
யுனிவர்சல் பிக்சர்ஸ், புகழ் பெற்ற ஹாலிவுட் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படம், கிரேக்க காவியமான 'தி ஒடிஸி'. புதிய 'ஐமாக்ஸ்' தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கவிருக்கும் இந்தக் காவியம் ஜூலை 16, 2026இல் திரையரங்குகளில் திரையிடப்படும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் மாட் டாமன், ஜெண்டயா, டாம் ஹாலண்ட், லூபிடா நியோங்கோ, அன்னே ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், சார்லிஸ் தெரோன் ஆகியவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல முக்கிய கதாபாத்திரங்கள் உள்ள இந்த கதையில் யார் என்ன பாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியிடப்படவில்லை. மாட் டாமன் கதையின் நாயகனான ஒடிசியஸ் பாத்திரத்தில் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஹோமர் எழுதிய இந்தக் காவியம் கி.மு. 750-650, சற்றேறக்குறைய 2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது.
இதாகா மன்னரான ஒடிசியஸ், ஹெலனை மீட்க டிராய் நகரில் நடந்த போரில், கிரேக்க படைகளின் உதவிக்குத் தன்னுடைய பெரும் படைகளுடன் சென்றார். மனைவி பெனலோப், மகன் டெலிமாச்சஸ் ஆகியவர்களை நாட்டில் விடுத்துச் சென்ற அவர், பத்து வருடங்கள் நடந்த போரினால் ட்ராய் நகரில் இருக்க நேர்ந்தது. இந்தப் போரில் ஒடிசியஸ் உருவாக்கிய பெரிய மரக் குதிரையால் ட்ராய் நகரை வீழ்த்தி ஹெலனை மீட்டனர் கிரேக்கப் படைகள். மனைவி, மகனைப் பார்க்க நாடு திரும்ப ஆசைப்பட்ட ஒடிசியஸ், சொந்த நாடு திரும்புவதற்கு மீண்டும் பத்து ஆண்டுகள் பிடித்தன. இந்தப் பத்து ஆண்டுகளில் அவர் சந்தித்த சவால்கள், அவற்றை ஒடிசியஸ் எதிர் கொண்ட விதத்தை விவரிக்கிறது ஹோமரின் காவியம்.
மதியை மயக்கும் பழங்கள் கொண்ட தாமரைத் தீவு, நர மாமிசம் சாப்பிடும் ஒற்றைக் கண் அரக்கன் வசிக்கும் தீவு, காற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசன் ஏயோலஸ் தீவு, நர மாமிசம் சாப்பிடும் மனிதர்கள் வசிக்கும் லாஸ்ட்ரிகோன்ஸ் தீவு, தன் வீட்டிற்கு வருபவர்களை அன்புடன் உபசரித்து, விருந்து படைத்துப் பின்னர் அவர்களை மிருகங்களாக மாற்றும் சூனியக்காரி சர்ஸியின் தீவு, இறந்தவர்கள் வசிக்கும் தீவு, கடலில் பயணம் செய்பவர்களை அழகான குரலில் மயக்கி, அவர்களை கடலில் குதிக்கச் செய்யும் அரக்கர்கள் உள்ள கடல் பகுதி, கப்பல்களில் செல்பவர்களை தன்னுடைய ஆறு கைகளால் பற்றிப் புசிக்கும் அரக்கி வசிக்கும் குகை, சூரியக் கடவுளின் தங்கக் காளைகள் இருக்கும் தீவு, கடல் தேவதை கலிப்சோவின் தீவு என்று இவற்றை எல்லாம் தாண்டி தன்னுடைய நாட்டில் நுழையும் ஒடிசியஸூக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
20 வருடங்களாக ஒடிசியஸ் நாடு திரும்பாத காரணத்தால், அவன் மனைவி பெனலோப்பை மணந்து நாட்டை அடைவதற்கு ஒரு கூட்டம் முயற்சி செய்கிறது. இவர்கள் எல்லோரையும் முறியடித்து வெற்றி வாகை சூடுகிறான் ஒடிசியஸ்.
ஒடிசியஸ் வழியில் குறுக்கே நிற்பது ஒற்றைக் கண் அரக்கன், அரக்கி, சூனியக்காரி, கடல் தேவதை, நர மாமிசம் சாப்பிடும் அரசன் மட்டுமல்ல; கடல் அரசன் போசிடான், சூரியக் கடவுள் ஹீலியோஸ் ஆகியோர், ஒடிசியஸ் மற்றும் அவன் படைகளை அழிக்க முயல்கிறார்கள். அவனுடைய உதவிக்கு வருவது கடவுள்களின் தூதர் ஹெர்ம்ஸ், மற்றும் புத்தியின் தெய்வம் ஆதீனா, தெய்வங்களின் அரசர் ஜீயஸ்.
இந்தக் கதை நடக்கும் பகுதிகள் விதவிதமான தீவுகள், கொந்தளிக்கும் கடல், குறுகலான கடல் பகுதிகள், போர்க்களம் என்று பல இடங்கள். வீரம் மட்டுமல்ல மந்திர சக்தியையும் எதிர் கொள்ள வேண்டிய நிலை கதையின் நாயகனுக்கு. ஆனால், எல்லாவற்றையும் தன்னுடைய புத்தி கூர்மையால் ஒடிசியஸ் எவ்வாறு எதிர் கொள்கிறார் என்று விறு விறுப்பாக விளக்குகிறது ஹோமரின் ஒடிஸி.
இந்த படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்கள்?