

செயற்கைத் நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பம், இன்று அனைத்து துறைகளையும் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு துறைகளில் வேலை இழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருந்தாலும், ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டால் வேலை இழப்பிலிருந்து தப்பிக்கலாம் எனவும் நிபுணர்கள் அறிவுரைக்கின்றனர்.
இந்நிலையில் வருங்காலமே AI கையில் தான் இருக்கிறது என பிரபல இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் 3 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அனிருத், இன்று முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து இருக்கிறார்.
தனது முதல் படத்திலேயே உலக அளவிலான கவனத்தை ஈர்த்தவர் அனிருத். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றியிருக்கிறார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் போனிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மிக எளிதாக பயன்படுத்த முடியும் என்பதால், புகைப்படங்களை உருவாக்குதல் முதல் பல்வேறு தகவல்களைப் பெறுவது வரை அனைத்தையும் இளைஞர்கள் பலரும் பயன்படுத்துகின்றனர்.
மொபைல் போனில் மட்டுமல்லாது அதிநவீன மின்னணு சாதனங்களிலும் ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இது இசைத் துறையையும் விட்டு வைக்கவில்லை. இசைத் துறையில் நாம் ஒரு பாடலை பதிவேற்றினால், அது 100 வகையான குரல்களில் திருப்பி அளிக்கிறது என அனிருத் தெரிவித்துள்ளார்.
ஏஐ குறித்து அனிருத் மேலும் கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் AI மிகவும் அற்புதமான தொழில்நுட்பமாக வளர்ந்து வருகிறது. இதனை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். நான் ஒரு குரலில் பாடினாலே, அதனை ஏஐ தொழில்நுட்பம் 100 பெண்களின் குரலில், வெவ்வேறு Pitch-களில் மாற்றி உருவாக்கித் தருகிறது.
இது இசைத் துறையின் எதிர்காலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும். தற்போது ஏஐ தொழில்நுட்பம் ஆரம்ப கட்டத்தில் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் அனைவரும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போகிறார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்” என அனிருத் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தெழில்நுட்ப உதவியால் நம்முடைய நேரம் அதிக அளவில் மிச்சமாவது மட்டுமின்றி, பல வடிவங்களில் நமக்கு பலனைத் தருகிறது. இதன்மூலம் மனிதர்களின் சிந்தனைத் திறன் குறைய வாய்ப்புள்ளது என்றாலும், ஏஐ துறையில் தங்களை மேம்படுத்திக் கொண்டால் வருங்காலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.
குறிப்பாக ஐடி துறையில் ஏஐ பயன்பாடு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இளைஞர்கள் ஏஐ கல்வியில் சிறந்து விளங்க வேண்டியது கட்டாயம் என்ற நிலை உருவாகி இருக்கிறது. மேலும் ஏஐ தொழில்நுட்பத்தை நம்மால் தவிர்த்து விட முடியாது என்பதே நிதர்சனம்.