு செய்தது படக்குழு. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட த்ரிஷா, தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
இப்படத்தில் விஜய்க்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், த்ரிஷா தன்னுடைய நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் விஜய்யுடன் எப்போது ஜோடி சேர்வார் என பல ஆண்டுகளாகவே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அந்த வாய்ப்பு லியோ படத்தில் கூட கைகூடாமல் போய் விட்டது. ஒருவேளை இப்படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தால், அது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகத் தான் இருந்திருக்கும்.
இருப்பினும் திருப்பாச்சி மற்றும் கில்லி படங்களுக்குப் பிறகு விஜய் - த்ரிஷா ஜோடியை திரையில் பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது எச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துடன் சினிமாவில் இருந்து விஜய் விலக இருப்பதால் இனி சாய் பல்லவி விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பே இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாய் பல்லவி பான் இந்தியப் படமாக உருவாகி வரும் இராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் மீதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.